Thursday, February 18, 2010

வசன கவிதை - 46

வெறுமை

முன்பு போல இப்பொழுதெல்லாம் கவிதை எழுத முடியவில்லை.
ஏன்? என்ன காரணம்? எனது சோம்பலா, வேலைப்பளுவா, நேரமின்மையா, பொறுப்பு அதிகரித்ததாலா?
ஏன்? எது காரணம்?

நினைத்தவுடன் கவிதை எழுதும் வல்லமை எங்கு போனது? ஆசுகவித் திறன் அனைவருக்கும் கிட்டுவதில்லை. அதை வீணாக்கலாமா?
முன்பு கவிதைகள் என் நாட்குறிப்புகளாய் இருந்தது பழைய கனவு தானா? இனி கவிதை ஜனிக்காதா? மனம் தத்தளிக்கிறது; மறுகுகிறது; மயங்குகிறது. என்ன செய்யப் போகிறேன்? நிகழ்காலம் கேள்வி கேட்கிறது.

உருண்டு உருண்டு ஓடும் பந்து எங்காவது நின்று தான் ஆக வேண்டும். ஆனால் கவிதையும் பந்தும் ஒன்றாகி விடுமா? உருண்டை உலகில் கவிதையே நிலையான சொத்து. ஆனால், மனம் காலியாக, வெறுமையாக, கவிதையற்று இருப்பது ஏன்?

வாழ்க்கை பொருளோடு விளங்க வேண்டுமானால், அதற்கு வரையறை இருந்தாக வேண்டும். வாழ்க்கை வாழப்பட்டதற்கு அடையாளம் ஏதாவது இருந்தாக வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இதுநாள் வரையில் அடையாளம் கவிதை தான். வரையறை தான் கிட்டாமல் இருந்தது. இப்பொழுது வரையறை கிட்டுகையில் அடையாளம் தடுமாறுகிறதே? இரண்டும் இணைந்த இணைகோடாய் வாழ்வு அமைய முடியாதா?

குளத்தில் நீர் இருந்தால் தான் அதன் சுற்றுப்புறம் பசுமையாய்ப் பரிமளிக்கும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கையில் கவிதைகள் பசுமையாய் வெளிவரும். 'உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழியும் சமயத்தில் எழுத எழுத எழுத்து வளரும்' - இது கவி கண்ணதாசன் சொன்னது. என் மனதில் நிம்மதி இல்லையா? உற்சாகம் குன்றிவிட்டதா? கவிதை வரம் அளித்த கலைவாணி அது வரளவிட்டு விடுவாளா?

எனது இலட்சியங்கள், வாழ்க்கைமுறை, சுற்றுப்புறம் யாவும் பதிவுகளான முந்தைய கவிதைகள் சரித்திரம் அல்லவா? இனி அவை சங்கமிக்காதா?
வெறுமையை மனம் வெறுக்கிறது. உள்ள வறுமையை எண்ணி வாடுகிறது. இனியாவது இன்கவிதை பிரசவிக்குமா? இதயம் ஏங்குகிறது.

கவிதாவாணி, இது கவிஞனின் வாழ்வுப் பிரச்னை.
உன் கையில் கொடுத்து விட்டேன்.
இனி இது உன் பிரச்னை.
எழுதிய நாள்: 01.07.1995
.

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

//கவிதாவாணி, இது கவிஞனின் வாழ்வுப் பிரச்னை.
உன் கையில் கொடுத்து விட்டேன்.
இனி இது உன் பிரச்னை.//

ஆக கவிதை என்றாலே பிரச்சனை தான் போலும்...

Post a Comment