Sunday, April 11, 2010

மரபுக் கவிதை - 96


புத்தாண்டை நோக்கி... 3

சித்திரபானு வருகிறாள்...


சித்திரபானுவாய் புதுவடிவெடுத்து
சித்திரைப் பெண்ணாள் வருகிறாள்!
இத்தரை மாந்தர் இன்புற வாழ
இனியவை சொல்லித் தருகிறாள்!

தாய்மொழித் தமிழின் தரத்தை உயர்த்த
தனயரை வருந்தி அழைக்கிறாள்!
ஆயகலைகள் அனைத்திலும் தமிழின்
ஆட்சி நடத்திட விழைகிறாள்!

மண்ணின் மனத்துடன் கூடிய இந்து
மதத்தைக் காத்திடத் துடிக்கிறாள்!
எண்ணிய தெல்லாம் நனவாய் ஆக
ஏற்றிக் கூந்தலை முடிக்கிறாள்!

பாரதநாடு உலகின் ஒளியாய்ப்
பரவிட ஆணை விடுக்கிறாள்!
காரிருள் கழிந்து கதிரொளி மிளிரும்
கனவை உவந்து கொடுக்கிறாள்!

தேசமும் தெய்வமும் ஒன்றென நிறுவி
தேவியவள் வரம் அளிக்கிறாள்!
வேஷம் ஒழிந்திட, நேசம் மலர்ந்திட
வெற்றி மந்திரம் இசைக்கிறாள்!

ஏழ்மை, வறுமை, பசிப்பிணி அகற்றி
ஏற்றம் கண்டிட நினைக்கிறாள்!
தாழ்வுகள் அகற்றி சமத்துவம் காண
தன்னம்பிக்கையை விதைக்கிறாள்!
(நாள்:26.03.2002)
நன்றி: விஜயபாரதம் (26.04.2002)
புத்தாண்டு வாழ்த்தாக அனுப்பப்பட்டது.

1 comment:

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Post a Comment