பின்தொடர்பவர்கள்

Monday, January 11, 2010

வசன கவிதை - 39இதற்குத் தான் கொடிகாத்தாயா
திருப்பூர்க் குமரா?

நமது நாட்டில், நமது மண்ணில்
மூவர்ணக் கொடியேற்ற
நமது அரசே தடை விதிக்கவா,
தாலி கட்டிய மனைவியைத்
தவிக்கவிட்டு-
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

இத்தாலித் தாயை குஷிப்படுத்த
சுதந்திரத் தியாகிகளை தூக்கி எறியும்
ஈனப்பிறவிகள் அரசாளவா,
தன்னலம் துறந்து நாட்டுக்காக -
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

கொலை பாதகர்களும்
ஊழல் பெருச்சாளிகளும்
மத்திய அமைச்சர்களாகி
'மதச்சார்பின்மை' காக்கவா,
சொந்தம் மறந்து
தொழிலையும் கடந்து-
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

சாதி அரசியலால்
சாதிக்கும் தலைவரிடம்
சிக்கித் திணறும்
ஜனநாயகத்துக்காகவா,
வாழும் வயதில்
வாலிபம் கருதாமல்-
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

நாட்டைப் பிளந்த மதவெறியர்களுக்கு
சாமரம் வீசும் 'ஓட்டுண்ணி'களுககாகவா
வந்தேமாதர முழக்கத்துடன்-
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

முத்தமிழின் பேர் சொல்லி
மூவேழு தலைமுறைக்கும்
சொத்து சுகம் அத்தனையும்
சொந்தமாக்கி கொள்ளுகிற
அரசியல் கலைஞர்களுக்காகவா,
பெற்றோரைக் கருதாமல்
தாய்நாட்டுச் சிந்தையுடன் -
திருப்பூர்க் குமரா நீ
குருதி சிந்தி கொடி காத்தாய்?

நூற்றாண்டு கொண்டாடி
மேடையிலே முழங்கிவிட்டு,
வீட்டுக்குச் சென்றவுடன்
விளையாட்டாய் மறந்துவிடும்
இந்த மக்களுக்காகவா -
குருதி சிந்தி கொடி காத்தாய்
திருப்பூர்க் குமரா?

குறிப்பு: திருப்பூர்க் குமரன் நூற்றாண்டில் எழுதிய கவிதை
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் (2001)

.

No comments:

Post a Comment