தேனீக்களின் நகரம்
தாரக மந்திரம் தரமெனக் கொண்டு
தரணியை ஈர்க்கும் தளரா மனங்கள்.
அந்நியச் செலாவணி ஈட்டிடப் பிறந்த
அற்புதமான தொழில் முனைவோர்கள்.
உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்று
திருப்தியில் திளைக்கும் தொழில் ஆளுநர்கள்.
புதிய முயற்சியில் துணிந்து இறங்கி
சாதிக்கின்ற புரட்சிக்காரர்கள்.
புதுப்புது வடிவில் பின்னலாடைகளை
உற்பத்தி செய்யும் நவீன பிரம்மாக்கள்.
குறித்த காலத்தில் சரக்கை அனுப்ப
உணவும் உறக்கமும் மறந்த சித்தர்கள்.
ஒரு நாளுக்கு 24மணிநேரம்
போதாமல் உழைக்கும் 'தேனீ' மனிதர்கள்.
கிளைத்தொழில் பலவும் செழித்து வளர்ந்திட
கூட்டணி அமைத்த சுதேசி வீரர்கள்.
அரசு உதவியை எதிர்பார்க்காமல்
தாமே வளர்ந்த தகைமையாளர்கள்.
ஏற்றுமதியில் ஏற்றம் பெறலாம்
என்பதைச் சொன்ன banian மக்கள்.
'வேலைக்கேற்ற ஆட்கள் தேவை'
விளம்பரம் செய்யும் வித்தியாசப் பிறவிகள்.
மாற்றம் எதையும் சுவீகரித்து
மாற்றிக் கொள்ளும் திறமையாளர்கள்.
சரிந்து கிடந்த பொருளாதாரம்
திரும்பிடச் செய்த திருப்பூர்க்காரர்கள்!
நன்றி: சுதேசி செய்தி
ஏப்ரல் 2003
No comments:
Post a Comment