பின்தொடர்பவர்கள்

Thursday, September 17, 2009

வசன கவிதை - 6இது தான் விதி

விளையும் நெல்மணி ஒவ்வொன்றிலும்
அதை உண்ணுபவர் பெயர்
எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவரை ஒருவர் சந்திப்பது கூட
நிர்ணயிக்கப்பட்டதாகவே நிகழ்கிறது.

தாயும் சேயும்
கணவனும் மனைவியும்
குருவும் சிஷ்யனும் -
எல்லா உறவுகளும்
ஜனனத்தின்போதே தீர்மானிக்கப்படுகின்றன.

வேடர்களுக்கு கொக்குகளும்
கொக்குகளுக்கு மீன்களும்
மீன்களுக்கு புழுக்களும்
காத்திருக்கின்றன.

கதிரவன் உதித்து மறைவதும்
நிலவு தேய்ந்து வளர்வதும்
அலைகள் சீறி அடங்குவதும்
பூக்கள் மலர்ந்து துவள்வதும்
நதிகள் வழி கண்டடைவதும் -
இயற்கையின் பெரும் விதி;
இன்றும் அன்றும் என்றும் தொடர்வது.

ஒவ்வோர் உயிரின் பிறப்பும் இறப்பும்
விதி விளைத்தபடி
தொடர்ந்து விளைகிறது.

அவ்வளவு ஏன்?
இந்தக் கவிதையே
என்னால் எழுதப்படவும்
உங்களால் படிக்கப்படவும்
விதிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(12 ஜனவரி 2007).

No comments:

Post a Comment