Tuesday, October 12, 2010

உருவக கவிதை - 65




ஆறறிவு
அற்ற
குரங்குகள்



.

குரங்குகள் அடித்துக் கொள்வதுண்டு
உணவுக்காக,
கலவிக்காக,
அதிகாரத்திற்காக.

யாரேனும் வீசி எறியும்
வாழைப்பழத்திற்காக
பல்லைக் காட்டி உறுமி
சண்டையிடும் குரங்குகள்...

துணைக் குரங்கை
வேறு குரங்கு கைப்பிடிக்காமல் தடுக்க
சீறும் குரங்குகள்...

தனது எல்லைக்குள் அந்நியக் குரங்கு
பிரவேசிக்காமல் தடுக்கும்
கோபாவேசக் குரங்குகள்.

தனக்குத் தானே வரையறுத்த
கட்டுப்பாடுகள் உண்டெனினும்

குரங்குகளுக்கென தனித்த
அரசியல் சாசனம் இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்திலும்
குரங்குகள் எல்லை மீறாது.
அடுத்த குரங்கின் வாலில்
தீ மூட்டி கைகொட்டாது.

வன எல்லை ஆட்சியைக் காக்க
இடம் விட்டு இடம் சகாக்களை கடத்தி
மிரட்டத் தெரியாது.

தனக்கென சட்டம் வகுத்துக்கொண்டு
அதை மீறத் தெரியாத
பகுத்தறிவு சிறிதும் கிடையாது.

வாலறிவன் தாள் வணங்கும்
மனிதருக்கு வால் இல்லை;
குரங்குகளுக்கு அறிவு இல்லை.

வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.


.

11 comments:

கவி அழகன் said...

தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமை

Unknown said...

மனிதர்களின் குணமும், குரங்கின் குணமும் பல்வேறு சமயங்களில் ஒன்றுபோல் இருந்தாலும் வேறு வேறுதான் ...

வினோ said...

/ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை. /

மனிதன் மட்டும் ஏன் ?

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை தூள் வாத்தியாரே

சி.பி.செந்தில்குமார் said...

என்னைக்கவர்ந்த வரிகள் பல.ஒரு டவுட் ..>>>
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.>>>

கடைசி வார்த்தை கொள்வதில்லையா? கொல்வதில்லையா?

நிலாமதி said...

அழகான் உருவகக் கவிதை பாராட்டுக்கள். மனிதன் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

நிலாமதி said...

என் தளத்துக்கும் வருகை தாருங்கள். நன்றி.
mathinilaa.blogspot.com

Kousalya Raj said...

வித்தியாசமான சிந்தனை.....நன்றாக இருக்கிறது.

அம்பிகா said...

/ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.
சிந்திக்கவைக்கும் வரிகள்.

வ.மு.முரளி. said...

நண்பர் சி.பி.செந்தில்குமாருக்கு
உங்கள் கருத்திற்கு நன்றி.
கடைசி வரியின் வார்த்தை .....அடித்துக் 'கொல்வதில்லை' என்பது தான்.
குரங்குகள் கோபத்தில் அடித்துக் கொள்ளலாம். கபடமாக அடித்துக் கொல்லாது.

வ.மு.முரளி. said...

அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.
கர்நாடகா மாநிலத்தில் கட்சித்தாவல் நடந்து நாறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகத் தகவல். குதிரைகளையும் கேவலப்படுத்துகிறார்கள். குரங்குகள் போல தாவுவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. பத்திரிகைகள் குரங்குகளையும் கேவலப்படுத்துகின்றன. குரங்குகளுக்கும் குதிரைகளுக்கும் ஆறறிவு இருக்கிறதா என்ன?
உங்கள் அனைவர் கருத்துக்களுக்கும் நன்றி.

Post a Comment