கங்கா தேவி சலசலத்துக்கொண்டு ஓடுகிறாள். கீழே தரையும் கூழாங்கற்களும் வழுக்குப் பாசியும் பளீரிட- தெளிவான, கண்ணாடி போன்ற, அலட்டல் இல்லாத நீரோட்டம்; இடையிடையே மீன்கூட்டம்.
கீழ்வானில் முழுவட்டத்துக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சந்திரன். அதன் பொற்கிரணங்கள் பட்டு தங்கமாய் ஒளிரும் பஞ்சு மேகங்கள்-
நிலா நகர்ந்து கொண்டிருக்கிறது.
சுவர்க்கோழிகளின் ரீங்காரம். மற்றபடி மென்மையான நிசப்தம்; அவ்வப்போது ஒலிக்கும் மயிலின் அகவல்.
தென்னங்கீற்றுகள் 'ஸ்ஸோ'வென உகைய, அதைத் தாலாட்டும் தென்றல் மேனியை மெதுவாக வருடிப் போகிறது. ஒரு இதமான வெப்பம்; மிதமான குளிர்ச்சி.
அந்த மங்கிய வேளையில், ஒரு சாம்பல் குடிசை- பழங்காலப் பர்ணசாலை போன்ற வடிவிலான கீற்றுக் கோபுரம். சுற்றிலும் பத்துப் பதினைந்து தென்னம்பிள்ளைகள்; ஒரு வாழைக்கன்று, மாமரம், இத்யாதி.
குடிசையின் ஓரம், நதி நடந்து செல்லும் வாய்க்கால்; அதன் இரு புறமும் வண்ண வண்ணப் பூக்கள் செறிந்த மலர்ச்செடிகள். அவற்றில், நாளை மலரத் துடிக்கும் மொட்டுகளின் இளமைத் துடிப்புகள்; மலர்ந்து வாடி, மடிந்து போயும் மணம் பரப்பும் இதழ்கள்.
வாழ்வின் நிலையாமையைப் போதிக்க வந்த காட்சிகளாய்- நிலத்தின் செழுமையால் வனப்பைச் சொரியும் செடிகள், கொடிகள், மரங்கள். காற்றினிலே மிதந்து வரும் வாசனையில் இலவச இணைப்பாய் மூலிகைகளின் தோய்தல். மரங்களில் கொத்துக் கொத்தாய்ப் பழங்கள்.
மேலே முகில்கள் நிலவுடன் ஊடலும் கூடலுமாய் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. லேசான பனித் துகள்கள் படர ஆரம்பிக்க, இந்தச் சூழலில்-
அவன் உட்கார்ந்திருக்கிறான்; பத்மாசனம்; இரு கால்களையும் பின்னி, முதுகு நிமிர்த்தி, நெஞ்சு விறைக்க, கைகள் முழங்காலில் அழுந்த, கண்கள் நாசி நுனியில் நிலைத்திருக்க-
அந்த கீற்றுக் குடிசையின் வாயிலின் அருகே உள்ள ஒரு கருங்கல்லில் அவன் யோக நிலையில் அமர்ந்திருக்கிறான். கீழே அருகம்புல் மெத்தை. உதடுகளில் தன்னிச்சையான மந்திர உச்சாடனம்.
'சலசல'வெனும் சத்தம்,
மிளிரும் திங்களின் நிலை,
வருடும் தென்றல்,
பரவும் நறுமணம்,
கனிகளின் தீஞ்சுவை-
இவற்றையெல்லாம் கடந்து, தன்னைச் சுற்றியுள்ள வட்டத்தை மறந்து,
சுகமாக, ஒரு சவமாக இருக்கிறான்.
ஓஒ இது தான் தியானம்!
சுற்றத்தால் பாதிக்கப் படாமல், தன் சுயமூலத்தின் ஆணிவேரை தேடிய நெடும்பயணம்.
தன்னையே அர்ப்பணித்து, அவனுக்குள் அவனே முழுதாக நுழைந்து, எதையோ நாடுகிற கடும் பயணம்.
ஓஒ இது தான் தவம்!
''பருவங்கள் பட்டுப் பட்டுப் போகும். ஆனால், பற்றை விட்டவனுக்கு முன் விதியே விட்டுப் போகும்''
என்னுள்ளும் ஏதோ ஒரு மூலையில் அசரீரி அறைய,
நானும் தேட ஆரம்பிக்கிறேன்; என்னை இயற்கைக்குக் கொடுத்து ஊடுகிறேன்.
கங்கை ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
நன்றி: ஓம் சக்தி
(ஆகஸ்ட்1999 )
No comments:
Post a Comment