Wednesday, February 17, 2010

வசன கவிதை - 45

பரிதாபத்திற்குரியவன்

அவன் பரிதாபத்திற்குரியவன்
அவனை விட்டுவிடுங்கள் -
அவன் குற்றவாளியில்லை.

அவனது வளர்ப்புமுறை அப்படி.
அப்பாவின் கண்டிப்புகளுக்கு பயந்து பயந்து
அது அற்றுப் போனதும் அப்படியாகிவிட்டான்,
அது அவன் குற்றமில்லை.

அவனது அம்மாவுக்கு
அன்பு மட்டும் தான் செலுத்தத் தெரிந்தது.
அடக்கி வைத்ததால் அறிவு முடங்கிவிட்டது-
அவளுக்கு தெரியாது.
அது அவளது குற்றமுமில்லை.
அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
பரிதாபப்படுங்கள்.

பிஞ்சுவில் பழுத்தால் பிரச்னை தான்.
ஆனால் பிஞ்சு பழுக்கவில்லை.
பழுக்கவைக்கப்பட்டது.
அது அதன் குற்றமில்லை.

அஞ்சு வயதில்
பக்கத்து வீட்டு ப்ரியா ஓடி விளையாடுகையில்
பொதி சுமக்கிற கழுதை போல
அவன் பள்ளிக்கு ஓடுகிறான்.
அவனது ஆசிரியருக்குத் தெரிய நியாயமில்லை -
அவனுக்கென்று ஒரு மனம்.

இரவில் தன்னைப் பிரிந்து
அம்மாவும் அப்பாவும் எங்கே போகிறார்கள்?
அவனது சந்தேகம், பயம் தீர்ந்தபோது
வேறு சந்தேகம் முளைத்துவிட்டது.

பாட்டியையும் தாத்தாவையும் ஊரில் தனித்துவிட்டு,
தன்னையும் இரவில் தனியாய்க் கிடக்கவிட்டு,
இவர்களுக்கென்ன கேலிப்பேச்சு?
பாதி தெரிந்தது; மீதி?
தெரியாமலா போகிறது?
பாவம்- அவன் பரிதாபத்திற்குரியவன்.

எட்டு வயதிலேயே கண்ணாடி போட்டுக்கொண்டு,
ஒல்லியாய், நோஞ்சானாய்,
பின்வரிசை மாணவனுக்கு விளையாட்டுப் பொருளாய்,
ஆசிரியருக்கு அழுமூஞ்சியாய்,
இரவில் தூக்கமின்றிப் புலம்பும் அனாதையாய்,
எப்படிஎப்படியோ தவித்துப் போனவன் அவன்.
அவனை ஏன் தண்டிக்கப் பார்க்கிறீர்கள்?

பக்கத்து வீட்டு ரமேஷுடன் சினிமாவுக்கு போனதற்காக
அப்பாவிடம் பெல்ட் அடி.
பெல்ட் தழும்புக்காக பள்ளிக்கு மட்டம் போட்டான்.
ஆசிரியரிடம் பிரம்படி.
அடி மேல் அடி அடித்து உடைத்துவிட்டார்கள் மனதை.
இன்று 'தம்' அடிக்கிறான்; மன்னியுங்கள் அவனை.

14 வயதிலேயே ஒளிந்து 'தம்' அடித்தால்
18 வயதில் இவன் என்ன செய்ய மாட்டான்?
அம்மா புலம்புகிறாள்; அப்பா பெல்ட்டை உருவுகிறார்.
அவன் ஓடிப்போனான்.
அப்பா அதிர்ந்தார்; அம்மா அழுதாள்
அவன் ஓடியது கூட பெரிய விஷயமில்லை -
கேடியானது கேவலம் தான்.
ஆனால் அவனை நிந்திக்காதீர்கள்.
அவன் பரிதாபி.

அவனுக்கென்று மனம்;
அவனுக்கென்று தனியான ஒரு மனம்;
அவனது மனம்.
அது யாருக்கும் தெரியவில்லை.
இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்.
கால வெள்ளத்தில் ஒரு கற்பூரம்
கரைந்துவிட்டது.
இனி அழுது பயனில்லை.

அன்பிற்கு ஏங்கியவன்;
அடிகளுக்கு பயந்தவன்;
ஆசிரியரைக் கண்டு நடுங்கியவன்;
நண்பரால் கேலி செய்யப் பட்டவன்-
இந்தச் சூழ்நிலைகளை நாம் சந்திக்கவில்லை.
சந்தித்திருந்தால் அவனை
இரக்கத்தோடு பார்த்திருக்கலாம்.
விதியால்அவன் ஏசப்படுகிறான்.

தயவு செய்து அவசரப்படாதீர்கள்-
அவன் குற்றவாளியில்லை.
அவன் பாவியல்ல; பரிதாபி.
அவனை அவன் போக்கிலேயே
விட்டுவிடுங்கள்.
அவனது நிராசைப் பாதையில் குறுக்கிட்டு
நிம்மதியைக் கெடுக்காதீர்கள்.
அவனல்ல குற்றவாளி.
அவனை விட்டுவிடுங்கள்!
.


No comments:

Post a Comment