பின்தொடர்பவர்கள்

Tuesday, September 22, 2009

மரபுக் கவிதை - 17ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

நம்மை நாமே நமக்காய் ஆளஅமைத்தது தான் சட்டம்- நாம்
தம்மைத் தாமே கட்டுப்படுத்த உருவாக்கிய வட்டம்.
விதிமுறை கூறி வழிப்ப்டுத்துவதே சட்டத்தின் கடமை- அந்த
விதிகளை மீற மனிதர்கள் முனைவது விபரீத மடமை.

சட்டம் என்பது புத்தக அளவில் இருட்டறை என்பார்கள்- அதில்
பட்டம் பயின்ற வல்லுநர் வாதம் ஒளியேற்றும் விளக்கு.
சட்டம் கூறும் விதிகளை மக்கள் கடைப்பிடித்திட வேண்டும்- இதை
கட்டாயமென நடைமுறைப்படுத்த காவலர்கள் வேண்டும்.

சட்டம் சொல்லும் விதிமுறை கற்ற வக்கீல் ஒருபக்கம்- அந்த
சட்டம் காக்க கடுமையைக் காட்டும் காவலர் மறுபக்கம்.
ஒரு நாணயத்தின் இரு புறம் போல வக்கீல், காவலர்கள்- இணையாய்
இருந்திட வேண்டும் என்பது நமது முன்னோரின் திட்டம்.

குற்றம் தடுத்து குடிகளைக் காக்க இருவரும் அவசியமே- இதை
சற்றும் மறவா தகைமை வளர்ந்தால் சங்கடம் நிகழாதே!
சமுதாயத்தின் நிலை பிறழாது காப்பது சமநீதி- இதை
சமைத்துத் தருவோர் சண்டைகளிட்டால் சாய்ந்திடும் அறநீதி.

சென்னை நீதி மன்ற நிகழ்வுகள் சொல்லும் சேதி இது- தான்
என்னும் அகந்தை அழிந்தால் எங்கும் நிலைக்கும் நீதியது.
நன்றி: விஜயபாரதம்
(16.03.2009)

No comments:

Post a Comment