பின்தொடர்பவர்கள்

Thursday, September 3, 2009

சுதந்திர தினக் கவிதை


வீறுடன் சபதம் ஏற்போம்!

அந்தமான் சிறையின் சுவர்களில்
காது வைத்துக் கேளுங்கள்...
அதில் அடைபட்டுக் கிடந்த
ஆன்மாக்களின் அழுகுரல் கேட்கும்.

செல்லுலார் அறைகளில்
நகத்தால் பிறாண்டி அவர்கள்
எழுதிய கண்ணீர் வரிகளைப்
பார்த்தாலே உப்புக் கரிக்கும்.
சிறைக் கம்பிகளில் தேய்ந்த
ரேகைகள் பளிச்சிடும்.

கோவை, பாளையங்கோட்டை,
அலிப்பூர், மாண்டலே...
சிறைகளின் பெயர்கள் நீளும்...
அந்த தவபூமிகளில் ஆகுதியான
வீர மறவரின் பெயர்கள்
காற்றில் எதிரொலிக்கும்.

தியாகியர் உடைத்த கற்களில்
கட்டப்பட்ட கருவூலகக்
கட்டடங்களில் அவர்களது
ரத்தவாடை வீசும்...
தேசம், தேசம் என்று
நேசமாய்ப் பேசும்.

அருங்காட்சியகத்திலுள்ள
செக்கில் இருந்து
வியர்வை வடியும்...
வெள்ளையன் வீசிய சாட்டையின்
வீறலில் மனம் வலிக்கும்.

நாட்டிற்காகப் போராடிய
அந்த அடிமைகளை
இன்றாவது நினையுங்கள்...
நடிகையின் நேர்காணலை
நீங்கள் ரசிப்பதற்காக
அடித்தளமானவர்கள் அவர்கள்.

நீங்கள் பார்க்கும்
நகைச்சுவை சேனலில்
விளம்பர இடைவேளை
விடும் போதேனும்,
அவர்களை நினையுங்கள்.

வருங்காலத் தலைமுறைக்காக
உன்மத்தமாகப் போராடிய தியாகிகளை
சில நொடியேனும்
உண்மையாக நினையுங்கள்...

அப்போது,
அவர்களது அழுகுரலும்
ரத்தவாடையும்
வியர்வையும்
கண்ணீர்த் துளிகளும்
யாருக்காக எனப் புரியும்.

நன்றி:
தினமலர் (கோவை, சென்னை) நாளிதழில் வெளியானது (15.08.2009)
பரிசு ரூ. 500 பெற்றது.
.

1 comment:

Post a Comment