Saturday, October 9, 2010

எண்ணங்கள்


அடிப்பது போல அடிப்பதும், அழுவது போல அழுவதும்...

தீர்க்க முடியாத பிரச்னையா? ஒரு விசாரணைக் குழு அமைத்தால் போயிற்று' என்ற தத்துவம் அரசியல் உலகில் பிரசித்தம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவோ, பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தவிர, இந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதறிவிடும் நிலை காணப்படுவதால், பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

ஆங்கிலக்கல்வி மோகத்தால் அல்லாடும் பெற்றோரை நன்றாகப் புரிந்துகொண்ட தனியார் பள்ளிகள், தன்னிச்சையான போக்குடன் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற அரசு, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது. பள்ளிகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க இக்குழு தேவையான பரிந்துரைகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இக்குழுவும், தனியார் பள்ளிகளிடம் நாற்பதுக்கு மேற்பட்ட கேள்விகள் அடங்கிய ஆய்வுநிரலை வழங்கி அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஏற்ப புதிய கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே 7-ம் தேதி அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டண நிர்ணயத்தில் சரியான அளவுகோல்கள் பின்பற்றப்படவில்லை; இதைக் கொண்டு பள்ளிகளை நடத்த இயலாது என்று கூறி தனியார் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பள்ளி தொடங்கும் காலகட்டத்தில் வந்த கோவிந்தராஜன் குழுவின் ஆணையால் நிச்சயமற்ற நிலை ஒருவார காலத்துக்கு காணப்பட்டது. சில பள்ளிகள் மட்டுமே குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை அடுத்து, கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பளித்தது. அதையேற்று, மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

அதற்குள் பள்ளிகள் துவங்கிவிட்டதால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வெளிப்படையாகவும், கூடுதல் கட்டணத்தை மறைமுகமாகவும் பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்க பெற்றோரும் தயங்கினர். அவரவர் குழந்தைகளின் கல்விப் பிரச்னை அவரவர்களுக்கு.

சில இடங்களில் மட்டும் பெற்றோர் போராட்டங்களை நடத்தினர். அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது அரசோ, கல்வித்துறையோ கடும் நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

இதனிடையே உயர் நீதிமன்றத்தை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண நிர்ணயப் பரிந்துரைக்கு இடைக்காலத் தடையை செப். 14-ல் பெற்றது. அதன் பிறகு, முன்பு கூடுதல் கட்டணத்தை வசூலிக்காத பள்ளிகளும் அவசரமாக கட்டணங்களை வசூலித்தன. இதற்கு எழுந்த எதிர்ப்பையும் பள்ளிகளோ, அரசோ பொருள்படுத்தவே இல்லை.

தர்மபுரி அருகே தனியார் பள்ளி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செப். 17-ல் தனியார் பள்ளிகள் அறிவித்த ஒருநாள் விடுமுறைக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும்கூட, பல பள்ளிகள் இயங்கவில்லை. அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன்; நீ அழுவது போல அழு' என்று, அரசும் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் பயனாக, தனியார் பள்ளிகள் பெற்ற இடைக்காலத் தடையை அக். 4-ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தவிர, தனியார் பள்ளிகளுடன் ஆலோசித்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவுக்கு 4 மாத கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கல்வியாண்டு முடியும் நேரத்தில் இக்குழு அறிவிக்கும் புதிய கட்டணத்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பது புலப்படவில்லை.

தனியார் பள்ளிகளுடன் முன்கூட்டியே தீர ஆலோசனை நடத்தி, அவர்களும் குறைகூற இயலாத வகையில் பள்ளிக் கட்டணங்களை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்திருந்தால் இந்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது, குழுவின் பரிந்துரையை தயவுதாட்சண்யமின்றி கல்வித்துறை அமலாக்கம் செய்திருந்தால் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகமாகவே காட்சி அளிக்கும் தற்போதைய நிலையும் நேரிட்டிருக்காது.

தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தியுள்ளதும், அதை தமிழக அரசு "வழக்கம் போல'க் கண்டித்து எச்சரிக்கை விடுத்திருப்பதும், இதேபோன்ற நாடகமே. இப்போதும் கூடுதல் கட்டணத்துடன் பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டு பல தனியார் பேருந்துகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாகவே இயங்கிக்கொண்டு தான் உள்ளன.

சட்டத்தையும் அரசு உத்தரவுகளையும் நிறைவேற்றும் அமைப்புகளின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, அதிரடி உத்தரவுகளை வாயளவில் வெளியிடுவதால் யாருக்கும் எப்பயனும் விளையாது; அரசின் மரியாதை குறையவும் நிர்வாகம் குலையவுமே அவை வழிவகுக்கும். அதுவே தமிழகத்தில் நடந்திருக்கிறது.
.
---------------------------------
நன்றி: தினமணி (08.10.2010)
காண்க: தினமணி
.

1 comment:

Shankar said...

No school is asking the parents to retain the children in your schools.
We as a parent prefer those schools whic we belive it has quality.
If we are not sure that the school is not having quality we have the option to shift the student.

we have to understand that If we want quality we have to pay more.

Post a Comment