Wednesday, September 23, 2009

உருவக கவிதை - 4



உள்ளது உள்ளபடி...

தமிழக முதல்வர்/ தானைத் தலைவர்/இரண்டாம் ராவணர்/டாக்டர் பொரிஞர்/
ஆட்சிக் கட்டில் ஏறிய/அறுபதாம் ஆண்டு விழா.
தமிழகம் எங்கும்/ அரசியல் பெரு விழா.

'பொரி விற்று தலைவரான /பொரிஞர் வாழ்க' என/தெருவெங்கும் பதாகைகள்.

'வாழ்த்த வயதில்லை என்பதால்/ வணங்குவதாக'/நகரமெங்கும்/
தாலியை விற்று/தொண்டர்கள் ஒட்டிய/ பலவண்ண சுவரொட்டிகள்.

மக்கள் பிரதிநிதிகள்/மத்திய, மாநில அமைச்சர்களின்/பத்திரிகை விளம்பர கல்வெட்டுகள்.

ஆலயங்களில்/ சமபந்தி போஜனங்கள்/சிறைச்சாலைகளில்/ கைதிகளின் விடுதலைகள்.
பல அரசுத் துறைகளில்/துவங்கிய/'மக்கள்நலத்' திட்டங்கள்/
அரசு ஊழியர்களின்/ நன்றி அறிவிப்புகள்.

தலைவர் பொறிஞர்/ரகசியமாகக் கட்டிய/ வள்ளி- தெய்வானை சமேத/குமரன் கோட்டத்திலும்/
பாமா- ருக்மணி சமேத/ கண்ணன் தோட்டத்திலும்/லட்சார்ச்சனைத் திருவிழா.
குடும்ப உடன்பிறப்புக்களின்/ சிறப்பு வழிபாட்டுக்காக/நள்ளிரவில் நடை திறப்பு.

ஊர் முழுக்க வசூலித்து/ஆங்காங்கே கொடியேற்றி/கழகப் பொதுக்கூட்டங்கள்.
அருகிலிருக்கும்/மதுக்கடைகளில்/காலியான பாட்டில்கள்.
சில இடங்களில்/எதிர்க் கட்சியினருடன்/தகராறுகள்/வெட்டப்பட்ட கொடிக்கம்பங்கள்.

தொலைக்காட்சிகளில்/சிறப்பு பட்டிமன்றங்கள்/திரையுலக கவிஞர்களின்/
சீட்டுக்கவி நகைச்சுவைகள்.
கூட்டணித் தலைவர்களின்/குதூகல சொல்லாடல்கள்.

குடும்பத் தொலைக்காட்சியில்/மட்டும்/பிரத்யேக நேர்முகம்.
ஆறாம் வகுப்பில்/கணக்கு வாத்தியாரை/கல்லால் அடித்த/சாகசங்கள்.
பதினாறு வயதில்/பக்கத்து வீட்டுப் பெண்/கண் அடித்ததாக/தோரணங்கள்.

பேரணி செல்லும்/சாலைகள் எங்கும்/மின்விளக்கு அலங்காரங்கள்.
எந்தச் சுவரிலும்/கள்ளமின்றிச் சிரிக்கும்/தலைவரின் முகங்கள்.

ராகு காலம் தாண்டிய/இனிய மாலைப் பொழுதில்/வானிலிருந்து ஹெலிகாப்டர்கள்/
பூமழை பொழிய/குடும்பம் மறந்த தொண்டர்கள்/சீருடையில் அணிவகுக்க/
கறுப்புப் பூனைகளும்/கேரள யானைகளும் சூழ/
வெள்ளைக் குதிரை பூட்டிய/சாரட்டு வண்டியில்/
பூபால புரத்திலிருந்து/கோட்டை நோக்கி/பொரிஞரின் பேரணி.

சாரட்டின் இருக்கையில்/கழுத்து சாய்ந்தாலும்/கம்பீரமாகச் சாய்ந்தபடி/
கையை அசைக்கிறார் பொரிஞர் !

கையைத் தாங்கலாக / பிடித்தபடி அருகிலேயே/
வருங்காலத் தளபதி செங்கிஸ்கான்.
இடதுபுறம் துடைத்தபடி/ மத்தியில் அரசோச்சும் பேரன்.

சாலையின் இருபுறமும் / தொண்டர்கள் கரகோஷம்.
சாரட்டில் இருபுறமும் /ஒருவரை ஒருவர்/ முறைத்தபடி.

குறிப்பு:
இந்தக் கவிதை எழுதிய நாள்: 10.09.2006.
இதில் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை;
நான் குடுகுடுப்பைக்காரன் அல்ல.

2 comments:

Unknown said...

NICE....VERY NICE

-R.Velusamy, kovai

வ.மு.முரளி. said...

Thanks for your comments.

Post a Comment