Friday, January 22, 2010

உருவக கவிதை - 24



பிரக்ஞை

காகங்கள் கரையவும் சோம்பும்
வறண்ட மதியப் பொழுது.
சலனமற்ற காற்றால்
அறைக்குள் உலாவுகிறது புழுக்கம்.
என்னைப் பற்றிய கவலையின்றி
எதிர்சாரியில் விரைகின்றன வாகனங்கள்.

இதே நேரம் மெரீனா கடற்கரையில்
நடமாட்டம் குறைந்திருக்கும்;
வெயிலைப் பொருட்படுத்தாத
காதல் இணைகள்
காமத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கும்.
கடலலைகளும் மந்தமாய்
கரையைத் தழுவி ஊடும்

சாய்வு நாற்காலியில் இருந்தபடி
சிந்திப்பவனுக்கு உலகமே
மெதுவாகத் தான் சுழல்கிறது.
எங்கோ கோவில்மணி ஒலிக்கிறது.

இதே நேரம் கோவையில்
மத்தியப் பேருந்து நிலையத்தில்
நிமிடத்திற்கு இரண்டென
பேருந்துகள் கிளம்பியிருக்கும்.
புறப்பாட்டு நேரத் தகராறுகளும்
நடந்து கொண்டிருக்கலாம்.
திருப்பூரின் புழுதிச் சாலைகளிலும்
ஈரோட்டிலும் சேலத்திலும்
புற்றீசல் வாகனங்கள் இதே போல
விரைந்து கொண்டிருக்கும் -
ஹைதியில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தின் சுவடு அறியாமல்.

சென்னை அண்ணா சாலையில்
ஆறுவழிப்பாதையில் சீறும்
வாகனங்களில் ஆரோகணிப்பவர்களின்
பிரக்ஞை
பணியிடத்திலோ, வீட்டிலோ,
திரையரங்கிலோ உலவலாம்.
திருவனந்தபுரத்திலும் ஜெய்ப்பூரிலும்
இதே பயணம் வைத்திருக்கலாம்.
சாய்வு நாற்காலி ஆடுகிறது -
'கிறீச்... கிறீச்' என சத்தமிட்டபடி.

எதிர்சாரியில் கோலூன்றி நடக்கும்
முடவனின் தயக்க நடையிலும்
இதே 'கிறீச்' சத்தம்.
இந்நேரம் லண்டனிலும்
பாரிசிலும் வாஷிங்க்டனிலும்
கேட்குமா இதே சத்தம்?

இதே நேரம் மும்பையில்
பங்குச் சந்தை
பத்துப் புள்ளிகள் ஏறி
இருபது புள்ளிகள் இறங்கி
இருக்கலாம்.
கொல்கத்தாவில் 'பந்த்'தால்
நகரம் வெறிச்சோடிக் கிடக்கலாம்.
சாய்வு நாற்காலி
உறுத்துகிறது.

புதுடில்லியில் அமைச்சர்கள்
ஆவணக் கோப்புகளில்
கையொப்பம் இட்டுக் கொண்டிருக்கலாம்.
உடன் இளம் தேவதைகள்
உடல் அமுக்கி விடலாம்.
இதே புழுக்கம் அங்கும் இருக்கலாம்.

இந்நேரம் 'ராஜ்பாத்' அருகே
தடை மீறி ஊர்வலம் நடக்கலாம்.
விலைவாசியைக் கண்டித்த
ஆர்ப்பாட்டத்தில் தடியடியும் நடக்கலாம்.
அங்கும் இப்போது சுட்டெரிக்குமா?
அல்லது பனி பொழியுமா?
அங்கும் யாரேனும் இந்நேரம் இதே போல
சிந்திக்கக் கூடும்.
அறையில் மின்விசிறி
அபஸ்வரமாய் ஒலிக்கக் கூடும்.

எதிர்சாரியில் ஐஸ்வண்டி போகிறது.
ஜப்பானின் சிறுதீவு ஒன்றில்
எரிமலை புகையக் கூடும் இந்நேரம்.
எல்லா இடங்களிலும்
ஏதாவது நடந்துகொண்டு தானிருக்கும்.
எல்லாவற்றையும் தெரிந்து
என்ன ஆகப் போகிறது?
.
.

4 comments:

பா.ராஜாராம் said...

பிடிச்சிருக்கு முரளி.

வ.மு.முரளி. said...

பாராட்டுக்கு நன்றி ராஜாராம். உங்கள் வலைப்பூவும் நன்று.

Unknown said...

R U Read My ravelusamy.blogspot.com?

வ.மு.முரளி. said...

நல்ல பதிவு நண்பரே. ஜெயமோகன் (http://ravelusamy.blogspot.com/2010/01/blog-post_5122.html) கூறிய பதில் அருமை. ஊழலுக்கு எதிரரான உங்கள் பயணம் தொடரட்டும்.

Post a Comment