Wednesday, February 3, 2010

வசன கவிதை - 42


ஒரு குவளைக் குருதி

நியாயவிலைக் கடையில்
வரிசையில் நிற்க
தத்துவம் பேசிய
அதே கால்கள்
முண்டியடிக்கின்றன.

ஐம்பது காசு சில்லறைக்காக
நடத்துனரை வம்புக்கிழுத்த
அதே வாய்
முழு ஐந்து ரூபாய்
'பாக்கி' கேட்காமல்
ஊமையாகிறது.

பெற்ற குழந்தையின் அழுகுரல்
கேட்கச் சகியாத
அதே காதுகள்
கொச்சை அடைமொழி
பிரயோகங்களை
விழுங்கிக் கொள்கின்றன.

அமாவாசை, பௌர்ணமி,
கிருத்திகை, சஷ்டி,
எந்தக் கிழமை என்னும்
அக்கறையின்றி
பல்லும் துலக்காமல்
பரிதவிக்கின்றன விழிகள்.

கலைந்த தலை;
கசங்கிய சட்டை;
நழுவும் வேட்டி;
ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்
அறுந்துபோகிறது
செருப்பு.

அதிகாலையிலேயே
களைகட்டிவிட்டது
'டாஸ்மாக்' மதுக்கடை.
இனி இரவு வரை
தொடரும்
நரம்புகளின் நடுக்கம்.
.

No comments:

Post a Comment