Sunday, April 18, 2010

படக் கவிதை - 02





கூடவே புதையட்டும்!

இனிமேலும்
முட்டுக் கொடுக்க முடியாது!

ஒவ்வொரு நாளும்
ஓரடி மண்ணில் புதையும்
இக்கட்டடத்துக்கு
முட்டுக் கொடுக்க முடியாது.

இரும்புக் கிராதிகளும்
மூங்கில் கழிகளும்
இந்த அடுக்கு மாடி
சரிவதைத் தடுக்க முடியாது.

விதிமுறை மீறி,
நீர்நிலை மேவி,
கட்டிய ஊழல்
கட்டுமானத்துக்கு
எதற்கு முட்டு?
யாருக்கு முட்டு?

அரச இயந்திரத்தை
செல்லரித்துக் கொல்லும்
லஞ்ச லாவண்யத்தை மீறி,

குளங்களை மேடுறுத்தும்
சுயநலத்தை மீறி,

மக்களின் நலம் மீதான
அக்கறையின்மையை மீறி,

யாரை ஏமாற்ற
இந்த முட்டு?
இந்தக் கட்டடம்
புதைவதைத் தடுக்க இயலாது.

விரிசல் விழுந்த கட்டடம்
மண்ணில் புதையட்டும்-
விட்டுவிடுங்கள்!

கூடவே-
லஞ்ச ஊழலும்,
அக்கறையின்மையும்,
சுயநலமும்,
நாசமாய்ப் போன
அரசியலும்...

குறிப்பு: கோவை- அம்மன் குளத்தில், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள், கட்டுமான நிலையிலேயே மண்ணில் புதைந்தன. இதை அடுத்து, இப்பணி நிறுத்தப்பட்டது (05.04.2010; 18.04.2010). தற்போது இக்கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment