பின்தொடர்பவர்கள்

Tuesday, January 19, 2010

உருவக கவிதை - 23கட்டடங்களின் ஜனனம்

புத்தம் புதிய கட்டடங்கள் பிறக்கும்;
பழைய கட்டடங்கள் மெருகேறும்;
இடிந்த கட்டடங்கள் அகற்றப்படும்;
இடி விழுந்த கட்டடங்கள் பாழாகும்;
கட்டடக் கதை புரிய நாளாகும்.

காலிமனை தோறும் கட்டடம் எழும்;
கட்டடம் சார்ந்து சாலை உருவாகும்;
சாலைகள் கூடி ஊராகும்;
ஊரின் உயிர்ப்பு வாழ்வின் இருப்பு.

கொத்தனார்களும் தச்சர்களும் கொல்லர்களும்
பிறரைவிட அதிகமாய்
கட்டடங்களில் வாழ்கிறார்கள்.
மண், கல், உலோகம், மரம், எல்லாம்
கலந்த கலவையாக கட்டடங்கள்
ஏகாந்தமாய் நிமிர்கின்றன;
நர்த்தனம் இடுகின்றன.

ஓலைக்குடிசை, கூரைவீடு, மச்சுவீடு,
நான்மாடம், அடுக்குமாடிக் குடியிருப்பு,
எல்லா இடங்களிலும் கட்டடங்கள்-
உலகின் அடையாளம்;
மனிதர்களின் மறைவிடம்;
வாழ்வின் உறைவிடம்.

சிசு போலவே நகரமும்
தத்தித் தவழ்ந்து நடை பயிலும்;
தானே பேசி தகவமையும்;
வாழும் மக்களின் தேவைக்கேற்ப
நகரம் உருவாகும்.
வாழும் மக்களின் நடத்தைக்கேற்ப
நரகமாய் உரு மாறும்.

மனிதரால் தீர்மானிக்கப் படுவதில்லை
வாழ்வும் சாவும்;
நல்லதும் கேட்டதும் கட்டடத்தில் இல்லை.
கட்டுபவர்களின் மனமூலைகளில்
புதைந்திருக்கிறது கட்டடத்தின் வாஸ்து.

தென்மேற்கு, வடகிழக்கு,
வாயுமூலை, அக்னி மூலை...
எல்லாத் திசைகளிலும் இழுபடுகிறது-
கட்டடமும்.
வாஸ்து புருஷன் நித்திரையின்றி,
புரண்டு படுக்க இடமின்றி,
புழுக்கத்தால் ஒடுங்கிக் கிடக்கிறான்.

குட்டிச்சுவர்களின் அணிவகுப்பில்
கிராமம் தள்ளாடுகிறது.
இடப்பெயர்ச்சியால்
நகரம் அல்லாடுகிறது.
வெள்ளெருக்கும் பாதாள மூலியும்
நகர் மண்டபத்தில்
தொட்டிச் செடிகளாய் வரவேற்கின்றன.

சிசுக்களின் அழுகுரல் ஒலிக்கும்
இடங்களிலெல்லாம்
ஆலயமணி ஒலிக்கும்.
கட்டுமானச் சத்தங்கள்
நகரின் உச்சம்; கடவுளின் மிச்சம்.
சிசுக்களின் பிறப்பை
ரப்பர் குழாய்களில் தடுக்கும்
மனிதர்கள் பாவம்...
உச்சத்தையும் மிச்சத்தையும்
அச்சத்தால் தொலைக்கிறார்கள்.

கட்டடங்கள் பெருகும் இடம்
நகரமாகிறது;
சிசுக்கள் குறைந்த சமுதாயம்
தொலைந்து போகிறது.
வளர்ச்சியே வாழ்வு; தளர்ச்சியே மரணம்.
கட்டடப் பெருக்கம் கட்டுப்படாது;
கட்டாயப் படுத்தினால்
நகரத்தின் ஜீவகளை தட்டுப்படாது.

புதிய கட்டடங்கள் அமைவது
இளஞ்சிசுவின் ஜனனம் போல;
கட்டடம் பாழடைவது
வாழ்ந்து கேட்ட குடும்பத்தின் வதை போல.


.

No comments:

Post a Comment