Saturday, February 20, 2010

மரபுக்கவிதை - 74


நேற்றைய நினைவு

இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!

நேற்றைய காலை நேரத்தினிலே
நாற்றமெடுத்த வியர்வையின் நடுவே
காற்றில்லாமல் கசப்புறு மனத்துப்
பேற்றினைப் பெற்றேன் பேருந்தினிலே

எந்தன் சிற்றூர் வாகனம் நுழையா
கந்தை சாலை 'ங' வெனக் கொண்ட
விந்தைநிலை மிகு வியப்புறு கிராமம்!

என்னுடை கிராமத் தெழிலுடை சாலை
இன்றைய வாகனத் தடையாய் இருக்க
ஒன்றே ஒன்றாய் ஒரு பேருந்தே
நன்றாய் வந்தது நாங்கள் மகிழ!

மேலே பார்த்தும் மேகம் பொய்க்க
வேலையைத் தேடி விரைந்தனர் மக்கள்;
வேலையை விரும்பிய 'கூலி'களுக்கு
பாலமாய் இருந்தது அவ்வாகனமே!

அவனவன் அவனது தொழிலுக்காக
அவதிப்பட்டு அதனில் அடைந்து
சுவரென ஒடுங்கி சுண்ணாம்பாகி
சவமென நிற்கச் சங்கடம் அடைந்தேன்!

இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!


குறிப்பு: உண்மை நிகழ்ச்சி (15.02.1989)
.

No comments:

Post a Comment