
Sunday, February 28, 2010
உருவக கவிதை - 34
முட்டுச்சந்து
கால் போன போக்கில்
நடந்தாலும் சிலநேரம்
வீடு வந்துவிடுகிறது.
தெளிவான முகவரியுடன்
தேடினாலும் சிலநேரம்
முட்டுச்சந்துகளில்
தத்தளிக்க வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே சிலநேரம்
காதை விறைக்கும்
தெருநாய்கள்.
சாலைகளின் அலைகடலில்
பாய்மரம் கிழிகிறது.
துடுப்பு வலித்து
துவண்டுபோகிறது
வாழ்க்கை.
கால் போன போக்கில்
கடந்துபோகிறது -
செல்லவேண்டிய
இலக்கு.
.
Saturday, February 27, 2010
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 76
வற்றி விடுமோ?
இன்னூற்று வற்றிவிடுமோ? இந்த
இதயத்தில் பீறிடு நல்
இனிமை மிகு கவிதைகளின்
இன்னூற்று வற்றிவிடுமோ?
மண்நீட்ட மனிதரோ நான்? இந்த
மண்ணகத்து மனிதரிடை
மணியான எம் புலமை
மண்ணுள்ளே மடியுமாமோ? அன்றி
தன்னோக்கு வடிவு தாமோ? இந்தத்
தடைகளைத் தகர்த்தெறியத்
தயங்காத மொழிக்கோவைத்
தன்மையின் தரகு தாமோ?
விண்ணாக்க விதிகள் தாமோ? இந்த
விந்தைக்கும் விந்தை மிகு
வியப்பான சொல்லமுத
விண்ணூற்று விளைவு தாமோ? எனின்
நன்னூற்றுப் புலவர் தாமே - இந்த
நயமிக்க கேள்விகளின்
நலமான பதில்கள் சொலி
நன்னூக்கம் நல்குவீரே!
.
Friday, February 26, 2010
இன்றைய சிந்தனை

புதுக்கவிதை - 77
நெருப்பு
வெளிநாட்டுப் பயணங்களில்
பிரதமர்...
கலையுலக பாராட்டு விழாக்களில்
முதல்வர்...
அரசியல் லாவணிகளில்
கட்சிகள்...
விண்ணைத் தொடும்
விலைவாசி உயர்வால்
அடிவயிற்றில் நெருப்புடன்
மக்கள்.
.
Thursday, February 25, 2010
இன்றைய சிந்தனை

உருவக கவிதை - 33
நீரூற்றுப் பேனா
பாவாடை, தாவணி போல
வழக்கொழிந்துவிட்டது
நீரூற்றுப் பேனா.
எங்கு பார்க்கினும்
சுடிதார் போல
பந்துமுனைப் பேனாக்கள்.
கையை மையாக்கும்,
அடிக்கடி முனை உடையும்
சிக்கல் இல்லை எனினும்,
எழுத்தின் அழகுக்கு
நீரூற்றுப் பேனாவே உத்தமம்.
தேர்வுகளிலும் கட்டாயமாகிவிட்டது,
கல்லூரிகளில் இயல்பாகிவிட்ட
பந்துமுனைப் பேனா.
எனினும் ஒருகாலத்தில்
தடை விதிக்கப்பட்டிருந்த
குப்பை தானே இது?
.
Wednesday, February 24, 2010

சான்றோர் அமுதம்
இந்தியாவை நகரங்களில் அல்ல, அதன் கிராமங்களில் தான் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதையே எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு உணவும் உடையும் போதுமான அளவுக்குக் கிடைக்கிறதா என்றும், வெய்யிலிலும் மழையிலும் ஒதுங்க ஒரு கூரையாவது உண்டா என்றும் நாம் ஒருபோதும் நின்று விசாரித்ததில்லை.
இந்தச் சீரழிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? எல்லோரும் இன்னலின்றி வாழக்கூடிய அளவுக்கு இந்திய கிராமங்களை உருவாக்குவதே நாட்டை நேசிக்கும் அனைவருடைய பணி.
-மகாத்மா காந்தி
(நன்றி: எண்ணங்களின் சங்கமம் - 2008; பக்:250 )
நண்பரும் ஓவியருமான, 'எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர்
திரு. ஜெ. பிரபாகர் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.
.
வசன கவிதை - 47
காணாமல் போன சந்தை
மலையெனக் குவிந்திருக்கும்
மளிகைப்பொருட்கள்;
கூறுகளாக காய்கறிகள்;
கூடைகளில் பழவகைகள்;
வண்ணங்களின் சங்கமமாய்
துணிரகங்கள்;
உப்பு முதல் உலக்கை வரை
எல்லாமே கிடைக்கும்
எங்கள் ஊர்ச் சந்தையில்.
திங்கட்கிழமையானால்
கிராமமே திருவிழா காணும்;
அண்டை கிராமங்களிலிருந்து
மாட்டுவண்டிகள்
அணிவகுக்கும்.
கக்கத்தில் மஞ்சள்பையுடன்
கிருதா மீசையுடன்
உற்சாக உலா வருவார்
சுங்கவசூல்தாரர்.
ஒருவாரத் தேவைகளை
நூறு ரூபாயில் நிறைவேற்றிய
காலம் அது.
ஒருபுறம் மாடுகளுக்கு லாடம்;
மறுபுறம் சாட்டைகளுடன்
ஆடு, கோழி விற்பனை
களை கட்டும்.
இரவு வரை குறையாது கூட்டம்.
காகிதப் பொட்டலங்களில்
விற்பனையாகும்
கிராமியப் பலகாரங்கள்,
அச்சுவெல்ல மிட்டாய்கள்,
பொமமைக்கடை நோக்கும்
குழந்தைகளின் கண்களில்
குதூகலம்.
அருகில் சுழலும்
குடைராட்டினம்.
அதைவிட வேகமாக
சுழன்றுவிட்டது காலம்.
இருபது வருட இடைவெளியில்
சொந்த ஊர் திரும்பினால்,
சந்தைப்பேட்டை
பேருந்து நிலையமாகி இருந்தது.
நிழல் கனிந்த மரங்கள்
இருந்த இடங்களில்
தார்த்தளம்.
சுங்கவசூல் மேடைக்கு பதிலாய்
கட்டணக் கழிப்பிடம்.
சந்தையின் ஒரு கோடியில்
தினசரி மார்க்கெட்டில்
வியாபாரிகள் மட்டும்
சுறுசுறுப்பு.
பேருந்து நிலைய வளாக
தேநீர்க்கடையில்
அடுமனைப் பலகாரங்களின்
அணிவகுப்பு.
தேநீர் ஆற்றியவரை
எங்கோ பார்த்த ஞாபகம் -
கிருதா மீசை நரைத்த
அதே சுங்கவசூல்தாரர்.
சந்தை எதிரில் புதிதாக உருவான
டிபார்ட்மென்டல் ஸ்டோர்.
அதன் முன்புறம்
இருசக்கர வாகனங்கள்.
பேருந்து நிலைய வளாகத்தில்
பல கடைகள்; பல மனிதர்கள்.
கிராமம் மாறிவிட்டது;
சந்தை காணாமல் போய்விட்டது.
எங்கிருந்தோ அண்டங்காக்கை
மதிய வேளையில்
ஈனசுரத்தில் கரைகிறது.
தூரத்தில் கழுதை
மேய்ந்து கொண்டிருக்கிறது.
கழுதையையும் காகத்தையும் காண
மனம் பாரமாகி விட்டது.
நன்றி: சுதேசி செய்தி (மார்ச்-2010)
.
Tuesday, February 23, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 76
ஆத்திரம்
சுற்றிலும் மனிதர்
எத்தனையோ பேர்!
அப்படி இருக்கையில்
'ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு'
என்று
என்னைப் பார்த்து
எப்படிச் சொன்னார்?
என்னிடம் வரட்டும்-
இடுப்பை ஒடிக்கிறேன்...
.
Monday, February 22, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 32
''லொக்... லொக்... லொக்...
உங்களுக்கு சாதாரண...
லொக்... லொக்... லொக்...
ஜுரம் தான்...
ஒரு ஊசி போடறேன்... லொக்...
சரியாயிடும்...''
சொல்லிவிட்டு
மருத்துவர்
உள்ளே போனார்.
நோயாளி வெளியே
ஓட்டம் பிடித்தார்!
Sunday, February 21, 2010
இன்றைய சிந்தனை
மரபுக்கவிதை - 75
வெள்ளமும் வெல்லமும்
மலையுள கற்களைப் புரட்டி, பல
மரங்களை வேரொடு பெயர்த்து, சுழல்
அலைமிக வெண்நுரை திரள, இரு
கரைகளும் தழுவிடும் வெள்ளம்!
கண்ணலைச் சாறெனப் பிழிந்து, பெருங்
கலத்தினில் ஊற்றிய பின்னர், எரி
வண்ணமாய்க் காய்ச்சிய பாகை, சிறு
அச்சினில் ஊற்றிட வெல்லம்!
ஒலிநயத்தாலே ஒன்றாய் ஆயினும்
ஓரெழுத்து அதனால் இருபொருளுண்டு!
வலியது பொருளே! வழியொரு எழுத்தே!
விழைவில்லாவிடின் விளைவே இல்லை!
.
Saturday, February 20, 2010
இன்றைய சிந்தனை

மரபுக்கவிதை - 74
நேற்றைய நினைவு
இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!
நேற்றைய காலை நேரத்தினிலே
நாற்றமெடுத்த வியர்வையின் நடுவே
காற்றில்லாமல் கசப்புறு மனத்துப்
பேற்றினைப் பெற்றேன் பேருந்தினிலே
எந்தன் சிற்றூர் வாகனம் நுழையா
கந்தை சாலை 'ங' வெனக் கொண்ட
விந்தைநிலை மிகு வியப்புறு கிராமம்!
என்னுடை கிராமத் தெழிலுடை சாலை
இன்றைய வாகனத் தடையாய் இருக்க
ஒன்றே ஒன்றாய் ஒரு பேருந்தே
நன்றாய் வந்தது நாங்கள் மகிழ!
மேலே பார்த்தும் மேகம் பொய்க்க
வேலையைத் தேடி விரைந்தனர் மக்கள்;
வேலையை விரும்பிய 'கூலி'களுக்கு
பாலமாய் இருந்தது அவ்வாகனமே!
அவனவன் அவனது தொழிலுக்காக
அவதிப்பட்டு அதனில் அடைந்து
சுவரென ஒடுங்கி சுண்ணாம்பாகி
சவமென நிற்கச் சங்கடம் அடைந்தேன்!
இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!
Friday, February 19, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 31
முடியவே முடியாது...
கணக்குப் பார்த்தால்
கடமையாற்ற முடியாது.
கணக்கு கேட்டால்
கட்சி நடத்த முடியாது.
கலைத்துறையை மறந்தால்
கலைஞனாக முடியாது.
கண்ணியமாய் நடந்தால்
களத்தில் வெல்ல முடியாது.
அத்து மீறாமல்
ஆட்சி நடத்த முடியாது.
கட்டுப்பாடு காக்காமல்
குடும்பம் காக்க முடியாது.
தத்துவம் பேசாமல்
தரணி ஆள முடியாது.
கொள்கைகளைக் கடைபிடித்தால்
கோட்டை கட்ட முடியாது.
தொண்டர்களை உசுப்பாமல்,
பங்கு பிரிக்காமல்,
முதுகில் குத்தாமல்,
தலைவனாக முடியாது.
.
Thursday, February 18, 2010
இன்றைய சிந்தனை

வசன கவிதை - 46
முன்பு போல இப்பொழுதெல்லாம் கவிதை எழுத முடியவில்லை.
ஏன்? என்ன காரணம்? எனது சோம்பலா, வேலைப்பளுவா, நேரமின்மையா, பொறுப்பு அதிகரித்ததாலா?
ஏன்? எது காரணம்?
நினைத்தவுடன் கவிதை எழுதும் வல்லமை எங்கு போனது? ஆசுகவித் திறன் அனைவருக்கும் கிட்டுவதில்லை. அதை வீணாக்கலாமா?
முன்பு கவிதைகள் என் நாட்குறிப்புகளாய் இருந்தது பழைய கனவு தானா? இனி கவிதை ஜனிக்காதா? மனம் தத்தளிக்கிறது; மறுகுகிறது; மயங்குகிறது. என்ன செய்யப் போகிறேன்? நிகழ்காலம் கேள்வி கேட்கிறது.
உருண்டு உருண்டு ஓடும் பந்து எங்காவது நின்று தான் ஆக வேண்டும். ஆனால் கவிதையும் பந்தும் ஒன்றாகி விடுமா? உருண்டை உலகில் கவிதையே நிலையான சொத்து. ஆனால், மனம் காலியாக, வெறுமையாக, கவிதையற்று இருப்பது ஏன்?
வாழ்க்கை பொருளோடு விளங்க வேண்டுமானால், அதற்கு வரையறை இருந்தாக வேண்டும். வாழ்க்கை வாழப்பட்டதற்கு அடையாளம் ஏதாவது இருந்தாக வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இதுநாள் வரையில் அடையாளம் கவிதை தான். வரையறை தான் கிட்டாமல் இருந்தது. இப்பொழுது வரையறை கிட்டுகையில் அடையாளம் தடுமாறுகிறதே? இரண்டும் இணைந்த இணைகோடாய் வாழ்வு அமைய முடியாதா?
குளத்தில் நீர் இருந்தால் தான் அதன் சுற்றுப்புறம் பசுமையாய்ப் பரிமளிக்கும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கையில் கவிதைகள் பசுமையாய் வெளிவரும். 'உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழியும் சமயத்தில் எழுத எழுத எழுத்து வளரும்' - இது கவி கண்ணதாசன் சொன்னது. என் மனதில் நிம்மதி இல்லையா? உற்சாகம் குன்றிவிட்டதா? கவிதை வரம் அளித்த கலைவாணி அது வரளவிட்டு விடுவாளா?
எனது இலட்சியங்கள், வாழ்க்கைமுறை, சுற்றுப்புறம் யாவும் பதிவுகளான முந்தைய கவிதைகள் சரித்திரம் அல்லவா? இனி அவை சங்கமிக்காதா?
வெறுமையை மனம் வெறுக்கிறது. உள்ள வறுமையை எண்ணி வாடுகிறது. இனியாவது இன்கவிதை பிரசவிக்குமா? இதயம் ஏங்குகிறது.
கவிதாவாணி, இது கவிஞனின் வாழ்வுப் பிரச்னை.
உன் கையில் கொடுத்து விட்டேன்.
இனி இது உன் பிரச்னை.
Wednesday, February 17, 2010
இன்றைய சிந்தனை

வசன கவிதை - 45
அவன் பரிதாபத்திற்குரியவன்
அவனை விட்டுவிடுங்கள் -
அவன் குற்றவாளியில்லை.
அவனது வளர்ப்புமுறை அப்படி.
அப்பாவின் கண்டிப்புகளுக்கு பயந்து பயந்து
அது அற்றுப் போனதும் அப்படியாகிவிட்டான்,
அது அவன் குற்றமில்லை.
அவனது அம்மாவுக்கு
அன்பு மட்டும் தான் செலுத்தத் தெரிந்தது.
அடக்கி வைத்ததால் அறிவு முடங்கிவிட்டது-
அவளுக்கு தெரியாது.
அது அவளது குற்றமுமில்லை.
அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
பரிதாபப்படுங்கள்.
பிஞ்சுவில் பழுத்தால் பிரச்னை தான்.
ஆனால் பிஞ்சு பழுக்கவில்லை.
பழுக்கவைக்கப்பட்டது.
அது அதன் குற்றமில்லை.
அஞ்சு வயதில்
பக்கத்து வீட்டு ப்ரியா ஓடி விளையாடுகையில்
பொதி சுமக்கிற கழுதை போல
அவன் பள்ளிக்கு ஓடுகிறான்.
அவனது ஆசிரியருக்குத் தெரிய நியாயமில்லை -
அவனுக்கென்று ஒரு மனம்.
இரவில் தன்னைப் பிரிந்து
அம்மாவும் அப்பாவும் எங்கே போகிறார்கள்?
அவனது சந்தேகம், பயம் தீர்ந்தபோது
வேறு சந்தேகம் முளைத்துவிட்டது.
பாட்டியையும் தாத்தாவையும் ஊரில் தனித்துவிட்டு,
தன்னையும் இரவில் தனியாய்க் கிடக்கவிட்டு,
இவர்களுக்கென்ன கேலிப்பேச்சு?
பாதி தெரிந்தது; மீதி?
தெரியாமலா போகிறது?
பாவம்- அவன் பரிதாபத்திற்குரியவன்.
எட்டு வயதிலேயே கண்ணாடி போட்டுக்கொண்டு,
ஒல்லியாய், நோஞ்சானாய்,
பின்வரிசை மாணவனுக்கு விளையாட்டுப் பொருளாய்,
ஆசிரியருக்கு அழுமூஞ்சியாய்,
இரவில் தூக்கமின்றிப் புலம்பும் அனாதையாய்,
எப்படிஎப்படியோ தவித்துப் போனவன் அவன்.
அவனை ஏன் தண்டிக்கப் பார்க்கிறீர்கள்?
பக்கத்து வீட்டு ரமேஷுடன் சினிமாவுக்கு போனதற்காக
அப்பாவிடம் பெல்ட் அடி.
பெல்ட் தழும்புக்காக பள்ளிக்கு மட்டம் போட்டான்.
ஆசிரியரிடம் பிரம்படி.
அடி மேல் அடி அடித்து உடைத்துவிட்டார்கள் மனதை.
இன்று 'தம்' அடிக்கிறான்; மன்னியுங்கள் அவனை.
14 வயதிலேயே ஒளிந்து 'தம்' அடித்தால்
18 வயதில் இவன் என்ன செய்ய மாட்டான்?
அம்மா புலம்புகிறாள்; அப்பா பெல்ட்டை உருவுகிறார்.
அவன் ஓடிப்போனான்.
அப்பா அதிர்ந்தார்; அம்மா அழுதாள்
அவன் ஓடியது கூட பெரிய விஷயமில்லை -
கேடியானது கேவலம் தான்.
ஆனால் அவனை நிந்திக்காதீர்கள்.
அவன் பரிதாபி.
அவனுக்கென்று மனம்;
அவனுக்கென்று தனியான ஒரு மனம்;
அவனது மனம்.
அது யாருக்கும் தெரியவில்லை.
இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்.
கால வெள்ளத்தில் ஒரு கற்பூரம்
கரைந்துவிட்டது.
இனி அழுது பயனில்லை.
அன்பிற்கு ஏங்கியவன்;
அடிகளுக்கு பயந்தவன்;
ஆசிரியரைக் கண்டு நடுங்கியவன்;
நண்பரால் கேலி செய்யப் பட்டவன்-
இந்தச் சூழ்நிலைகளை நாம் சந்திக்கவில்லை.
சந்தித்திருந்தால் அவனை
இரக்கத்தோடு பார்த்திருக்கலாம்.
விதியால்அவன் ஏசப்படுகிறான்.
தயவு செய்து அவசரப்படாதீர்கள்-
அவன் குற்றவாளியில்லை.
அவன் பாவியல்ல; பரிதாபி.
அவனை அவன் போக்கிலேயே
விட்டுவிடுங்கள்.
அவனது நிராசைப் பாதையில் குறுக்கிட்டு
நிம்மதியைக் கெடுக்காதீர்கள்.
அவனல்ல குற்றவாளி.
அவனை விட்டுவிடுங்கள்!
.
Tuesday, February 16, 2010
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 73
வேண்டுவன - 2
கடவுளின் கருணை கண்டிடல் வேண்டும்
திடம் மிகு வீரம் திளைத்திடல் வேண்டும்
மதங்கள் மனிதனை உயர்த்திடல் வேண்டும்
மதங்களில் வேற்றுமை மறைந்திடல் வேண்டும்
திராவிட மாயை தகர்ந்திடல் வேண்டும்
பாரதநேயம் பிறந்திடல் வேண்டும்
மொழிவெறி உணர்வு ஒழிந்திடல் வேண்டும்
வழிவழி மரபுகள் வளர்ந்திடல் வேண்டும்
தரணியில் அமைதி தவழ்ந்திடல் வேண்டும்
தரம் மிகு ஆட்சி நடைபெறல் வேண்டும்
தெளிவுடன் கொள்கை இயற்றிடல் வேண்டும்
துளிர்த்திடும் ஊழல் துடைத்திட வேண்டும்
ஒற்றுமை உணர்வு ஓங்கிடல் வேண்டும்
பற்றுடன் நாட்டைப் பேணிடல் வேண்டும்
தொழில்கள் அனைத்தும் தொடங்கிடல் வேண்டும்
எழில்மிகு கலைகள் எழுந்திடல் வேண்டும்
ஆலைகள் பலவாய் அமைந்திடல் வேண்டும்
சாலைகள் ஒழுங்குடன் மிளிருதல் வேண்டும்
உண்மைகள் உலகினில் நின்றிடல் வேண்டும்
பண்டைய சிறப்பு பரந்திடல் வேண்டும்
வைதிகம் நாட்டில் வளர்ந்திடல் வேண்டும்
கைத்திறம் நாட்டில் களித்திடல் வேண்டும்
கல்வியில் மக்கள் தேர்ந்திடல் வேண்டும்
வல்லமை நமக்கு வசமாக வேண்டும்
கனவுகள் காண்பது கலைந்திடல் வேண்டும்
நனவுகள் ஆக்கிட விழைந்திடல் வேண்டும்
பீடுடை தெய்வம் நல்கிட வேண்டும்
தேடிடு இவற்றைத் தேர்ந்திடல் வேண்டும்!
.
Monday, February 15, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 30
Sunday, February 14, 2010
இன்றைய சிந்தனை
வசன கவிதை - 44
கவியின் கடிதம்
'படித்தால் புரியாத
பா எழுதத் தெரியாது.
பாமரனை வியக்க வைக்கும்
படிம உத்தி தெரியாது.
சமுதாயத் தத்துவத்தை
சடங்காக்கத் தெரியாது.
மரபுத் தமிழ் மறந்து
மாரடிக்கத் தெரியாது.
சிக்கல் சிற்ப
சிதறுகவி தெரியாது.
எனக்கெதற்கு
கவிதை மனம்?'
புலம்பும் கவிஞனின்
புதிய முயற்சி
வாசகர் கடிதமாகவாவது
வருமா, கதிரில்?
(தினமணி கதிர்- கவிதைச் சிறப்பிதழுக்கு கவிதை அனுப்பி பிரசுரமாகாத போது எழுதிய புலம்பல் கவிதை இது. நாள்: 08.09.1996. இப்போது இதைக் குறிப்பிட காரணம் இருக்கிறது).
.
தமிழ் ஹிந்து இணையதளக் கட்டுரை
நண்பர் திரு அரவிந்தன் நீலகண்டனின் வீடியோ பதிவுடன் கூடிய, அற்புதமான கட்டுரை இது. படிக்கும்போதே கண்கள் நீர் சொரிகின்றன. அழகிய காட்சிகளுடன் மனம் இளகச் செய்யும் நடையுடன் கூடிய கட்டுரை. உரிமையுடன் எனது வலைப்பூவில் சேர்த்திருக்கிறேன்.
Saturday, February 13, 2010
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 72

Friday, February 12, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 75
ஐந்தறிவு
எனக்கும்
அண்டை வீட்டுக்காரருக்கும்
சண்டை.
அவர் வீட்டு நாய்
என் வீட்டு வாசலிலேயே
காவல் இருக்கிறது.
.
Thursday, February 11, 2010
இன்றைய சிந்தனை
Wednesday, February 10, 2010
புதுக்கவிதை -73
மொபைல் யுகம்
மொபைல்போனில்
பேசியபடி
சிரித்துச் செல்லும்
இளைஞியைப் பார்த்து
திடுக்கிடுகிறான் -
ஆகாயம் பார்த்து
பேசிக் கொண்டிருந்த
சிக்குமுடிக்
கிறுக்கன்.
.
இன்றைய சிந்தனை

Tuesday, February 9, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை -72
உபதேசம்
சாக்கடையில் இணைந்து
ஆற்றில் கலக்கிறது -
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய
பொறியாளரின் வீட்டு
குளியலறைக் கழிவுநீர்.
.
இன்றைய சிந்தனை
Monday, February 8, 2010
புதுக்கவிதை- 71
அக்கறை
லட்டு
முறுக்கு
தட்டை முறுக்கு
அதிரசம்
பஞ்சாமிர்தம்
புளியோதரை
பொங்கல்
தயிரன்னம்
எல்லாம் இருக்கிறது
பிரசாத நிலையத்தில்.
அர்ச்சனை சீட்டு
சிறப்பு நுழைவு சீட்டு
தேங்காய் பழச் சீட்டு
நன்கொடை ரசீது
எல்லாம் இருக்கிறது
தேவஸ்தான அலுவலகத்தில்.
இரண்டு இடத்திலும்
கிடைக்கவில்லை
திருக்கோவில்
தலவரலாறு புத்தகம்.
.
Sunday, February 7, 2010
இன்றைய சிந்தனை

வசன கவிதை -43
பிசிறு
தந்தையின் சீற்றம்
தாயின் கண்ணீர்
மனைவியின் ஊடல்
குழந்தையின் சீராட்டு
தங்கையின் தவிர்ப்பு
தமக்கையின் கோபம்
உறவினரின் பொய்ச்சிரிப்பு
ஊழியரின் அசிரத்தை
அதிகாரியின் கடுத்த முகம்
அன்பர்களின் ஏமாற்றம்
நம்பியவரின் கைவிரிப்பு
நண்பரின் பாராமுகம்
தோழனின் மறுதலிப்பு
தோல்விகளின்
தொடர்கதையாய்...
என்னிடத்தில் தான் தவறு
எங்கோ நடந்திருக்கிறது பிசகு.
.
Saturday, February 6, 2010
உருவக கவிதை - 29
நித்யானந்தம் - 0
கொசுறு
அறைக்குள் புழுக்கம்
வர மறுத்தது உறக்கம்.
கதவைத் திறக்க
காற்று வந்தது.
கூடவே கொசுவும்.
Friday, February 5, 2010
இன்றைய சிந்தனை

உருவக கவிதை - 28

ஓணான்
பார்வை
முதுகுச் செதில்களை சிலுப்பியபடி
ஓரக் கண்ணால் பார்க்கும்
ஓணானின் பார்வையே
சரியில்லை...
அதன் குரல்வளை அருகில்
அசையும் தசைகளில்
ஒடுங்கிக் கிடக்கும் குரலில்
வேண்டுகோளும் இருக்கலாம்.
ஆனால்
பார்வை சரியில்லை....
மரத்தை வெட்டப் போகும் மனிதன்
பார்ப்பது போல,
வெறித்துப் பார்க்கும் ஓணானின்
பார்வை எனக்குப்
பிடிக்கவே இல்லை.
ஒருவேளை....
மரத்தை வெட்ட வந்தவன் என்று
நினைத்துவிட்டதா என்னை?
.
இன்றைய சிந்தனை
Thursday, February 4, 2010
புதுக்கவிதை - 70
அன்பெனப் படுவது...
ஆயிரம் கல்
தொலைவில் இருந்தாலும்
இதயங்கள்
அருகருகே இருப்பது.
பத்து நிமிடம்
பார்க்காமல் இருந்தாலும்
பரிதவித்துப் போவது.
ஒருவர் வலியை
உணராமலேயே
இன்னொருவர் துடிப்பது.
தன்னலம் மறுத்து
பிறர்நலம் விழைவது.
பயன் கருதாத
அறமாய் விளைவது.
அன்பெனப்படுவது...
இல்வாழ்க்கையன்றி
வேறெது?
இக்கவிதை, என் சகதர்மிணியும், வாழ்க்கைத் துணைநலமுமான ராதிகாவுக்கு சமர்ப்பணம்.
.
இன்றைய சிந்தனை
Wednesday, February 3, 2010
வசன கவிதை - 42
ஒரு குவளைக் குருதி
நியாயவிலைக் கடையில்
வரிசையில் நிற்க
தத்துவம் பேசிய
அதே கால்கள்
முண்டியடிக்கின்றன.
ஐம்பது காசு சில்லறைக்காக
நடத்துனரை வம்புக்கிழுத்த
அதே வாய்
முழு ஐந்து ரூபாய்
'பாக்கி' கேட்காமல்
ஊமையாகிறது.
பெற்ற குழந்தையின் அழுகுரல்
கேட்கச் சகியாத
அதே காதுகள்
கொச்சை அடைமொழி
பிரயோகங்களை
விழுங்கிக் கொள்கின்றன.
அமாவாசை, பௌர்ணமி,
கிருத்திகை, சஷ்டி,
எந்தக் கிழமை என்னும்
அக்கறையின்றி
பல்லும் துலக்காமல்
பரிதவிக்கின்றன விழிகள்.
கலைந்த தலை;
கசங்கிய சட்டை;
நழுவும் வேட்டி;
ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்
அறுந்துபோகிறது
செருப்பு.
அதிகாலையிலேயே
களைகட்டிவிட்டது
'டாஸ்மாக்' மதுக்கடை.
இனி இரவு வரை
தொடரும்
நரம்புகளின் நடுக்கம்.
.
இன்றைய சிந்தனை
கருவூலம்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்....
Tuesday, February 2, 2010
உருவக கவிதை - 27
பழையன கழிதலும்...
பிச்சைக்காரன் கூட
பிசைக்காரனென்று
ஏசுவான்-
பத்துக்காசு போட்டால்.
அறுகோண வடிவ
இருபது காசு கூட
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டில் தான் கிடக்கிறது.
நாலணாவுக்கு
தபால் அலுவலக
வில்லை தான் கிடைக்கும்.
இந்த வரிசையில்
இடம்பெயரக் காத்திருக்கிறது
ஐம்பது காசும்.
ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்.
செல்லாக் காசுகள்
எல்லா இடத்திலும்
வழக்கொழியும்.
.
Monday, February 1, 2010
புதுக்கவிதை -69
அமர்க்களம்
எதைப் பற்றியும்
பகடி செய்யலாம் -
பிரமுகரானால்.
எதைப் பற்றியும்
விமர்சித்து மகிழலாம் -
அறிவுசீவியானால்.
என்ன வேண்டுமாயினும்
எழுதிக் கிழிக்கலாம் -
பத்திரிகை நடத்தினால்.
யாராய் இருப்பினும்
மிரட்டி வளைக்கலாம் -
அதிகாரம் இருந்தால்.
ஆடை அவிழினும்
ஆர்ப்பரிக்கலாம்-
ஆணாய்ப் பிறந்தால்.
.