ஏற்றம் காண்போம்!
அஞ்சனை பெற்ற மைந்தன் அனுமனின் பாதம் பற்றி,
வஞ்சனை செய்யும் தீயோர் வன்மையை வெல்லுவோம் நாம்!
லஞ்சமும், நியாயமற்ற லாபமும் வாழ்க்கையென்று
நஞ்சிடும் நேர்மையற்ற நரிகளை வெல்லுவோம் நாம்!
'வித்தக அரக்கன் வைத்த வினையெனும் தீயைக்கொண்டு
மொத்தமாய் எதிரி நாட்டை முற்றிலும் நாசம் செய்த
சித்தனே' என்று பாடி, சிந்தையை ஒருமையாக்கி,
நித்தமும் நாட்டைக் காக்கும் நிலைகளாய் வாழுவோம் நாம்!
அண்ணலை இதயம் ஏத்தி, அடிமையாய் சேவை ஆற்றி,
நண்ணிய ராமதூதன் நாமத்தை நாளும் சொல்லி,
விண்ணியல் வாயு மைந்தன் விரைவினை நாமும் பெற்று,
எண்ணிய செயலில் எல்லாம் ஏற்றமே என்றும் காண்போம்!
நன்றி: விஜயபாரதம்
(22.12.2000 )
No comments:
Post a Comment