Saturday, January 30, 2010

புதுக்கவிதை - 67



ஜனவரி முப்பது

இன்று காந்திஜி இறந்த தினம்.

மாலைகளைச் சுமக்க முடியாமல்
தள்ளாடும் அவர் மேல்
காகம் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கிறது.

பாவம் காந்திஜி!

அருகில் நெருங்கினால்
'மணம்' வீசுகிறதே?
யாரோ சாணாபிஷேகம்
செய்திருக்க வேண்டும்.

சுதந்திர ஜனநாயகம்!

அவர் காங்கிரஸ் கட்சி
என்றல்லவா எண்ணியிருந்தேன் -
எல்லாக் கட்சிக் கொடிகளையும்
ஏந்தியிருக்கிறாரே?

பரந்த மனப்பான்மை?
இல்லை...
பக்கா சுயநலம்!

சிற்பி ஊன்றுகோலை
கையுடன் நன்கு
பிணைத்திருக்கலாம் -
பாருங்கள்,
காந்திஜி ஊன்றுகோலில்லாமல்
தள்ளாடுவதை!

கட்சிக்கொடிகள்
இருப்பதால் தான்
அவர்
நின்று கொண்டிருக்கிறார்!

கட்சிகள் வாழ்க!

என்ன கண்ணாடியையும்
காணவில்லை?
ஊன்றுகோலை உருவியவன் தான்
கண்ணாடியையும்
களவாடியிருப்பான்!

பரவாயில்லை,
அவருக்கு எளிமையே
விருப்பம்!
நல்ல வேளை
உடையையாவது சிமென்ட்டில்
செய்தார்கள்!

ஒருவரையே
பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?
இந்தப்புறம்
ஒருவர் இருப்பாரே?

ஆஹா...
அதோ...
நன்றி: விஜயபாரதம் (29.01.1999)
.

No comments:

Post a Comment