வர வேண்டாம் பாரதி...(
இன்று பாரதி நினைவு நாள்)
பாரதி, நீ இன்று வரத் தக்க சமயமில்லை. பரிதவிக்கும் சோகத்தில் பதைபதைக்கும் மக்களுக்கு உன் வரவுக்கு முகமன் கூறும் வலுவில்லை- இது தக்க சமயமில்லை. சோற்றுக்குத் தாளமிடும் இந்தியனின்
ஓட்டுக்கு ஓலமிடும் அரசியல்வாதிகள்;
பஞ்சடைத்த கண்களுடன் கை தட்டும் உருவங்கள்; பகடையாய் உருளும் கொள்கைகள். பாரதி, இது தக்க சமயமில்லை.திரையில் தெரியும் நாயகனுக்கு தீபம் ஏற்றும் ரசிகர் கூட்டம்;மேடையில் முழங்கும் ஜாதித் தலைவனின் காலில் மிதிபடும் கண்ணீர்த் துளிகள். இது தக்க சமயமில்லை.திண்ணை வேதாந்தம், திராவிடத் தெருக்கூத்து, ஜனநாயக வியாபாரம், விரிசல் விழுந்த மனங்கள்.இன்னும் எப்படி இந்தியாவை வர்ணிப்பது? வேண்டாம் பாரதி, இது தக்க சமயமில்லை. ஒளிமயமான பாரதத்தைக் கண்ட கனாக் கவிஞனே! விதிகளைக் கவியாக்கிய வித்தகனே! இந்த விரக்தியின் விளிம்புகளை தரிசித்து ஏன் உன் கண்களை சிவக்கச் செய்ய வேண்டும்? பொறு பாரதி, பொறு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த சேற்றுச்சகதிக் கும்பலுக்கும் தன்னம்பிக்கை வரும். திண்ணை வேதாந்தத்துக்கும் திருட்டு வியாபாரத்துக்கும் என்ன வித்தியாசம்? அவசரப்படாதே பாரதி, அதுவரை பொறு.எங்களது இப்போதைய தேவை தன்னம்பிக்கை தான். பிறகே உன் நன்னம்பிக்கை.
No comments:
Post a Comment