உவகைத் திருநாள்
தை மகள் வருகை- இந்தத்
தரணிக்கு உவகை
நைந்தவை ஒழிய - புது
நன்மைகள் பெருக,
தை மகள் வருகை- இந்தத்
தரணிக்கு உவகை!
தரணிக்கு உவகை!
அனுதினம் நம்மைக் காக்கும்
அருணனின் திறனைப் போற்றி,
இனிமைகள் தொடர வேண்டும்
இனிய நற் பெருநாள் பொங்கல்!
உணவினை நல்க வேண்டி
உழைத்திடும் உழவர் கூட்டம்
மணமிகு மகிழ்ச்சி கொள்ளும்
மங்கலத் திருநாள் பொங்கல்!
உழவனின் உற்ற தோழன்
உருக்கென நிகர்த்த தோளன்
கழனியில் கடமை ஆற்றும்
காளையின் பெருநாள் பொங்கல்!
குருதியை அமுதம் ஆக்கி
குவலயம் காக்க வாழும்
அறிய நற் பண்பின் அன்னை
ஆவினத் திருநாள் பொங்கல்!
அடக்கமும் அன்பும் சூழ
அழகுடன் அருளும் சேர
மடந்தையர் துணையைவேண்டும்
மாதவப் பெருநாள் பொங்கல்!
'அவனியில்அல்லல் மாயும்
அரும்பிடும் இன்ப வாழ்வு!
கவலைகள் கெடுக'வென்று
களித்திடும் திருநாள் பொங்கல்!
நன்றி: விஜயபாரதம் (12.01.2001)
No comments:
Post a Comment