Tuesday, January 5, 2010

வசன கவிதை - 37



அம்மா


என்னைப் போலவே
அம்மாவுக்கும் கோபமுண்டு.
ஒருமுறை கோபத்தில்
மண்டையில் நறுக்கென்று
கொட்டிய நினைவுண்டு;
எதற்காக என்ற நினைவில்லையேனும்
ஒரு மகா தவறைச்
செய்திருக்க வேண்டும்.

ஆயினும் அவளின்
அன்புப்பிடியில்
நோயை மறந்து தூங்கியதுண்டு.
சாப்பிட்ட மருந்தும்
சளியும் கோழையும்
கையில் ஏந்திய
அம்மாவின் முகத்தை
மறக்க முடியுமா?

நகரத்து விடுதிச் சாப்பாட்டில்
வயிற்றில் புண்ணும்
உடம்பில் சதையும் போட்டிருந்தும்
'என்னடா இப்படி இளைச்சிருக்கிறே'
என்ற அம்மாவின் கேள்வி
இல்லாமல் இராது.

அம்மாவைப் போலவே
நானும் ஜோசியப் பைத்தியம்.
போன வாரம் ஜோசியம் பார்த்ததில்
மனதில் சஞ்சலம்.

'மாத்ரு தேக பீடை'யாம்...
இனிமேல் ஜோசியம்
பார்க்கக் கூடாது.
இந்த வாரம் போனால்...
ஒரு வாரமாவது அம்மாவுடன்
இருந்துவிட்டு வர வேண்டும்.
நன்றி: சஞ்சீவினி
(வந்.சரஸ்வதி தாயி நூற்றாண்டு விழா மலர்- டிசம்பர் 2009 - பக்:39)
.
.

No comments:

Post a Comment