நேதாஜி
விவேகானந்தரின்
வீர உரைகளால்
வார்க்கப்பட்டவன்.
ஆன்மீகத்தில்
ஆசை கொண்டு
அலைந்து கண்டவன்.
ஆங்கிலேயரின்
அடக்குமுறையால்
அவமானப்பட்டவன்.
ஐ. சி.எஸ்.சை
உதறியதாலே
அதிசயமானவன்.
சும்மா வராது
சுதந்திரம் என்று
உணர்ந்து சொன்னவன்.
காங்கிரஸ் கட்சியின்
காலித் தனங்களால்
காயம் பட்டவன்.
சிறைத் தண்டனையால்
சித்திரவதையால்
சிரமப் பட்டவன்.
உடலே நொந்து
உறுத்தியபோதும்
உறுதியானவன்.
அன்னியர் கண்ணில்
மண்ணைத் தூவி
பறந்து போனவன்.
ஹிட்லரை நேரில்
குற்றம் கூறிய
குறிஞ்சிப் பூவினன்.
சுதந்திரத் தீவின்
சுறுசுறுப்போடு
கை கோர்த்தவன்.
ஐ.என்.ஏ.வால்
ஆங்கிலேயரை
அலற வைத்தவன்.
எண்ணிய கனவை
எய்திடும் முன்னர்
எரிந்து போனவன்.
இன்றும் தேசிய
இதயங்களிலே
இனிது வாழ்பவன்.
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் (1897)
நன்றி: விஜயபாரதம் (07.03.1997)
.
No comments:
Post a Comment