Saturday, August 28, 2010

எண்ணங்கள்

முதுகெலும்பு இல்லாதவர்களா மக்கள்?
- வ.மு.முரளி

மத்திய அமைச்சர் ஒருவரின் வாரிசு அவர். 'இந்தியாவின் எதிர்காலமே வருக' என்று அவருக்கு 40 அடி உயர பிளக்ஸ் விளம்பரம். பின்னலாடை நகரமான திருப்பூரில் சில வாரங்களுக்கு முன் பல இடங்களில் இத்தகைய கட்அவுட்களைக் காண நேர்ந்தது. இத்தனைக்கும் அவர் மாவட்ட நிர்வாகியோ, வார்டு கவுன்சிலரோ கூட இல்லை.

அதற்கு இரு வாரங்கள் முன்னர்தான், துணைமுதல்வர் வருகைக்காக, திருப்பூர் நகரில் எங்கெங்கு பார்த்தாலும் வரவேற்பு வளைவுகளும், பிரமாண்ட பேனர்களும் ஆளும் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சரிந்து விழுந்ததில், வாகனத்தில் சென்றவர் காயமடைந்தார்.

இதுபற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானவுடன், விளம்பர பேனர்களை அகற்றுமாறு துணைமுதல்வரே உத்தரவிட்டதாகக் கூறினார்கள். உடனே, சில பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன. அதற்கே நகர மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

ஆளும்கட்சிதான் என்றில்லை; பிரதான எதிர்க்கட்சியான அதிமுக திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பிரமாண்ட பிளக்ஸ் விளம்பரங்கள் பார்வையாளர்களை மிரட்டின.

ஒருவகையில் மக்கள் திரளைக் கூட்டுவதிலும், உற்சாக மனோபாவத்தை உருவாக்குவதிலும், இத்தகைய பிரமாண்ட விளம்பரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஊடகங்களும்கூட, இத்தகைய பிரமாண்டங்களையே படங்களாகப் பிரசுரிக்கின்றன.

சாதாரண கொண்டைக்கடலைச் சுண்டலானாலும், 'சூடான, சுவையான, மசாலா சுண்டல்' என்று கூவும்போதுதானே, பழைய சுண்டலும்கூட விலை போகிறது? அரசியல்கட்சிகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது வியப்பளிக்கவில்லை. ஆயினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும் என்பதை அரசியல்கட்சியினர் உணர்வதில்லை.

நமது அரசியலில் தவிர்க்க முடியாத அம்சமாக, பிரமாண்ட கட்அவுட்கள் இடம் பிடித்து பல ஆண்டுகளாகிவிட்டன. நவீனத் தொழில்நுட்பத்தின் வரவால், இந்த உத்தி இப்போது பல மடங்காகி இருக்கிறது எனலாம். துணி பேனர்களும், சுவரொட்டிகளும் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அந்த இடத்தில், கவர்ச்சிகரமான பிளக்ஸ் விளம்பரங்கள் அசுரபலத்துடன் ஆட்சி செய்கின்றன.

அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்கள் விளம்பரம் வைப்பதும், கொடி கட்டுவதும் புதிதல்ல. ஒருவகையில், கட்சி மீதான அபிமானத்தை வெளிப்படுத்த, தங்கள் உழைப்பை தொண்டர்கள் வழங்க இது ஒரு வாய்ப்பாக இருந்ததுண்டு.

ஆனால், இப்போது கட்சித் தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க மெனக்கெடுவதில்லை. இதற்கென்று பிரத்யேக ஒப்பந்ததாரர்கள் இப்போது உள்ளனர். இதுவும் ஒரு நல்ல தொழிலாகிவிட்டது. ஒரே ஒப்பந்ததாரரே, எல்லா கட்சியினருக்கும் இத்தகைய விளம்பரப் பணிகளைச் செய்து விடுகின்றனர்.

தேர்தல் காலம் மட்டுமல்லாது, அமைச்சர் வருகை, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் இப்போது விளம்பர மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவாகிறது? இந்தச் செலவுகளை யார் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். இத்தகைய விளம்பரங்கள் முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்குமே வழிவகுப்பது அனைவரும் அறிந்தது தான்.

விளம்பர பேனர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் அரசியல்கட்சிகளால் மதிக்கப்படுவதில்லை. ஆளும்கட்சியினர் சாலையை மறைக்கும் அளவுக்கு பேனர்கள் வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சியினரும், தங்கள் பங்குக்கு போட்டியிட்டுக் கொண்டு பேனர்கள் வைக்கின்றனர்.

சமீபகாலமாக, சாலைகளில் இயந்திரத்தால் துளையிட்டு இரும்புக்குழாய்களில் கட்சிக்கொடிகளைப் பதிக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதிலும் ஆளும்கட்சிக்குத்தான் முன்னுரிமை. அண்மையில் கோவை, சேலம் நகரங்களுக்கு முதல்வர் கருணாநிதி வருகை தந்தபோது, நெடுஞ்சாலைகள் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை.

ஒருநாள் கூத்துக்காக சாலைகளில் துளையிட்டு, குழிபறித்து கொடி கட்டுபவர்கள், விழா முடிந்தவுடன் அவரவர் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விடுகிறார்கள். ஏற்கனவே தரமின்றி இருக்கும் சாலை, கொடிக்கு வெட்டிய குழிகளால் மேலும் சிதைந்து, வாகனஓட்டிகளை பதம் பார்க்கிறது.

சாதாரணமாக, குடிநீர்க்குழாய் இணைப்புக்காக விண்ணப்பிக்கும்போது, சாலையில் குழி பறிக்கவும், குழாய் பதித்த பிறகு சாலையைச் செப்பனிடவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தனிக்கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், தோண்டப்படும் குழிகள் சரியாக மூடப்படுவதில்லை.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக சாலைகள் மேலும் பாழ்படுத்தப்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, தார்ச்சாலையின் ஆயுளைக் குறைக்கின்றன.

சாலைகளின் இருபுறமும் இயந்திரத்தால் துளையிட்டு கட்சிக்கொடிகளை இரும்புக் கம்பிகளில் ஊன்றிவைக்கும் நடைமுறை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.

சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பது, வாகனஓட்டிகளின் முதுகெலும்பை கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனால்தான், முக்கிய பிரமுகர்கள் வரும் சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்படுகின்றன: பள்ளங்கள் மேவப்பட்டு புது தார்ச்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

அதே பிரமுகர்களுக்காக வரவேற்பு விளம்பரம் வைக்கத் தோண்டப்படும் குழிகளால், மக்களின் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.

ஆட்சியாளர்களுக்கு ஒரு நீதி; சாமானிய மக்களுக்கு ஒரு நீதி. இதைக் கண்டிக்கும் "முதுகெலும்பு' யாருக்கும் இல்லை என்று அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.
----------------------------------------------------------------------
நன்றி: தினமணி (27.08.2010)
காண்க: தினமணி
.

2 comments:

Anonymous said...

அருமையான கட்டுரை முரளி. சாலைகளை பாழபடுத்திவிட்டு எனக்கென்ன என்று சென்று விடுகிறார்கள், அரசியல்வாதிகளின் அடிவருடிகள். உண்மையில் அரசாங்க , தனியார் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக சாலைகளை தோண்டுகிறார்கள். அதில் இருக்கும் கவனம் , உழைப்பு அவற்றை மூடும்போது இருப்பதில்லை. அப்படியே மூடினாலும் அந்த இடமே ஒரு சிறு குன்று போல் காட்சியளிக்கும். கடுமையான சட்டம், அவற்றை நிறைவேற்ற பாரபட்சமற்ற அணுகுமுறை தேவை. நம் திருநாட்டில் அதற்கெல்லாம் சான்சே இல்லை, நண்பரே.. !!

வ.மு.முரளி. said...

Thanks for your comments, Chandanar.

Post a Comment