Tuesday, January 26, 2010

மரபுக் கவிதை - 70



பெத்த மனம்

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு - அட
இது வெறும் பழமொழியா? இல்லை
இதுவே தலைவிதியா?
இதை மாற்றிட வேண்டாமா? உலகம்
போற்றிட வேண்டாமா?
(பெத்த மனம்)
அன்னை பாரதியின் அருந்தவப் புதல்வா
அன்னையின் அவல நிலை - நீ
கண்டும் கலங்கவில்லையா?
(பெத்த மனம்)
எல்லையில் எதிரிகள் தொல்லைகள் தந்திட
எண்ணியிருக்கின்றார்- நம்
கொல்லையில் துரோகிகள் நெஞ்சினில் நஞ்சுடன்
கொடும்சதி தீட்டுகிறார்!
(இதை மாற்றிட வேண்டாமா?)
ஏழைகள் அரைவயிற்றுக் கூழுக்கும் வழியில்லை
என்பதை அறிவாயா? வெறும்
கோழையைப் போலநம் சோதரர் படும் துயர்
துடைத்திட மறுப்பாயா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
சாதிகள் பல சொல்லி சச்சரவிட்டதால்
சக்தி இழந்துவிட்டோம்- நாம்
ஆதியில் அனைவரும் அன்புற வாழ்ந்ததை
அறியா திருந்துவிட்டோம்!
(இதை மாற்றிட வேண்டாமா?)
வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பதாய்
வையகம் இருப்பதுவா? நம்
செல்வங்கள் யாவையும் அந்நிய நாடுகள்
செல்லாய் அரிப்பதுவா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
சித்தரும் புத்தரும் பக்தரும் மறவரும்
சீர்மிக வாழ்ந்த கதை- அது
மொத்தமும் பழங்கதை, செப்பிடு வித்தையாய்
மொந்தை ஆகுவதா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு...
நன்றி: விஜய பாரதம் (10.07.1998)
.

No comments:

Post a Comment