Friday, September 18, 2009

வசன கவிதை - 7



இன்றைய சமுதாயத்தில் காதலின் நிலை

இலக்கியத்தில் காதல் தெய்வ வடிவம்;
இடைப்பட்ட காதல் அன்பு வடிவம்;
இன்றைய காதல் என்ன வடிவம்?

ஏ சமூகமே,
காதல் என்ற பெயரில் மோகம் கொண்டு
ஏன் முகத்தை மூடிக் கொள்கிறாய்?
இருட்டிலே நடக்க வேண்டியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாய்.
இப்போது வெட்க நாளங்கள் விம்மிப் புடைக்கும்போது
முகத்தை திரையிட்டு மூடிக் கொள்கிறாய்.

ஏ சமூகமே,
காதலின் விளைவான காமத்தை
நீ தான் அடிப்படை ஆக்கினாய்.
நாளாக ஆக காதலை போர்வை ஆக்கினாய்.
இப்போது குளிரும் அடிக்கிறது; போர்வையும் கனக்கிறது...

ஆணும் பெண்ணும் கூடுவது காதல் என்று
கண்ணை இறுக மூடிக் கொள்கிறாய்.
ஆனால், விரலிடுக்கு வழியே வெட்டவெளியை தரிசிக்கிறாய்.
ஏ சமூகமே,
கூடுவதென்றால் கூடு; ஊடுவதென்றால் ஊடு.
இதில் ஓரம் கட்டி நின்று ஒப்பாரி வைக்க என்ன இருக்கிறது?

கயல்விழிகளும் கனிமொழிகளும் உருவகப்பட்ட இடத்தில்
'அனாட்டமி'களும் அங்க அளவுகளும் நுழைந்தது எப்படி?
பட்டிமன்றம் நடத்தும் சமூகமே,
உன் பகுத்தறிவை சிறிது பகுத்து அறி.

பிருதிவிராஜர்கள் ஆகத் துடிக்கும் ஜெயச்சந்திரர்கள்
தம் வீட்டில் சம்யுக்தைகள் தோன்றுவதை மட்டும்
தடுக்க முயல்வது ஏன்?

ஏ சமூகமே,
இந்தத் தவறுகளின் ஆணிவேரைத் தேடி
அலைந்தது போதும்.
தவறு காதலில் அல்ல- உன் பார்வையில்.

இதற்கு மேல் எழுத என் பேனா மறுக்கிறது.
இனிமேலும் நடித்துக்கொண்டிருந்தால்,
ஏ சமூகமே, இயற்கை நம்மை மன்னிக்காது.
குறிப்பு: பரிசு பெற்ற கவிதை.
கோவை- போத்தனூரில் 'நண்பர்கள் மனமகிழ் மன்றம்' நடத்திய கவிதைப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற கவிதை (நாள்: 19.07.1992 )

No comments:

Post a Comment