Saturday, September 12, 2009

மரபுக் கவிதை - 8



மரத்தினை வெட்டாதீர்

இயற்கை என்பது இறைவன் ஆலயம்
அழித்திடல் நன்றாமோ?
செயற்கை உலகிலே வாழும் மனிதரே
சிந்தனை செய்திடுவீர்!

மரங்கள் உதவியால் மழைகள் பொழியுது
மறந்திடல் நன்றாமோ?
சிரத்தை அறுத்த பின் வாழ்ந்திட முடியும்
என்றெவர் கூறிடுவார்?

அறிவு ஆறினைப் பெற்ற மனிதனே
அரண்அது மரமதுவே!
உரித்த உடலினில் உயிர் தங்கிடுமோ?
உணர்ந்திடு இயற்கையினை!

கண்ணுக்கினியன காணுதல் நன்று
கண்டிடு மரங்களினை!
கண்ணைப் பேணிடும் இமைகளைப் போல
காத்திடு மரங்களினை!

மரத்தை வெட்டிடும் கோடரி உடனே
மண்ணுக்குள் புதையட்டும்!
வரத்தை அருளிடும் வருண தெய்வமே
வந்திடுவார் உடனே!
நன்றி: கோகுலம் - குழந்தைகள் மாத இதழ்
(1989, டிசம்பர் )

No comments:

Post a Comment