பின்தொடர்பவர்கள்

Monday, April 19, 2010

ஏதேதோ எண்ணங்கள்


ஈழ சகோதரர்களுக்கு எனது அஞ்சலி!

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில், இலங்கையில் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்களுக்கு பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழ் சகோதரர்கள் பலியாகியதை மறக்க முடியாது.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு நமது தமிழ்ச் சகோதரர்கள் அடைந்த இன்னல் கொஞ்சநஞ்சமல்ல.

ஆயுதம் அற்ற குடிமக்கள் மீது அபாயமான கொத்து குண்டுகளை வீசி ஆர்ப்பரித்த இலங்கை ராணுவத்தைக் கண்டிக்க தமிழக அரசும் தயாரில்லை; மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசியலின் துயரகரமான நாட்களாக அவை சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டன.

பிரபாகரனின் மரணத்துடன் இலங்கை சிங்கள அரசின் ஆவேசம் அடங்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு முகத்தில் கரி பூசிவிட்டது ராஜபட்ச அரசு. தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளில் மீள குடி புக அனுமதியாமல் நாடகம் ஆடுகிறது இலங்கை அரசு. நாமோ, செம்மொழி மாநாடு ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறோம். மொழி பேசும் மக்களைக் காவாமல், மொழிப்பெருமை பேசி என்ன பயனோ?

காலம் ஈழத் தமிழர்களை வஞ்சித்துவிட்டது. உற்றார், உறவினர், இருப்பிடம், உரிமைகள், சுதந்திரம், செல்வம் அனைத்தையும் இழந்து தவிக்கும் அவர்களுக்கு தமிழகம் என்ன செய்யப் போகிறது?

முள்ளி வாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த எமது சகோதரர்களின் இறுதிக் கணம் எப்படி இருந்திருக்கும்? அந்தத் துயர் உலகில் யாருக்கும் நேரக் கூடாது. இன்னும் காலம் இருக்கிறது, தமிழகம் தன்னைத் திருத்திக் கொள்ள.

இலங்கையில் பலியான எமது சகோதர சகோதரிகளுக்கு, இன்றைய நிலையில் அஞ்சலி செலுத்துவது தான் என் மனதுக்கு ஆறுதல் அளிக்கும். அந்த வகையில், ஈழ ஹைக்கூ - 27 என்ற கவிதைத் தொடர் நாளை முதல் இந்த வலைப்பூவில் வெளியாகிறது.

கவிதைகளால் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்றாலும், சரித்திரத்தை பதிவு செய்வது அவசியம் என்பதால், இக்கவிகளை எழுதி இருக்கிறேன். அதிகாரம் படைத்தவர்களை மட்டுமே தமிழ்க் கவிதை பாடும் என்ற தவறான பதிவை மாற்ற இது என்னாலான முயற்சி.

'உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஹிந்து ஒருவன் பாதிக்கப்பட்டாலும் உன் உள்ளத்தில் வேதனை ஏற்பட வேண்டும்; அப்போதுதான் நீ ஹிந்து ஆவாய்' என்று சொன்ன விவேகானந்தரை மனதில் இருத்தி, பிஜித்தீவு தமிழருக்காக இரங்கிப் பாடிய மகாகவி பாரதியை வணங்கி, இதைத் தொடங்குகிறேன்.
தமிழ் சகோதரர்கள் அடைந்துள்ள இன்னல் தீர இறைவன் நல்வழி காட்டட்டும். அங்கு உயிர் நீத்த நமது சகோதரர்கள் ஆன்மா நற்கதி அடையட்டும்!

No comments:

Post a Comment