
Sunday, January 31, 2010
இன்றைய சிந்தனை

புதுக்கவிதை - 68
அகாரணம்
எங்கள் வீட்டு நாய்
பால்காரர் வந்தால்
குரைக்கிறது
தபால்காரர் வந்தால்
குரைக்கிறது.
சமயத்தில்
நான் வந்தாலும் கூட.
இரவில் மட்டும் அது
தூங்கிப் போய்விடுகிறது.
Saturday, January 30, 2010
இன்றைய சிந்தனை

புதுக்கவிதை - 67

இன்று காந்திஜி இறந்த தினம்.
மாலைகளைச் சுமக்க முடியாமல்
தள்ளாடும் அவர் மேல்
காகம் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கிறது.
பாவம் காந்திஜி!
அருகில் நெருங்கினால்
'மணம்' வீசுகிறதே?
யாரோ சாணாபிஷேகம்
செய்திருக்க வேண்டும்.
சுதந்திர ஜனநாயகம்!
அவர் காங்கிரஸ் கட்சி
என்றல்லவா எண்ணியிருந்தேன் -
எல்லாக் கட்சிக் கொடிகளையும்
ஏந்தியிருக்கிறாரே?
பரந்த மனப்பான்மை?
இல்லை...
பக்கா சுயநலம்!
சிற்பி ஊன்றுகோலை
கையுடன் நன்கு
பிணைத்திருக்கலாம் -
பாருங்கள்,
காந்திஜி ஊன்றுகோலில்லாமல்
தள்ளாடுவதை!
கட்சிக்கொடிகள்
இருப்பதால் தான்
அவர்
நின்று கொண்டிருக்கிறார்!
கட்சிகள் வாழ்க!
என்ன கண்ணாடியையும்
காணவில்லை?
ஊன்றுகோலை உருவியவன் தான்
கண்ணாடியையும்
களவாடியிருப்பான்!
பரவாயில்லை,
அவருக்கு எளிமையே
விருப்பம்!
நல்ல வேளை
உடையையாவது சிமென்ட்டில்
செய்தார்கள்!
ஒருவரையே
பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?
இந்தப்புறம்
ஒருவர் இருப்பாரே?
ஆஹா...
அதோ...
Friday, January 29, 2010
ஏதேதோ எண்ணங்கள்
நூற்றி ஐம்பதாவது நாளை எட்டும் வலைப்பூ!
எழுத எழுத, இதில் சுவை கூடியது. கவிதைக்குப் பொருத்தமான 'இன்றைய சிந்தனை'களை இடுவது என முடிவு செய்தபோது ஒரு மாதம் தாண்டி இருந்தது. அதன் பிறகு, சிந்தனைக் கருத்துகளுக்காகவே எனது வீட்டு நூலகப் புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தேன். அதன் பலன் உடனே தெரிந்தது. புதிய கவிதைகளுக்கான ஊற்றுகள் பல அதில் கிடைத்தன. பழைய கவிதைகள் மட்டுமல்லாது புதிய கவிதைகளும் வலைப்பூவில் இடம்பெறத் துவங்கின.
நண்பர்கள் பலர் படித்துப் பாராட்டியதுடன், பின்தொடரவும் செய்து, என்னை ஊக்குவித்தனர். எனினும், பொதுவான வலைப்பூ தொகுப்பு தளங்களின் பக்கம் எனது கவனம் அப்போது செல்லவில்லை. நண்பர் அசோக், சங்கமேஸ்வரன் ஆகியோரது அறிவுறுத்தல்களால், சென்ற மாதம் தான் அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினேன். அதன் பலனாக, தமிழ்மணம்http://www.tamilmanam.net/todays_posts.php?pageno=27, தமிலீஷ் http://www.tamilish.com/upcoming தளங்களில் கவிதை இடம் பெறத் துவங்கியுள்ளது. எனினும், அந்த வலைப்பூ தொகுப்புத் தளங்களைக் காணும்போது தான், நான் செல்ல வேண்டிய தூரமும் இலக்கும் தெரிய வந்தன.
இன்றைய கவிஞர்கள், தங்கள் மனத்துடிப்புகளை எழுத வடிகாலாக இணையதள வலைப்பூக்கள் பெரும் உதவி புரிகின்றன. இனிமேல், திறமை உள்ளவர் எங்கிருந்தாலும் அதை மூடி வைக்க முடியாது. வெகுஜன இதழ்களும் இலக்கிய இதழ்களும் மறுதலித்தாலும், வலைப்பூக்கள், கவிதைகளை காற்றில் இசைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழலில், எனது கவிதைகள் எனது ஆழ்மன பிம்பங்களாய் இங்கு பதிவாகின்றன. 'கடை விரித்தேன் - கொள்வாரில்லை' என்ற புலம்பல்கள் இனி, தேவையில்லை.
'குழலும் யாழும்' அனுபவத்தில், ' மலரும் வண்டும்' http://malarumvandum.blogspot.com/(வார இடுகை), 'பஞ்சபூத வணக்கம்' http://panjaboothavanakkam.blogspot.com/(மாத இடுகை) ஆகிய புதிய வலைப்பூக்களும் தொடுத்திருக்கிறேன். அவற்றையும் வாசித்து, விமர்சித்தால், அவற்றை மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.
''உள்ளத்துள்ளது கவிதை'' என்று சொன்ன மகாகவி பாரதியை வணங்கி, 150 வது மைல்கல்லைக் கடக்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் எனது வலைப்பூக்கள் மிளிரட்டும்.
-வ.மு.முரளி.
இன்றைய சிந்தனை

மரபுக் கவிதை - 71

கீதை பிறந்தது!
கண்ணிரு கனலெனச் சுடர,
கரத்திடை காண்டீபம் அதிர,
கண்ணனின் பின்புறம் பார்த்தன்
கயவரை அழித்திட நின்றான்!
த்வஜத்தினில் பிறந்தனன் அனுமன்;
துணையென நின்றனர் நால்வர்;
யுவக்களை மிகுந்திட நின்றான்-
'ஓம்' என ஒலித்தது சங்கம்!
'தன்'னெனும் ஆணவம் பிறக்க-
வில்லினில் ஓசையை எழுப்பி,
''என்வலி இருந்திடு வரையில்
எள்எனச் சிதறிடும் பகைமை...
கண்ணனே ரதத்தினை ஒட்டு,
கயவருக் கருகினில் நாடு,
மண்ணிலே தர்மமே வாழும்!''
என்றனன் போர்க்களம் அறிய!
உலகினை வாயினில் காட்டி,
உரியினில் வெண்ணெயைத் திருடி,
குலத்தினைக் காத்திட மலையைக்
குடைஎனப் பிடித்தவன் சிரித்தான்!
அர்ச்சுனன் அகந்தையை நீக்கி,
அதர்மத்தைச் சாய்த்திடும் காலம்-
அருகினில் நெருங்குதல் கண்டு
அவனுளம் நகைத்தது - உடனே
ரதத்தினைப் போர்க்களம் நடுவில்
செலுத்திய சாரதி ''பார்த்தா!
எதிரினில் இருப்பவர் பகைவர்;
எடுத்திடு அம்பினை!'' என்றான்.
எதிரினில் பார்த்தனன் பார்த்தன்-
எதிரிகள் யாவரும் உற்றார்!
எதிரினில் குருவுடன் பீஷ்மர்!
எதிரியாய் பந்தமும் நட்பும்!
கலங்கிய மனத்துடன் சோர்ந்து
களத்தினில் புலம்பினன் வீரன்:
''குலத்தினை குருவினை என்வில்
களத்தினில் சாய்ப்பதும் முறையோ?
ஆட்சியே கிடைப்பினும் என்ன?
அன்னவர் போனபின் மன்னர்
மாட்சியே கிடைப்பினும் என்ன?
மடியவும் வேண்டுமோ உறவோர்?''
புலம்பிடும் பார்த்தனைப் பார்த்து
புன்னகை புரிந்தனன் கண்ணன்:
''குலப்புகழ் மறந்தனை வீரா,
களத்தினில் கலங்குதல் மறமா?
உறவென்று கூறியே நழுவி
உண்மையை மறந்திடல் தீது!
உறவென்றும் குருவென்றும் இங்கு
உணராமல் வந்ததும் தவறே!
வந்தபின் முதுகினைக் காட்டி
விடைபெறும் வீரமும் நன்றோ?
சொந்தமும் பந்தமும் நட்பும்
திரௌபதியின் துகிலிற்கு நிகரோ?
பனிரெண்டு ஆண்டுகள் வனத்தில்
பட்டபல் துயரங்கள் யாரால்?
சனிகண்டு கைகொட்டிச் சிரிக்க,
சபையினில் துகிலுரிந்தது யார்?
கடமையை ஆற்றிடும்போது
கலங்குதல் என்றுமே தவறு!
கடமைக்கு பந்தமும் குருவும்
இடராக இருப்பினும் செய்க!
'கடமையே உன்விதி செய்க;
பலனினைக் கருதிடல் வேண்டா!
கடமையைச் செய்; பலன் எனதே!
களத்தினில் வீரமே கடமை!'
எடுத்திடு வில்லினை- அம்பைத்
தொடுத்திடு பகைவரை நோக்கி!
விடுத்திடு உன்குலக் கறையை!
வில்லினை ஒழித்திடு வீரா!''
என்றது கண்ணனின் திருவாய்;
எழுப்பினன் பார்த்தனின் மறத்தை!
'என்'என்ற ஆணவம் அழிய,
எளியவன் ஆகினான் பார்த்தன்!
''மண்ணிலே தர்மத்தை நாட்டி,
மனத்திருள் மயக்கத்தைப் போக்கி,
அண்ணலே காக்க நீ போற்றி!
அனைத்தையும் துறந்தவன் ஆனேன்!''
என்றபின் அர்ச்சுணன் வில்லை
எடுத்ததுடன் அம்பினைப் பூட்டி,
'நன்றதை நல்கட்டும் ஈசன்'
என்றனன்; தொடுத்தனன் போரை!
தர்மத்தை நாட்டிட கண்ணன்
களத்தினில் புகன்றது கீதை!
கர்மத்தைச் செய்வதே வாழ்க்கை;
பலனென்றும் பரந்தாமனுக்கே!
நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர் - 2000
.
Thursday, January 28, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 66
Wednesday, January 27, 2010
இன்றைய சிந்தனை

புதுக்கவிதை - 65
பண்ணிக் காய்ச்சல்
கிரவுண்டில் வேகமாய் 'வாக்' பண்ணி,
குனிந்து நின்று 'பிரீத்' பண்ணி,
மார்னிங்கை 'என்ஜாய்' பண்ணி,
உடன் வந்தவர்களிடம் 'ஷேக்' பண்ணி,
எல்லோரிடமும் 'லாப்' பண்ணி,
வாக்கிங் 'ஸ்டாப்' பண்ணி,
ஓட்டலில் காபி 'டேஸ்ட்' பண்ணி,
வீடு திரும்பினேன் -
காரை 'டிரைவ்' பண்ணி.
மிட் நூன்:
கவிதை 'ரைட்' பண்ணி,
பேப்பரில் 'டைப்' பண்ணி,
கவரில் 'பேக்' பண்ணி,
கூரியரில் 'சென்ட்' பண்ணி,
வீடு திரும்பினால்-
'ஷாக்' பண்ணி விட்டான்
'பாலோ' பண்ணி வந்த நண்பன்.
ஈவ்னிங் சிக்ஸ்ஓ கிளாக்:
டாக்டர் 'செக்' பண்ணி,
'பிரிஸ்க்ரைப்' பண்ணிய
மருந்தை 'பர்ச்சேஸ்' பண்ணி,
நன்றாக 'மிக்ஸ்' பண்ணி,
முழங்காலில் 'ரப்' பண்ணி,
முடிந்த பிறகு 'வாஷ்' பண்ணியும்
போகவில்லை
'அப்ளை' பண்ணிய தைல வாசம்.
லேட் நைட்:
குழந்தையின் ஹோம்வொர்க் பண்ணி,
டி.வி. ப்ரோக்ராம் 'வாட்ச்' பண்ணி,
அப்படியே 'டிபன்' பண்ணி,
பெட்ரூமை கிளீன் பண்ணி,
பத்து நிமிடம் 'பிரே' பண்ணி,
படுக்கையில் சாய்ந்தேன்-
'ஸ்லீப்' பண்ண.
.
Tuesday, January 26, 2010
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 70
பெத்த மனம்
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு - அட
இது வெறும் பழமொழியா? இல்லை
இதுவே தலைவிதியா?
இதை மாற்றிட வேண்டாமா? உலகம்
போற்றிட வேண்டாமா?
கண்டும் கலங்கவில்லையா?
எண்ணியிருக்கின்றார்- நம்
கொல்லையில் துரோகிகள் நெஞ்சினில் நஞ்சுடன்
கொடும்சதி தீட்டுகிறார்!
என்பதை அறிவாயா? வெறும்
கோழையைப் போலநம் சோதரர் படும் துயர்
துடைத்திட மறுப்பாயா?
சக்தி இழந்துவிட்டோம்- நாம்
ஆதியில் அனைவரும் அன்புற வாழ்ந்ததை
அறியா திருந்துவிட்டோம்!
வையகம் இருப்பதுவா? நம்
செல்வங்கள் யாவையும் அந்நிய நாடுகள்
செல்லாய் அரிப்பதுவா?
சீர்மிக வாழ்ந்த கதை- அது
மொத்தமும் பழங்கதை, செப்பிடு வித்தையாய்
மொந்தை ஆகுவதா?
பிள்ளை மனம் கல்லு...
Monday, January 25, 2010
இன்றைய சிந்தனை
Sunday, January 24, 2010
இன்றைய சிந்தனை

உருவக கவிதை - 25
சதுரங்கச் சிப்பாய்கள்
பணியிட மாற்றம் கோரும்
ஊழியனின் வலியும் சூழலும்
ஊதியம் வழங்குபவருக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை.
பெரும் முதலிட்டு
நிறுவனம் அமைத்த
முதலாளியின் திட்டங்கள்
தொழிலாளிக்குப் புரிவதில்லை.
இரண்டும் நிகர்-
எதெரெதிர் துருவ அளவில்.
வர்ர்க்க வேற்றுமையின் வேதனை-
அண்டிப் பிழைக்கும்
தொழிலாளிக்கே என்றும்.
காசை விட்டெறிந்தால்
யாரும் சேவகம் செய்யலாம்.
கால் நோக நடந்தால்
எங்கும் வேலை செய்யலாம்.
சதுரங்க நகர்த்தல்களின்
பூடகம் அறியாத சிப்பாய்கள்.
எண்திசைகளிலும்
ஆதிக்கமாய் ஊடுருவும்
ராணிகள்.
கையாலாகாமல்
வேடிக்கை பார்க்கிறது
ராஜ சமூகம்.
எதிரணியுடன் தான்
மோதல் என்றில்லை.
முதலாளி- தொழிலாளிகளின்
சதுரங்க வாழ்வில்.
யூகமும்
வியூகமும் மறந்த
வேகமான நகர்த்தல்கள்...
பலியாகின்றன சிப்பாய்கள்.
இறுதியில்
ராணியும்,
வேடிக்கை பார்த்த ராஜாவும்.
* இக்கவிதை நண்பரும் பிரிகால் தொழிற்சங்க பிரமுகருமான ஸ்ரீ லக்ஷ்மண நாராயணன், கோவை - அவர்களுக்கு சமர்ப்பணம்.
.
Saturday, January 23, 2010
இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்
சுதந்திரப் பாதை நமது இரத்தத்தால் நிரம்ப வேண்டும், அதன்மூலம் வீர மரணம் நமக்கு வேண்டும். நண்பர்களே! உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள், இரத்தத்திற்கு இரத்தத்தாலேயே பழிதீர்க்க முடியும். இரத்தம்தான் சுதந்திரத்தின் விலை. என்னிடம் இரத்தம் கொடுங்கள்; உங்களுக்குச் சுதந்திரம் கொண்டு வருகிறேன். இது சத்தியம்.
( 1944 ஜூலை 4ம் நாள் இந்திய சுதந்திரக் கழகத்திற்கு நேதாஜி தலைமை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியது பற்றி, கிழக்காசிய இந்தியர்கள் கொண்டாடிய நேதாஜி வார விழாவில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஆற்றிய சொற்பெருக்கின் இறுதிப்பகுதி.)
வசன கவிதை - 41

காங்கிரஸ் கட்சியின்
உடலே நொந்து
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் (1897)
Friday, January 22, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 24
பிரக்ஞை
காகங்கள் கரையவும் சோம்பும்
வறண்ட மதியப் பொழுது.
சலனமற்ற காற்றால்
அறைக்குள் உலாவுகிறது புழுக்கம்.
என்னைப் பற்றிய கவலையின்றி
எதிர்சாரியில் விரைகின்றன வாகனங்கள்.
இதே நேரம் மெரீனா கடற்கரையில்
நடமாட்டம் குறைந்திருக்கும்;
வெயிலைப் பொருட்படுத்தாத
காதல் இணைகள்
காமத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கும்.
கடலலைகளும் மந்தமாய்
கரையைத் தழுவி ஊடும்
சாய்வு நாற்காலியில் இருந்தபடி
சிந்திப்பவனுக்கு உலகமே
மெதுவாகத் தான் சுழல்கிறது.
எங்கோ கோவில்மணி ஒலிக்கிறது.
இதே நேரம் கோவையில்
மத்தியப் பேருந்து நிலையத்தில்
நிமிடத்திற்கு இரண்டென
பேருந்துகள் கிளம்பியிருக்கும்.
புறப்பாட்டு நேரத் தகராறுகளும்
நடந்து கொண்டிருக்கலாம்.
திருப்பூரின் புழுதிச் சாலைகளிலும்
ஈரோட்டிலும் சேலத்திலும்
புற்றீசல் வாகனங்கள் இதே போல
விரைந்து கொண்டிருக்கும் -
ஹைதியில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தின் சுவடு அறியாமல்.
சென்னை அண்ணா சாலையில்
ஆறுவழிப்பாதையில் சீறும்
வாகனங்களில் ஆரோகணிப்பவர்களின்
பிரக்ஞை
பணியிடத்திலோ, வீட்டிலோ,
திரையரங்கிலோ உலவலாம்.
திருவனந்தபுரத்திலும் ஜெய்ப்பூரிலும்
இதே பயணம் வைத்திருக்கலாம்.
சாய்வு நாற்காலி ஆடுகிறது -
'கிறீச்... கிறீச்' என சத்தமிட்டபடி.
எதிர்சாரியில் கோலூன்றி நடக்கும்
முடவனின் தயக்க நடையிலும்
இதே 'கிறீச்' சத்தம்.
இந்நேரம் லண்டனிலும்
பாரிசிலும் வாஷிங்க்டனிலும்
கேட்குமா இதே சத்தம்?
இதே நேரம் மும்பையில்
பங்குச் சந்தை
பத்துப் புள்ளிகள் ஏறி
இருபது புள்ளிகள் இறங்கி
இருக்கலாம்.
கொல்கத்தாவில் 'பந்த்'தால்
நகரம் வெறிச்சோடிக் கிடக்கலாம்.
சாய்வு நாற்காலி
உறுத்துகிறது.
புதுடில்லியில் அமைச்சர்கள்
ஆவணக் கோப்புகளில்
கையொப்பம் இட்டுக் கொண்டிருக்கலாம்.
உடன் இளம் தேவதைகள்
உடல் அமுக்கி விடலாம்.
இதே புழுக்கம் அங்கும் இருக்கலாம்.
இந்நேரம் 'ராஜ்பாத்' அருகே
தடை மீறி ஊர்வலம் நடக்கலாம்.
விலைவாசியைக் கண்டித்த
ஆர்ப்பாட்டத்தில் தடியடியும் நடக்கலாம்.
அங்கும் இப்போது சுட்டெரிக்குமா?
அல்லது பனி பொழியுமா?
அங்கும் யாரேனும் இந்நேரம் இதே போல
சிந்திக்கக் கூடும்.
அறையில் மின்விசிறி
அபஸ்வரமாய் ஒலிக்கக் கூடும்.
எதிர்சாரியில் ஐஸ்வண்டி போகிறது.
ஜப்பானின் சிறுதீவு ஒன்றில்
எரிமலை புகையக் கூடும் இந்நேரம்.
எல்லா இடங்களிலும்
ஏதாவது நடந்துகொண்டு தானிருக்கும்.
எல்லாவற்றையும் தெரிந்து
என்ன ஆகப் போகிறது?
.
.
Thursday, January 21, 2010
இன்றைய சிந்தனை

வசன கவிதை - 40
அன்பை நேசியுங்கள்!
அன்பை விளையுங்கள்
அன்பை செலவு செய்யுங்கள்
அன்பை சேமியுங்கள்
அன்பையே பயன்படுத்துங்கள்
அன்பை நேசியுங்கள்!
இருகைகளிலும் ஐஸ்க்ரீம் வழிய
கால் ஷூவால் பொம்மையை எட்டி உதைக்கும்
அந்தப் பகட்டுக் குழந்தையின் கண்களில்
பரிதவிக்கும் சோகம்- ஏன்?
அதோ அந்த சேரிக் குழந்தையின்
சிரிப்பிலேயே ஒரு முழுமை.
நெருஞ்சிமுள் தடத்தில் கால் பதிய நடந்து
சிணுங்கும் அதன் கைகளில் பம்பாய் மிட்டாய்.
என்ன காரணம்?
பகட்டுப் போர்வையால் மூடப்பட்ட
பெற்றோரிடம் கிட்டாத பாசம்;
பஞ்சடைத்துப் போனாலும் பரிவோடு
தலை வருடும் கரங்கள்.
இவையே அடிப்படைகள்.
நிலையில்லாத பொருளால்
நிம்மதி நிலைக்காது.
நிலையானது அன்பு;
என்றும் அழியாதது பாசம்.
எல்லோருக்கும் தேவைப்படுவது
இந்த அடிப்படை தான்.
எனவே நேசியுங்கள்-
அன்பை-
மீண்டும், மீண்டும்.
.
Wednesday, January 20, 2010
இன்றைய சிந்தனை
சான்றோர் அமுதம்
தமிழ் மொழிக்கு பாரம்பரியமும் மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்து தான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். 'நறை செவிப் பெய்தன்ன' என்ற கம்பனின் சொற்றொடரை, 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காக்க வேண்டும்.
மரபுக் கவிதை - 69

தினமலரின் கொள்கை
வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும்
சேர்ந்தால் தான் செய்தி -அது
கிழக்கு வெளுக்கும் முன்னே கிடைத்தால்
மக்களுக்கும் திருப்தி!
உள்ளூர், வெளியூர், தேசம், உலகம்
உணர்த்துவதே செய்தி - அது
உடனே கிடைத்து அறிவு வளர்ந்தால்
உருவாகும் மகிழ்ச்சி!
நாட்டுவதே செய்தி - அது
வாட்டம் மிகுந்த ஏழைகள் துயரைத்
தீர்த்தால் மிக திருப்தி!
பொன்விழா கண்ட தினமலருக்கு
இவை தானே கொள்கை- இதைக்
கண்ணென வழங்கிய டி.வி.ஆரின்
நினைவே நம் பெருமை!
நன்றி: தினமலர் (ஈரோடு - 23.09.2001)
Tuesday, January 19, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 23
கட்டடங்களின் ஜனனம்
புத்தம் புதிய கட்டடங்கள் பிறக்கும்;
பழைய கட்டடங்கள் மெருகேறும்;
இடிந்த கட்டடங்கள் அகற்றப்படும்;
இடி விழுந்த கட்டடங்கள் பாழாகும்;
கட்டடக் கதை புரிய நாளாகும்.
காலிமனை தோறும் கட்டடம் எழும்;
கட்டடம் சார்ந்து சாலை உருவாகும்;
சாலைகள் கூடி ஊராகும்;
ஊரின் உயிர்ப்பு வாழ்வின் இருப்பு.
கொத்தனார்களும் தச்சர்களும் கொல்லர்களும்
பிறரைவிட அதிகமாய்
கட்டடங்களில் வாழ்கிறார்கள்.
மண், கல், உலோகம், மரம், எல்லாம்
கலந்த கலவையாக கட்டடங்கள்
ஏகாந்தமாய் நிமிர்கின்றன;
நர்த்தனம் இடுகின்றன.
ஓலைக்குடிசை, கூரைவீடு, மச்சுவீடு,
நான்மாடம், அடுக்குமாடிக் குடியிருப்பு,
எல்லா இடங்களிலும் கட்டடங்கள்-
உலகின் அடையாளம்;
மனிதர்களின் மறைவிடம்;
வாழ்வின் உறைவிடம்.
சிசு போலவே நகரமும்
தத்தித் தவழ்ந்து நடை பயிலும்;
தானே பேசி தகவமையும்;
வாழும் மக்களின் தேவைக்கேற்ப
நகரம் உருவாகும்.
வாழும் மக்களின் நடத்தைக்கேற்ப
நரகமாய் உரு மாறும்.
மனிதரால் தீர்மானிக்கப் படுவதில்லை
வாழ்வும் சாவும்;
நல்லதும் கேட்டதும் கட்டடத்தில் இல்லை.
கட்டுபவர்களின் மனமூலைகளில்
புதைந்திருக்கிறது கட்டடத்தின் வாஸ்து.
தென்மேற்கு, வடகிழக்கு,
வாயுமூலை, அக்னி மூலை...
எல்லாத் திசைகளிலும் இழுபடுகிறது-
கட்டடமும்.
வாஸ்து புருஷன் நித்திரையின்றி,
புரண்டு படுக்க இடமின்றி,
புழுக்கத்தால் ஒடுங்கிக் கிடக்கிறான்.
குட்டிச்சுவர்களின் அணிவகுப்பில்
கிராமம் தள்ளாடுகிறது.
இடப்பெயர்ச்சியால்
நகரம் அல்லாடுகிறது.
வெள்ளெருக்கும் பாதாள மூலியும்
நகர் மண்டபத்தில்
தொட்டிச் செடிகளாய் வரவேற்கின்றன.
சிசுக்களின் அழுகுரல் ஒலிக்கும்
இடங்களிலெல்லாம்
ஆலயமணி ஒலிக்கும்.
கட்டுமானச் சத்தங்கள்
நகரின் உச்சம்; கடவுளின் மிச்சம்.
சிசுக்களின் பிறப்பை
ரப்பர் குழாய்களில் தடுக்கும்
மனிதர்கள் பாவம்...
உச்சத்தையும் மிச்சத்தையும்
அச்சத்தால் தொலைக்கிறார்கள்.
கட்டடங்கள் பெருகும் இடம்
நகரமாகிறது;
சிசுக்கள் குறைந்த சமுதாயம்
தொலைந்து போகிறது.
வளர்ச்சியே வாழ்வு; தளர்ச்சியே மரணம்.
கட்டடப் பெருக்கம் கட்டுப்படாது;
கட்டாயப் படுத்தினால்
நகரத்தின் ஜீவகளை தட்டுப்படாது.
புதிய கட்டடங்கள் அமைவது
இளஞ்சிசுவின் ஜனனம் போல;
கட்டடம் பாழடைவது
வாழ்ந்து கேட்ட குடும்பத்தின் வதை போல.
.
Monday, January 18, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 64
குறுங்கவிகள் - 2
விடு
ஆசை விடு
விசனம் இல்லை.
நடு
மரம் நடு
குளிரும் மனம்.
கொடு
தானம் கொடு
குறையும் குற்றம்.
Sunday, January 17, 2010
இன்றைய சிந்தனை

மரபுக் கவிதை - 68

ஈசன் அருள்க!
மேகம் பொழிவதைத் தடுத்திடல் இயலும்?
மின்னல் ஒளிர்வதைத் தடுத்திடல் இயலும்?
தேகம் அழிவதைத் தடுத்திடல் இயலும்?
தென்றல் வருடலைத் தடுத்திடல் இயலும்?
வேகம் செறிந்த கவிஞனின் குரலை
வெற்றுச் செவிகள் புதைத்திட இயலும்?
தாகம் இல்லா மீனைப் போல
தளரா உழைப்பைத் தஞ்சம் கொள்க!
சோகம் கொண்டிட வேண்டாம் மனமே
சொந்தம் கொண்டிட இறைவன் உள்ளான்!
ஏகன் அநேகன் இறைவன் அருளால்
எல்லா நலமும் எங்கும் விளையும்!
.
Saturday, January 16, 2010
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 63
மனதில் துவர்ப்பு
நெஸ் காபி,
புரூ காபி...
விற்றபடி செல்கிறான்
ரயில்பயண வியாபாரி-
கழுநீர்த் தண்ணீர் என்றாலும்
காபித் தண்ணியாக.
'சூடான
சுவையான
கரம் மசாலா டீ'
கேட்கும்போதே
நாவின் மனக்கண்ணில்
சுவை விரிகிறது.
குடித்தபின் படர்கிறது-
நாவில் வெறுப்பும்
மனதில் துவர்ப்பும்.
.
மரபுக் கவிதை - 67

தரணிக்கு உவகை!
Friday, January 15, 2010
இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்
பூமியின் மீது தெய்வீக வடிவமான பசு, பராசக்தியின் சின்னமாகும். பசுவின் பெருமையை வேதங்களால் கூட விளக்க முடியாது. பசு அனைத்து உலகங்களுக்கும் தாய். இது மண்ணுலகில் எத்தனை சத்தியம்! இதைவிட அதிகமாக இதன் மகத்துவம் நுண்ணிய ஆன்மிக கோணத்தில் உள்ளது.
-மகரிஷி அரவிந்தர்
(இன்று மாட்டுப் பொங்கல்)
படியுங்கள்:
1. உதய ரேகையின் உன்னத ஒளி/ குழலும் யாழும் தேதி : 07.09.2009
2. சாதா'ரண' தொடர்பு /குழலும் யாழும் தேதி: 06.12.2009
புதுக்கவிதை - 62
விடியல்
காத்திருந்தேன்
காத்திருந்தேன்
வரவேயில்லை
விடியல்.
பிறகு தெரிந்தது-
காத்திருந்தால்
விரக்தி தான்
வரும்.
.
Thursday, January 14, 2010
மரபுக் கவிதை - 66

இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 22
மாயப்பிழை
முன்பு தொடுவானம்
இடையில்
கண்ணாடிப் பிம்பம்
எல்லாம் கானல் நீர்.
பெருமூச்சு விடுகிறது
என் நிழல்.
.
Wednesday, January 13, 2010
மரபுக் கவிதை - 66

பொங்கல் பொலிக!
பொங்கல் பொலிக, நன்மை மிளிருக!
எங்கள் எண்ணம் சிறக்க!
சங்கத் தமிழின் வன்மை ஓங்கிட
மங்களம் எங்கும் மிகுக!
என்பது இங்கே இல்லை!
வாழை, கொய்யா, மாம்பழம் எனினும்
வகையினில் பழங்கள் ஒன்றே!
உழவர் களிக்கும் திருநாள்!
கரும்பும் நெல்லும் கனிகளும்
கதிரினை வணங்கும் பெருநாள்!
காளையை அடக்கிடுகின்றா!
பாரத மண்ணின் பண்போடு கலந்த
பசுவை வணங்கிடுகின்றோம்!
மங்களம் எங்கும் மிகுக!
இன்றைய சிந்தனை

உருவக கவிதை - 21
சூரியோதயம்
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்..
களை இழந்த மாடத்திலே
முராரி ராகம்...
பாடலைக் கேட்கும்போதே
மனதில் சங்கடம்-
பாடியவரைப் பார்த்த பின்
மிகுந்த சங்கடம்.
ரயில் பயணங்களில்
கட்டைகளைத் தட்டியபடி
இந்தப் பாடலை பாடிக்கொண்டு
யாரேனும் உங்களிடம்
தகரக் குவளையை
நீட்டியிருக்கலாம்.
நீங்களும் ஒரு ரூபாயோ,
பத்து ரூபாயோ போட்டிருக்கலாம்.
அந்த குருட்டு பிச்சைக்காரனின்
இருப்பு உங்களை
சங்கடப் படுத்தாமல் இருந்திருந்தால்
தான் அதிசயம்.
ரயில் பயணம் முடிந்து வீடு வந்தும்
அவனை நீங்கள் நினைத்திருந்தால்
அது அதிசயம்.
வாழ்க்கை ரயிலில்
தட்டுத் தடுமாறி
பிச்சை வாழ்க்கை வாழும்
குருடர்களுக்கு
குருட்டுப் பிச்சைக்காரனை
நினைக்க ஏது நேரம்?
ஆயினும்,
கண்கெட்ட பின்னே
சூரிய உதயம்
எந்தப் பக்கம் போனால்
எனக்கென்ன போடி...
என்ற கானம்
ரீங்காரமிட்டபடி
தொடர்ந்து பயணிக்கிறது.
நாளையேனும்
அதிகாலை எழுந்து
சூரியோதயத்தைப்
பார்த்துவிட வேண்டும்.
Tuesday, January 12, 2010
இன்றைய சிந்தனை

விவேக அமுதம்
இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பார்க்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்...
-சுவாமி விவேகானந்தர்
(சென்னை சீடர்களுக்கு அமெரிக்காவிலிருந்து விவேகானந்தரின் கடிதம்)
நன்றி: http://www.tamilhindu.com/
மரபுக் கவிதை - 65

விவேகானந்தர்
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்
கட்டான உடலழகர் விவேகானந்தர்
நாவினிய சொல் படைத்தார் விவேகானந்தர்
நல்ல மனம் கொண்டவராம் விவேகானந்தர்
இந்துக்களின் பெருமை சொன்ன விவேகானந்தர்
இந்தியாவைச் சுற்றியவர் விவேகானந்தர்
குரு பெயரால் மடம் அமைத்தார் விவேகானந்தர்
குன்றாத மணிவிளக்கு விவேகானந்தர்
நேரான பார்வை கொண்ட விவேகானந்தர்
நேசித்தார் அனைவரையும் விவேகானந்தர்
வீரத்தை வேண்டியவர் விவேகானந்தர்
விழிகளிலே அருள் மிளிரும் விவேகானந்தர்
சிறப்பான செயல் புரிந்தார் விவேகானந்தர்
சிறுமை கண்டு பொங்கியவர் விவேகானந்தர்
பாரதத்தின் தவப்புதல்வன் விவேகானந்தர்
பண்பாட்டின் மறு உருவம் விவேகானந்தர்
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்
கடவுளுக்குப் பிரியமான விவேகானந்தர்!
Monday, January 11, 2010
இன்றைய சிந்தனை

மரபுக் கவிதை - 64

வசன கவிதை - 39

குருதி சிந்தி கொடி காத்தாய்?
குருதி சிந்தி கொடி காத்தாய்?
குருதி சிந்தி கொடி காத்தாய்?
குருதி சிந்தி கொடி காத்தாய்?
குருதி சிந்தி கொடி காத்தாய்?
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் (2001)
Sunday, January 10, 2010
இன்றைய சிந்தனை

மரபுக் கவிதை - 63

Saturday, January 9, 2010
இன்றைய சிந்தனை
உருவக கவிதை -20
யோக்கியதை
''நான் என்னும் சுயநலத்திலிருந்தே
நாம் என்னும் பொதுநலம்
பிறக்கிறது'' என்பது
என் கொள்கை என்று சொன்னால்
எனக்கு தலைக்கனம் என்பார்கள்.
ஆகவே 'நமது கொள்கை'.
அதாவது பொதுநலம் என்பது
சுயநலத்தின் மீதான போர்வை.
'எனது' என்பது எனது உடமையாக
இருக்குமானால் அது சுயநலம்.
அதுவே நாடாகவோ, மதமாகவோ,
மொழியாகவோ, கொள்கையாகவோ
இருந்தால் பொதுநலம்.
இப்படித்தான் பேசப்படுகிறது.
எனது உடமைக்கும் கொள்கைக்கும்
என்ன வேறுபாடு?
அத்வைதத்தில் சொல்லப்படும்
'நான் நீயே' தத்துவத்தைப் பற்றி
சிந்திக்க சிந்திக்க பைத்தியம் பிடிக்கிறது-
எனக்கு; உனக்கல்ல.
ஆயினும் 'உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது'
என்றால், உன்னால் ஏற்க முடியுமா?
பிறகு எப்படி, 'நமது' என்று எனது விருப்பத்தில்
உன்னையும் பங்குதாரராக்கும் போது
அமைதியாக இருக்க முடிகிறது?
எனது வீடு என்பது சுயநலம்;
எனது நாடு என்பது பொதுநலம் என்பது
முரண்பாடாகத் தோன்றவில்லையா?
எனது உலகம் என்று ஒருவன் கிளம்பினால்
'நாம்' சுயநலவாதி ஆகிவிட மாட்டோமா?
பலகோடி உயிர்கள் வாழும் உலகை
'எனது' என்று சொந்தம் கொண்டாடுவதும்
சுயநலம் அல்லவா?
சிந்திக்க சிந்திக்க 'நமது' தலை வெடிக்கிறது.
இதைப் பார்த்துச் சிரிக்க 'நமக்கு'
யோக்கியதை என்ன இருக்கிறது?
.
ஏதேதோ எண்ணங்கள்
வருத்தமான செய்தி
தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் புதுமையுடன் நடுநிலை மிகு பத்திரிகையாகவும், பாரம்பரியச் சிறப்பு, பாரதப் பண்பாடு காக்கும் விளக்காகவும் கடந்த 20மாதங்களாக வெளியான 'வார்த்தை' மாத இதழ் இந்த மாதம் வரவில்லை. விசாரித்தபோது, நின்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். வருத்தமாக உள்ளது.
ஆசிரியர் குப்புசாமியின் அனுபவக் கட்டுரை, இணையாசிரியர் சிவகுமாரின் துலாக்கோல் தலையங்கம், கோபால் ராஜாராம், துக்காராம் கோபால் ராவ் ஆகியோரின் கருத்துள்ள ஆய்வுக் கட்டுரைகள், சுகாவின் ரசனை, என அதன் பல அம்சங்களும் இனிமையான நினைவலைகளை எழுப்புகின்றன. என்ன காரணத்தால் பத்திரிகை நின்றது எனத் தெரியவில்லை.
குப்பை பத்திரிகைகள் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டும் தமிழகத்தில், தரமான 'வார்த்தை' தடுமாறியது, தமிழின் சாபக்கேடு தானோ?
Friday, January 8, 2010
இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்
மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் பிரச்சினைகளும் இருந்துகொண்டே இருக்கும்... இது வாழ்க்கையின் விதி. நிகழ்ச்சிகளால் ஆன உலகத்தை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் எதிர்நோக்கியே ஆக வேண்டும். தனது உலகத்தை சமாளிப்பதில் ஒருவன் சாமார்த்தியசாலியாக இருப்பானேயாகில் எந்தச் சம்பவமும் அவனை ஒடித்து அடிமைப் படுத்திவிட முடியாது.