புத்தாண்டை நோக்கி...2
விதி புதிதாய்ச் செய்திடுவோம்!
இயற்கையெனும் அருட்கொடையின் இனிய வரம் இவ்வுலகம்!
தன் கடமை மறவாமல் தளராமல் உருள்கிறது!
உலகிதனின் கடும் உழைப்பால் உருவாகும் இரவு பகல்!
பயன் கருதா படும் பாட்டால் பருவநிலை மாற்றங்கள்!
கதிரவனை புவி சுற்றும் காலம் தான் ஒரு வருடம்!
புத்தாண்டு பிறப்பதனால் பூரித்து மகிழ்கின்றோம்!
புத்தாண்டாம் இன்றேனும் புதுமையுறச் சிந்திப்போம்!
நாட்களெல்லாம் தினத்தாளாய் நகர்வதுவா புத்தாண்டு?
மானிடரின் வாழ்வுக்கு மதிப்பளிக்கும் செயலென்ன?
சிந்தித்து முடிவெடுப்போம்! சீக்கிரமாய்ச் செயல்படுவோம்!
தனக்காக வாழாமல் தன் கடமை ஆற்றுகிற
புவித்தாயைப் போற்றிடுவோம்! புதல்வர்களாய் நடை பயில்வோம்!
கணமேனும் துஞ்சாமல் கருத்தாக உருளுகிற
நிலமகளின் செயல்பாட்டை நியமமெனக் கொண்டிடுவோம்!
சளைக்காத உழைப்பாலே, சமர்ப்பண நல்நோக்காலே
விளையாத புதுமை எது? விதி புதிதாய்ச் செய்திடுவோம்!
இல்லாமை ஒழியட்டும்! இனிதெங்கும் பரவட்டும்!
பொல்லாங்கு அழியட்டும்! பொது உலகம் மலரட்டும்!
நல்லோர்தம் சிந்தனைகள் நாடெங்கும் சூழட்டும்!
வல்லமையும் பெருகட்டும்! வளமெங்கும் ஓங்கட்டும்!
சித்திரையை வரவேற்கச் செய்திடுவீர் இச்சபதம்!
நித்திரையைப் போக்கிடுவோம்! நியமத்தைக் காத்திடுவோம்!
(நாள்:12.04.2002)
நன்றி: தினமலர் (ஈரோடு - 14.04.2002)
.
No comments:
Post a Comment