Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Wednesday, January 20, 2010

மரபுக் கவிதை - 69


தினமலரின் கொள்கை

வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும்
சேர்ந்தால் தான் செய்தி -அது
கிழக்கு வெளுக்கும் முன்னே கிடைத்தால்
மக்களுக்கும் திருப்தி!

உள்ளூர், வெளியூர், தேசம், உலகம்
உணர்த்துவதே செய்தி - அது
உடனே கிடைத்து அறிவு வளர்ந்தால்
உருவாகும் மகிழ்ச்சி!

நாட்டுநலன் தான் முக்கியம் என்று
நாட்டுவதே செய்தி - அது
வாட்டம் மிகுந்த ஏழைகள் துயரைத்
தீர்த்தால் மிக திருப்தி!

பொன்விழா கண்ட தினமலருக்கு
இவை தானே கொள்கை- இதைக்
கண்ணென வழங்கிய டி.வி.ஆரின்
நினைவே நம் பெருமை!

நன்றி: தினமலர் (ஈரோடு - 23.09.2001)
தினமலர் (கோவை, சென்னை - 21.12.2008)
.

Tuesday, October 13, 2009

வசன கவிதை - 15


முகவரி அறிவோம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றிடவில்லை இந்த
பெருமை மிகு சுதந்திரத்தை!

தீரன் சின்னமலையும்
ஜான்சிராணியும்,
கட்டபொம்மனும்,
தாந்தியாதோபேயும்,
திப்பு சுல்தானும்
அடித்த முதலடி
மறந்திட முடியுமா?

செக்கிழுத்தோம்...
குண்டடி பட்டோம்..
தூக்கு மேடையில்
துணிந்து ஏறினோம்!

உத்தம் சிங்குகளும்,
மதன்லால் திங்க்ராக்களும்,
வாஞ்சி நாதன்களும்,
பகத் சிங்குகளும்
அந்நியனை அலற வைக்கும்
அமரச் சமரில்
ஆகுதி ஆகினர்!

வெஞ்சிறையில் வீழ்ந்த
சாவர்க்கரும்,
திலகரும்,
தடியடி பட்ட
லஜபதிராயும்
ரத்தம் சிந்தாமலா - நாம்
சுதந்திரர் ஆனோம்?

நேதாஜியின்
தேசிய இராணுவம்
வடகிழக்கில்
சுதந்திரம் கண்டதை
மறைக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

சும்மா வரவில்லை
சுகமான சுதந்திரம்!
ஆருயிர் ஈந்த
அரும்பெரும் தியாகியர்
சரித்திரம் மறப்பது
சம்மதம் தானா?

அஹிம்சையின் பெயரில்
சுதந்திரப் போரை
மூடி மறைத்தால்
முகவரி இழப்போம்!
பொன்விழா கண்ட பூரிப்பு போதும்...
இன்றே நமது முகவரி அறிவோம்!
நன்றி: தினமலர் (ஈரோடு, சேலம்)
(15.08.2004)

Friday, October 2, 2009

மரபுக் கவிதை - 25



உயிர்த் துடிப்பு

எளியதை வலியது வெல்லும் - இதுவே
இயற்கையின் தத்துவமாகும் - வெட்டுக்
கிளியினை உண்ணும் பல்லி - இதுவும்
பூனையின் உணவாய் ஆகும்!
இதுவே உயிரின் துடிப்பு - இதனை
உணர்வது வாழ்வின் படிப்பு - உலக
விதியே 'வலியது வாழும்' - என்னும்
விதமாய் அமைவது ஆகும்!

நன்றி: தினமலர் (ஈரோடு)
(படம் சொல்லும் கவிதை - சிட்டி ஸ்பெஷல் - 06.07.2002)

Thursday, September 3, 2009

சுதந்திர தினக் கவிதை


வீறுடன் சபதம் ஏற்போம்!

அந்தமான் சிறையின் சுவர்களில்
காது வைத்துக் கேளுங்கள்...
அதில் அடைபட்டுக் கிடந்த
ஆன்மாக்களின் அழுகுரல் கேட்கும்.

செல்லுலார் அறைகளில்
நகத்தால் பிறாண்டி அவர்கள்
எழுதிய கண்ணீர் வரிகளைப்
பார்த்தாலே உப்புக் கரிக்கும்.
சிறைக் கம்பிகளில் தேய்ந்த
ரேகைகள் பளிச்சிடும்.

கோவை, பாளையங்கோட்டை,
அலிப்பூர், மாண்டலே...
சிறைகளின் பெயர்கள் நீளும்...
அந்த தவபூமிகளில் ஆகுதியான
வீர மறவரின் பெயர்கள்
காற்றில் எதிரொலிக்கும்.

தியாகியர் உடைத்த கற்களில்
கட்டப்பட்ட கருவூலகக்
கட்டடங்களில் அவர்களது
ரத்தவாடை வீசும்...
தேசம், தேசம் என்று
நேசமாய்ப் பேசும்.

அருங்காட்சியகத்திலுள்ள
செக்கில் இருந்து
வியர்வை வடியும்...
வெள்ளையன் வீசிய சாட்டையின்
வீறலில் மனம் வலிக்கும்.

நாட்டிற்காகப் போராடிய
அந்த அடிமைகளை
இன்றாவது நினையுங்கள்...
நடிகையின் நேர்காணலை
நீங்கள் ரசிப்பதற்காக
அடித்தளமானவர்கள் அவர்கள்.

நீங்கள் பார்க்கும்
நகைச்சுவை சேனலில்
விளம்பர இடைவேளை
விடும் போதேனும்,
அவர்களை நினையுங்கள்.

வருங்காலத் தலைமுறைக்காக
உன்மத்தமாகப் போராடிய தியாகிகளை
சில நொடியேனும்
உண்மையாக நினையுங்கள்...

அப்போது,
அவர்களது அழுகுரலும்
ரத்தவாடையும்
வியர்வையும்
கண்ணீர்த் துளிகளும்
யாருக்காக எனப் புரியும்.

நன்றி:
தினமலர் (கோவை, சென்னை) நாளிதழில் வெளியானது (15.08.2009)
பரிசு ரூ. 500 பெற்றது.
.