ஆபத்தான குட்டிக்கரணம்...
கரணம் தப்பினால் மரணம்
''நான் ஒரு இந்தியன்; நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை''- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா பேசிய வைர வரிகள் இவை.
''நான் ஒரு இந்தியன்; நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை''- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா பேசிய வைர வரிகள் இவை.
அது 2008-ம் ஆண்டு; இப்போது நடப்பது 2010-ம் ஆண்டு; இரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை குட்டிக்கரணப் பேச்சால் நிரூபித்திருக்கிறார், அதே உமர்.
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, ""காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவில்லை; நிபந்தனைக்கு உள்பட்ட இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர்ப் பிரச்னை இந்தியா, பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்'' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரான உமர் அப்துல்லா இவ்வாறு பேசியிருப்பதை, கூட்டணிக் கட்சி என்பதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எதிர்பார்த்ததுபோலவே, இதுவரை அப்துல்லா குடும்ப ஆட்சியை எதிர்த்துக் கொடி பிடித்த காஷ்மீரப் பிரிவினைவாத இயக்கங்கள் பலவும், உமர் பேச்சால் ஆனந்தக் கூத்தாடுகின்றன.
பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி, நீண்ட நாள்களாகத் தாங்கள் கூறிவருவதையே முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; காஷ்மீரை இனியும் இந்தியா ஆக்கிரமித்திருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹபூபா சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி, உமர் அப்துல்லாவின் இந்த அதிரடிப் பிரிவினை முழக்கத்தால் குழம்பிப்போயுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா பேசிய அனைத்துமே அபாயகரமானவை. ""வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி மூலமாக காஷ்மீரப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. காஷ்மீரில் நிலவுவது அரசியல் விவகாரம். இதை பேச்சுவார்த்தை வாயிலாகவே தீர்க்க வேண்டும்'' என்று கூறிய அவர், தான் இந்திய அரசின் கைப்பாவை அல்ல என்றும் முழங்கினார்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திரம் மீண்டும் திரும்புவதுபோலத் தெரிகிறது. 1953-ல், இதேபோலத்தான் உமரின் தாத்தாவான அப்போதைய முதல்வர் ஷேக் அப்துல்லா (அந்தக் காலத்தில் ஜம்மு காஷ்மீரின் பிரதமர் என்றே அவர் அழைக்கப்பட்டார்) திடீரென காஷ்மீர் தனிநாடு என்று போர்க்கொடி உயர்த்தினார். உமர் போலல்லாமல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறிதும் தயங்கவில்லை. தனது நெருங்கிய நண்பர் என்றும் பாராமல் ஷேக் அப்துல்லாவின் அரசைக் கலைத்து, அவரைக் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தார்.
அதே ஷேக் அப்துல்லா, நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ல் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஆனார். பதவியில் இருக்கும்போதே உயிர்நீத்தார். அவரையடுத்து, அவரது மகன் பரூக் அப்துல்லா மூன்றுமுறை (1982-84, 86-90, 96-2002) முதல்வராக இருந்து, இப்போது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 2009-ல் வாரிசு அடிப்படையில் முதல்வரான உமர் அப்துல்லா, தாத்தாவின் பழைய பாதைக்கே திடீரென்று திரும்பி இருக்கிறார்.
கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீரில் நிலவிவரும் கலவரச்சூழல், முதல்வர் உமர் அப்துல்லாவின் செல்வாக்கைக் குறைத்துவிட்டது. அவரது பதவிக்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து தப்பவே, நெருப்புடன் விளையாடுகிறார் உமர் அப்துல்லா என்று, பாஜக.வும்,காஷ்மீர சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்து காஷ்மீர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.
உமர் அப்துல்லா இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் (2001-02), மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்; இந்தியக் குடிமகன் என்று உளமாற உறுதிகூறி பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார். இப்போதும்கூட, நாட்டின் இறையாண்மையைக் காப்பதாக உறுதி கூறியே முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, பிரிவினைவாதக் கருத்துகளை சட்டப்பேரவையிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் உமர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்ற கணக்காக, பொறுப்பின்றி வேடிக்கை பார்க்கிறது. அன்று நேரு அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க விடாமல் இப்போதைய மத்திய அரசைத் தடுப்பது எது?
பொறுப்பற்ற ஆட்சியால் மாநிலத்தில் அமைதியின்மைக்கு காரணமாக இருந்துவிட்டு, மாநிலத்தை எரிமலையின் கொள்ளிவாய்க்குள் தள்ளிவிட்டு, பதவியைக் காப்பதற்காக புரட்சிநாயகராக புதுஅவதாரம் எடுத்திருக்கும் உமர் அப்துல்லாவை அம்மாநில மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்கள். மத்திய அரசு மட்டுமே அவரை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது.
யோகாசன குரு ராம்தேவ், உமரின் பிரிவினைப் பேச்சைக் கண்டித்ததுடன், யோகாசனம் மூலமாக இப்போதைய நெருக்கடியான மனஅமைதியற்ற குழப்ப நிலைக்குத் தீர்வு காணுமாறு உமர் அப்துல்லாவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த விஷச்செடியை வளரவிட்டால், எதிர்காலத்தில் மன்மோகன் சிங்கும் அமைதிக்காக யோகாசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
--------------------------------------------------------
நன்றி: தினமணி (18.10.2010)
.
No comments:
Post a Comment