பின்தொடர்பவர்கள்

Saturday, January 9, 2010

உருவக கவிதை -20


யோக்கியதை

''நான் என்னும் சுயநலத்திலிருந்தே
நாம் என்னும் பொதுநலம்
பிறக்கிறது'' என்பது
என் கொள்கை என்று சொன்னால்
எனக்கு தலைக்கனம் என்பார்கள்.
ஆகவே 'நமது கொள்கை'.

அதாவது பொதுநலம் என்பது
சுயநலத்தின் மீதான போர்வை.

'எனது' என்பது எனது உடமையாக
இருக்குமானால் அது சுயநலம்.
அதுவே நாடாகவோ, மதமாகவோ,
மொழியாகவோ, கொள்கையாகவோ
இருந்தால் பொதுநலம்.
இப்படித்தான் பேசப்படுகிறது.

எனது உடமைக்கும் கொள்கைக்கும்
என்ன வேறுபாடு?

அத்வைதத்தில் சொல்லப்படும்
'நான் நீயே' தத்துவத்தைப் பற்றி
சிந்திக்க சிந்திக்க பைத்தியம் பிடிக்கிறது-
எனக்கு; உனக்கல்ல.
ஆயினும் 'உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது'
என்றால், உன்னால் ஏற்க முடியுமா?

பிறகு எப்படி, 'நமது' என்று எனது விருப்பத்தில்
உன்னையும் பங்குதாரராக்கும் போது
அமைதியாக இருக்க முடிகிறது?

எனது வீடு என்பது சுயநலம்;
எனது நாடு என்பது பொதுநலம் என்பது
முரண்பாடாகத் தோன்றவில்லையா?
எனது உலகம் என்று ஒருவன் கிளம்பினால்
'நாம்' சுயநலவாதி ஆகிவிட மாட்டோமா?

பலகோடி உயிர்கள் வாழும் உலகை
'எனது' என்று சொந்தம் கொண்டாடுவதும்
சுயநலம் அல்லவா?

சிந்திக்க சிந்திக்க 'நமது' தலை வெடிக்கிறது.
இதைப் பார்த்துச் சிரிக்க 'நமக்கு'
யோக்கியதை என்ன இருக்கிறது?

எழுதிய நாள்: 26.09.1999
.

.

No comments:

Post a Comment