பின்தொடர்பவர்கள்

Friday, April 9, 2010

மரபுக் கவிதை - 94


புத்தாண்டை நோக்கி... 5
52வது நூற்றாண்டே வருக!

மானிட வயது ஒருநூறு மட்டும்.
மானிடர் அறியார் பூமியின் வயதை!
உலகம் தோன்றிய காலம் முதலாய்
உள்ள சரித்திரம் யாரறிவாரோ?
பரிதியிலிருந்து வெடித்துக் கிளம்பி
பந்தாய் உருண்ட பூமியின் காலம்
பாரதர் அன்றி வேறெவர் அறிவார்?
பார்புகழ் கணிதம் நம்முடைத் தன்றோ?
கிறித்துவின் பிறப்பை முதலாய்க் கொண்டு
கிழிக்கும் கோட்டால் கிழிபடும் காலம்!
முகமது நபியை முதலாய்க் கொண்டு
முடித்திடும் காலக் கணிதமும் தவறே!
பற்பல அரசர் பெயர்களினாலே
பலவித ஆண்டுக் கணக்குகள் உண்டு.
ஆயினும் எதிலும் தெளிவுகள் இல்லை!
அதனால் காலக் கணக்கினில் தொல்லை!
பாரத காலக் கணிதம் மட்டும்
பாரின் வயதைத் தெளிவுடன் சொல்லும்!
எத்தனை ஆண்டு! எத்தனை யுகங்கள்!
எத்தனை கல்பம்! துல்லியக் கணிதம்!
இன்றைய வருடம் கலி யுகத்தினிலே
ஐம்பத் திருநூற்றாண்டின் துவக்கம்!
காலடியாலே மூவுல களந்த
வாமனன் வாழ்ந்த சத்திய யுகமும்,
அரக்கனை வென்று அறத்தினைக் காத்த
அனந்த ராமனின் திரேதா யுகமும்,
அல்லவை நீங்கி- நல்லவை ஓங்க
அறம் பல கூறிய துவாபர யுகமும்,
முடிந்தன; ஆயினும் உலகம் உருளும்-
முதலும் முடிவும் அற்ற வெளியினில்!
நடப்பது கலி யுகம்; நாம் ஓர் அணுவே!
நடக்கும் உலகம்- பற்பல கல்பம்!
இதுவே பாரத காலக் கணிதம்!
இதமாய்க் கூறும் மானிட சரிதம்!
ஐம்பத்திரு நூற்றாண்டினில் நுழையும்
கலியுக உலகைக் களிப்புடன் ஏற்போம்!
வரவேற்றிடுவோம்- புது நூற்றாண்டை!
வல்லவன் இறைவன்! வாழிய உலகம்!
(நாள்: 09.04.1999)
நன்றி: விஜயபாரதம் (16.04.1999)

.

No comments:

Post a Comment