பின்தொடர்பவர்கள்

Wednesday, February 24, 2010

வசன கவிதை - 47


காணாமல் போன சந்தை

மலையெனக் குவிந்திருக்கும்
மளிகைப்பொருட்கள்;
கூறுகளாக காய்கறிகள்;
கூடைகளில் பழவகைகள்;
வண்ணங்களின் சங்கமமாய்
துணிரகங்கள்;
உப்பு முதல் உலக்கை வரை
எல்லாமே கிடைக்கும்
எங்கள் ஊர்ச் சந்தையில்.

திங்கட்கிழமையானால்
கிராமமே திருவிழா காணும்;
அண்டை கிராமங்களிலிருந்து
மாட்டுவண்டிகள்
அணிவகுக்கும்.

கக்கத்தில் மஞ்சள்பையுடன்
கிருதா மீசையுடன்
உற்சாக உலா வருவார்
சுங்கவசூல்தாரர்.

ஒருவாரத் தேவைகளை
நூறு ரூபாயில் நிறைவேற்றிய
காலம் அது.

ஒருபுறம் மாடுகளுக்கு லாடம்;
மறுபுறம் சாட்டைகளுடன்
ஆடு, கோழி விற்பனை
களை கட்டும்.
இரவு வரை குறையாது கூட்டம்.

காகிதப் பொட்டலங்களில்
விற்பனையாகும்
கிராமியப் பலகாரங்கள்,
அச்சுவெல்ல மிட்டாய்கள்,
பொமமைக்கடை நோக்கும்
குழந்தைகளின் கண்களில்
குதூகலம்.
அருகில் சுழலும்
குடைராட்டினம்.

அதைவிட வேகமாக
சுழன்றுவிட்டது காலம்.

இருபது வருட இடைவெளியில்
சொந்த ஊர் திரும்பினால்,
சந்தைப்பேட்டை
பேருந்து நிலையமாகி இருந்தது.

நிழல் கனிந்த மரங்கள்
இருந்த இடங்களில்
தார்த்தளம்.
சுங்கவசூல் மேடைக்கு பதிலாய்
கட்டணக் கழிப்பிடம்.
சந்தையின் ஒரு கோடியில்
தினசரி மார்க்கெட்டில்
வியாபாரிகள் மட்டும்
சுறுசுறுப்பு.

பேருந்து நிலைய வளாக
தேநீர்க்கடையில்
அடுமனைப் பலகாரங்களின்
அணிவகுப்பு.
தேநீர் ஆற்றியவரை
எங்கோ பார்த்த ஞாபகம் -
கிருதா மீசை நரைத்த
அதே சுங்கவசூல்தாரர்.

சந்தை எதிரில் புதிதாக உருவான
டிபார்ட்மென்டல் ஸ்டோர்.
அதன் முன்புறம்
இருசக்கர வாகனங்கள்.
பேருந்து நிலைய வளாகத்தில்
பல கடைகள்; பல மனிதர்கள்.

கிராமம் மாறிவிட்டது;
சந்தை காணாமல் போய்விட்டது.
எங்கிருந்தோ அண்டங்காக்கை
மதிய வேளையில்
ஈனசுரத்தில் கரைகிறது.
தூரத்தில் கழுதை
மேய்ந்து கொண்டிருக்கிறது.

கழுதையையும் காகத்தையும் காண
மனம் பாரமாகி விட்டது.


நன்றி: சுதேசி செய்தி (மார்ச்-2010)

.

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Post a Comment