Tuesday, September 22, 2009

புதுக்கவிதை - 15



ரீங்காரம்

'அப்படி என்னய்யா தூக்கம்?'
பொருமினாலும்
வெடிக்க மனம் வரவில்லை.
மீண்டும் மீண்டும் சரிந்த உடலை
மீண்டும் மீண்டும் நிமிர்த்துகிறது
பரிதாப உணர்வு.

ராத்தூக்கம் இல்லையோ?
பசி மயக்கமோ?
வேலை அதிகமோ?
பயணக் களைப்போ?
அலைச்சல் அதிகமோ?
யார் தூங்கவில்லை பேருந்தில்?

இருந்தாலும் மனித மனம்
ஒரேமாதிரி இருப்பதில்லை.
திடீரெனக் கொப்புளித்த
கோபத்தில் விலக,
சட்டெனச் சாய்ந்து அவன் திடுக்கிட,
மீண்டும் எழுகிறது பரிதாப உணர்வு.

காரணம் இல்லாமலில்லை.
நேற்றைய பேருந்துப் பயணத்தில்
அருகில் அமர்ந்தவர் கேட்டது
இன்னும் காதுகளில்
ரீங்கரிக்கிறது:
'அப்படி என்னய்யா தூக்கம்?'

No comments:

Post a Comment