Saturday, September 12, 2009

உருவக கவிதை - 2



புள்ளி ராஜாக்களின் பரமபதம்

மேடு பள்ளமானது மட்டுமல்ல-
வாழ்க்கையே பரமபதம்.

உருட்டும் தாயக்கட்டை கொடுக்கும் புள்ளிகள்
ஏணியில் ஏற்றலாம்;
பாம்பையும் தீண்டலாம்.
புள்ளிகளின் முடிவுக்காக ஆர்வத்துடன் உருட்டுபவன்
பார்வையாளனே தவிர வேறல்லன்.

ஆட்டத் துவக்கத்தில் ஒற்றைத்தாயம்
இழுவையாவது சகஜம்.
பாம்புக்கு ஒற்றைக்கட்டம் முன்னிருக்கையில்
வேண்டாமலே விழும் ஒற்றைத் தாயம்.

பலமுறை ஏணி ஏறி, பாம்புக்கடி பட்டு
இலக்கை எட்டுகையில், இடறுகிறது தாயக்கட்டை
இடறுவதே தாயக்கட்டை.

தாயக்கட்டையுடன் மாயம் பேசும் சகுனிகளாலும்
பரமபதத்தை அடைய முடியாது.
எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும்
சகுனம் வைக்காது.

தாயம் பிறழ்ந்ததால் மகுடம் இழந்த
தர்மன் எக்களிக்கலாம்.
தாயக்கட்டை உருளும் ஒலி
தர்மனின் சிரிப்பா?
சகுனியின் பிதற்றலா?

சகுனிகளும் தர்மர்களும் எத்தனை நாட்களுக்கு
மவுன பாஷையில் கெக்கலி கொட்டுவது?
புள்ளி ராஜாக்களின் புலம்பலுக்கு
புள்ளி எப்போது?

துவாதசியும் வந்தாயிற்று
பாம்புக்கடி சுகமாகி விட்டது
சறுக்குமரமாகிவிட்ட ஏணியைக் காண
நடுக்கம் மிகுகிறது.

வைகுண்ட வாசலில் சங்குகள் முழக்கம்.
அடுத்த முறை
இதே இடத்தில்... இதே நேரத்தில்... இதே போல...
பரமபதம் தொடரும்.

மேடுபள்ள வாழ்வில் அதுவரை
பயணிக்க வேண்டியது தான்.

No comments:

Post a Comment