Friday, January 29, 2010

ஏதேதோ எண்ணங்கள்


நூற்றி ஐம்பதாவது நாளை எட்டும் வலைப்பூ!

2009 செப்டம்பர் முதல் தேதி இரவு, வலைப்பூவுக்கான ஆயத்தங்களைச் செய்தபோது, எனக்குள் எந்தக் கற்பனையும் இல்லை. இதுவரை பல்வேறு பத்திரிகைளில் பிரசுரமான எனது கவிதைகளை பதிவு செய்வது என்ற ஒரே நோக்கம் தான் அப்போது இருந்தது. 'குழலும் யாழும்' என்ற பெயர் கூட அந்த நேரத்தில் திடீரென உத்தேசித்தது தான்.
எழுத எழுத, இதில் சுவை கூடியது. கவிதைக்குப் பொருத்தமான 'இன்றைய சிந்தனை'களை இடுவது என முடிவு செய்தபோது ஒரு மாதம் தாண்டி இருந்தது. அதன் பிறகு, சிந்தனைக் கருத்துகளுக்காகவே எனது வீட்டு நூலகப் புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தேன். அதன் பலன் உடனே தெரிந்தது. புதிய கவிதைகளுக்கான ஊற்றுகள் பல அதில் கிடைத்தன. பழைய கவிதைகள் மட்டுமல்லாது புதிய கவிதைகளும் வலைப்பூவில் இடம்பெறத் துவங்கின.
நண்பர்கள் பலர் படித்துப் பாராட்டியதுடன், பின்தொடரவும் செய்து, என்னை ஊக்குவித்தனர். எனினும், பொதுவான வலைப்பூ தொகுப்பு தளங்களின் பக்கம் எனது கவனம் அப்போது செல்லவில்லை. நண்பர் அசோக், சங்கமேஸ்வரன் ஆகியோரது அறிவுறுத்தல்களால், சென்ற மாதம் தான் அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினேன். அதன் பலனாக, தமிழ்மணம்http://www.tamilmanam.net/todays_posts.php?pageno=27, தமிலீஷ் http://www.tamilish.com/upcoming தளங்களில் கவிதை இடம் பெறத் துவங்கியுள்ளது. எனினும், அந்த வலைப்பூ தொகுப்புத் தளங்களைக் காணும்போது தான், நான் செல்ல வேண்டிய தூரமும் இலக்கும் தெரிய வந்தன.
இன்றைய கவிஞர்கள், தங்கள் மனத்துடிப்புகளை எழுத வடிகாலாக இணையதள வலைப்பூக்கள் பெரும் உதவி புரிகின்றன. இனிமேல், திறமை உள்ளவர் எங்கிருந்தாலும் அதை மூடி வைக்க முடியாது. வெகுஜன இதழ்களும் இலக்கிய இதழ்களும் மறுதலித்தாலும், வலைப்பூக்கள், கவிதைகளை காற்றில் இசைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழலில், எனது கவிதைகள் எனது ஆழ்மன பிம்பங்களாய் இங்கு பதிவாகின்றன. 'கடை விரித்தேன் - கொள்வாரில்லை' என்ற புலம்பல்கள் இனி, தேவையில்லை.
'குழலும் யாழும்' அனுபவத்தில், ' மலரும் வண்டும்' http://malarumvandum.blogspot.com/(வார இடுகை), 'ஞ்பூ வணக்கம்' http://panjaboothavanakkam.blogspot.com/(மாத இடுகை) ஆகிய புதிய வலைப்பூக்களும் தொடுத்திருக்கிறேன். அவற்றையும் வாசித்து, விமர்சித்தால், அவற்றை மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.
''உள்ளத்துள்ளது கவிதை'' என்று சொன்ன மகாகவி பாரதியை வணங்கி, 150 வது மைல்கல்லைக் கடக்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் எனது வலைப்பூக்கள் மிளிரட்டும்.

-வ.மு.முரளி.

No comments:

Post a Comment