Saturday, October 2, 2010

மரபுக் கவிதை - 109




சர்வ மத சமரசம்





ஆல்நிழல் தனிலே அமைதியின் உருவாய்
ஞானம் கூறிடும் மோனத்திருவே!
வேலினை அணிந்து சூரனை அழித்த
தேவர்கள் சேனாபதியே முருகா!


ஆழ்கடல் தனிலே நித்திரைகொள்ளும்
புன்னகை தவழும் புருஷோத்தமனே!
வேழமுகத்தால் வேதனை தீர்க்கும்
பாரதம் எழுதிய வேலனின் முன்னே!


மகிஷனை அழிக்க மறஅணி தரித்து
சிம்மம் ஏறிய சிவனது துணையே!
தகித்திடும் தணலால் உலகினைக் காக்கும்
ஜொலித்திடும் கதிரே, சூரியதேவா!

அன்பினைப் பரப்பி அஹிம்சையைக் காத்து
ஆசையை வெறுத்த அச்சுத புத்தா!
நன்மணி மூன்றை நானிலம் ஏற்க
நயம்பட உரைத்த நாயக, அருகா!

பேதமை ஓட்டிட சீக்கியர் வணங்கும்
நேரிய சத்ஸ்ரீ அகாலி இறைவா!
யூதர்கள் மனதில் உறுதியை ஊட்டி
பேரருள் புரியும் ஜெகோவ தேவா!

பகைவரிடமும் அன்பினைக் காட்டி
சிலுவையில் ஏறிய சீர்மிகு ஈசா!
குகையென இருண்ட மனத்திருள் நீக்கி
குலத்தினைக் காத்த நபியின் இறையே!


எனப் பலவாறு வணங்கிட்டாலும்
எல்லாம் ஒன்றே! ஏன் அதிபேதம்?
மனத்துறு மதியே, மதவெறி தவறு!
உடலுறை ஆன்மா- உயிரே கடவுள்!


அனைவரும் அவரவர் விரும்பியவாறு
வணங்கிடுகின்ற வரமே, வளமே!
அனைவரின் மதமும் மனிதனை உயர்த்த
பேதமகற்றிப் பேரருள் புரிக!
.
இன்று மகாத்மா காந்தி பிறந்த தினம்.
.

No comments:

Post a Comment