Saturday, September 26, 2009

மரபுக் கவிதை - 20



கொட்டடா முரசு!

திக்கெட்டும் கொட்டடா முரசு - எங்கள்
தேசமே உலகுக்கு குருவென்று கொட்டு!

தத்துவ போதனை வேண்டின் -எங்கள்
தாயான பாரத நாட்டிடம் வேண்டு!
சத்திய தேவனைக் காண -எங்கள்
சாத்விகப் போர்முறை கண்டு வணங்கு!

அன்பதே உயிரென்று சொன்ன -எங்கள்
அச்சுத புத்தனைப் பார்த்திடும் உலகம்
வன்மையால் உலகினை வெல்லும் - எண்ணம்
கொண்டவர் நாணிட கொல்லெனச் சிரிக்கும்!

விண்ணியல், கணிதத்தில் தெளிவு - வேண்டின்
வித்தகர், ஞானியர் பலரிருக்கின்றார்!
கண்இமை காப்பது போலே - மக்கள்
நல்வழி வாழ்ந்திட உதவிடும் வேதம்!

உடலினைச் செம்மையாய் பகுத்து - அதன்
உள்ளுள நோய்களைப் பலவாறு வகுத்து,
திடமிகு மருந்துகள் கொண்டு - ஆயுர்
வேதமே நோய்களைப் பொடிப் பொடியாக்கும்!

கவிமழை பொழிந்திடு மொழிகள் - நல்ல
காவியம் படித்திட விரும்பிடின் வருக!
புவியகம் முழுதிலும் புகழும் - ராம,
பாரத சரித்திரம் பண்புறப் பருக!

வேறென்ன வேண்டுமோ உமக்கு? வெற்றி
கீதம் இசைத்திடும் சமயமும் எமதே!
நீறன்ன உலகினில் சுடரும் - ஆத்ம
நித்திய ஜோதியைப் பெற்றிடு உலகே!

No comments:

Post a Comment