பின்தொடர்பவர்கள்

Thursday, September 10, 2009

வசன கவிதை - 3நிழற் பின்னல்

நிழல் விழாத ஜடமில்லை.
ஆர்ப்பரிக்கும் அருவியின் சாரலிலும்
நிழல் தெறிக்கிறது.
சுழன்றாடும் தீயின் புகையிலும்
நிழல் நெளிகிறது.
யார் நடந்தாலும் கூட வரும் நிழல்
காரிருளில் காணாமல் போகிறது.

நிழலாவது யாது?
ஒளியின் பிம்பமா?
சுடரும் பல வண்ணங்களும்
நிழலுருவில் கருமையாய்
சமத்துவம் போதிக்கின்றன.
நிழல் மாயத் தோற்றமா?

காற்றுக் குமிழி வாழ்வில்
நிழலின் இருப்பிடம் எது?
ஒளியுள்ள இடமெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இருளின் பிள்ளையா நிழல்?

எழுத, எழுத... எழுதுகோலின் கீழ்
நிழல் எழுதுகோலும்
எழுதியபடி வருகிறது.
நிஜ எழுதுகோலும் நிழல் எழுதுகோலும்
நிகழ்த்தும் பின்னலே கவிதையா?

மனித வாழ்வும் கவிதை போலத் தானா?
நிழல் தொடர்கிறது...
நிஜம் தவிக்கிறது.

No comments:

Post a Comment