Monday, September 6, 2010

எண்ணங்கள்

அத்தனைக்கும் ஆசைப்படும் காங்கிரஸ்

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற பழமொழி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கோவையில் கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம், அக்கட்சியினரின் காமராஜர் ஆட்சிக் கனவுகளுக்கு தூபம்போட்டது. அதேசமயம், திமுக.வுடனான கூட்டணியை சுகமான சுமையாகத் தாங்க வேண்டிய கட்டாயம் இருப்பது, தலைவர்களின் அடக்கமான பேச்சில் வெளிப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டை ஒட்டி,கோவையில் பிரத்யேகமாக நடந்த விழாவில் சி.எஸ். நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டுவிழா, சி.எஸ். நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக, கோவை நகரின் பல பகுதிகளில் பெரிய அளவிலான கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல்வேறு கோஷ்டியினரின் வரவேற்பு விளம்பரங்கள், திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக வைக்கப்பட்டிருந்தன. இந்த விளம்பரங்களில் மரியாதைக்குரிய பெரியவர் சி.சுப்பிரமணியத்தைத் தேட வேண்டியிருந்தது.

"விரலுக்கேற்ற வீக்கம்' போல, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் திரண்டிருந்தது. இதையே பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் குழுமிவிட்டதாக, மேடையில் முழங்கியவர்கள் குறிப்பிட்டனர். பல கோஷ்டியினர் இந்தப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தும் கூட, நிகழ்ச்சி நடந்த சிறு மைதானம் நிறைந்தது அவர்களுக்கு பூரிப்பை அளித்தது. ஆனால், வராத காங்கிரஸ் கோஷ்டியினர் குறித்த கவலையே எங்கும் தென்படவில்லை.

கட்சி பொதுக்கூட்ட அழைப்பிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பெயர் விடுபட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி அளித்தது. அதன்விளைவாக, விழாவில் மாநிலத்தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்ததால், இளங்கோவன் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் காரணமாக, ஈவிகேஎஸ்.இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

கோவை மாநகர மேயராக இருப்பவர் ஆர்.வெங்கடாசலம்; முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் தீவிர ஆதரவாளர். பிரபுவுக்கு தகுந்த முக்கியத்துவம் தராததால், இவரும், பிரபு ஆதரவாளர்களும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். விமானநிலையம் சென்று பிரணாப் முகர்ஜியை வரவேற்ற கோவை மேயர், நாணய வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை; பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. மாநகரின் முதல்குடிமகன் தங்கள் கட்சிக்காரராக இருந்தும், அவர் வராதது குறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் தரப்பினரும், தங்கள் தலைவருக்கு உரிய கெüரவம் தரப்படாததால், இந்நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவை தங்கம் (வால்பாறை), விடியல் சேகர் (காங்கயம்), ஆர்.எம்.பழனிசாமி (மொடக்குறிச்சி) ஆகியோரது புறக்கணிப்பு காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் பலர் இருந்தும் பயனின்றி விழா நடந்தது. சிதம்பரம் ஆதரவாளரான எம்என்.கந்தசாமி (தொண்டாமுத்தூர்) மட்டுமே விழாவில் பங்கேற்றார்.

மகாத்மா காந்தியின் ஓர் அறைகூவலுக்காக, வீடு,வாசல், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ராட்டைக்கொடி ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்காக கோஷ்டிகானம் இசைக்கும் அளவுக்கு தாழ்ந்துவிட்டது வேதனைதான்.

இத்தனைக்கும் காரணம், அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லாத மாநிலத் தலைமையே என்றாலும், சி.சுப்பிரமணியம் என்ற மகத்தான மனிதருக்காகவேனும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கோஷ்டி மனப்பான்மையைக் கைவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினர்; காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க பலர் சூளுரைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான கடும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்' என்று உருவேற்றினார்.

இறுதியாகப் பேசிய ப.சிதம்பரமும், "தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இடம்தரும் அரசு அமையும்' என்று பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு என்பதை அவர் சொல்லவில்லை.

திமுக கூட்டணி ஆட்சியை "வலி'ப்படுத்தியதாலேயே ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம், பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், அதிமுக.வை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். மாநில அரசின் நலத்திட்டங்கள் பல மத்திய நிதியால் நடப்பதை சிலர் குறிப்பிட்டனர்.

எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த உத்வேகம் அளித்திருக்க வேண்டிய கோவை பொதுக்கூட்டம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்டது. ஆயினும், காமராஜர் ஆட்சி, மாநில அரசில் பங்கு, கூட்டணி அரசு உள்ளிட்ட முழக்கங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறை வைக்கவில்லை.

அரசியல்கட்சி என்றால் ஆட்சிக்கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால் என்ன செய்ய? ஆளுக்கொரு கோஷ்டி, நாளுக்கொரு சண்டை என்று தொடரும்போது, கனவு நனவாவது எப்படி?
ஆசை இருக்கிறது ஆட்சியைப் பிடிக்க. ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கோஷ்டியாய் பிரிய...
.
நன்றி: தினமணி (சென்னை பதிப்பு; அரசியல் அரங்கம் - 04.09.2010)
.

No comments:

Post a Comment