
புன்னகைப் பூக்கள்
சிலரது புன்னகை
மல்லிகைப் பூக்கள் போல...
அன்பிற்குரியவர்களின் புன்னகை
நம்முடனும் கூடவே வரும்
இனிய நறுமணம் போல.
சிலரது புன்னகை
ரோஜாப் பூக்கள் போல...
தூரத்தில் முள்ளாய்த் தெரிந்தவர்கள்
நெருங்கிப் புன்னகைக்கையில்
பூக்கள் ஆகிவிடுகிறார்கள்.
சிலரது புன்னகை
ஊமத்தைப் பூக்கள் போல...
வாழ்வின் வெறுமையை
சிறு புன்னகையால்
ஒதுக்கும் லாவகம்
கொண்டவர்கள் இவர்கள்.
சிலரது புன்னகை
முல்லைப் பூக்கள் போல...
அரும்புகளைத் தொடுத்தெடுத்து
தூவுவது போல-
பள்ளிப்பருவத்தில்
யாரும் பார்த்திருக்கலாம்.
சிலரது புன்னகை
செம்பருத்திப் பூக்கள் போல...
வாழ்வின் கட்டங்களை
அனுபவித்து முடித்த
முதியவர்களிடம் குசலம்
விசாரித்தவர்களுக்குத் தெரியும்.
சிலரது புன்னகை
தாமரை மொட்டுக்கள் போல...
கன்னத்தில் குழிவிழ
கள்ளமின்றி சிரிக்கும்
மழலைகள் போல...
சிலரது புன்னகை
தாழம்பூ மடல் போல...
எப்போதாவது அரிதாக
இருந்தாலும்
எங்கும் மணக்கும்.
எந்தப் புன்னகையும் அழகானது...
சூழலை மணமாக்குவது...
மனதை குணமாக்குவது...
வாழ்வை மாலை ஆக்குவது...
மனிதரை சோலை ஆக்குவது...
அதிகாலைப் பனி படர்ந்த
தும்பைப் பூக்கள் போல...
..
No comments:
Post a Comment