மகத்தானவர்களுக்கு
மாபெரும் வந்தனம்!
வந்தனம்! பெரும் வந்தனம்!
வானைக் கிழிக்கும் கோபுரம் கொண்ட
கோயில் அமைத்த சிற்பிகளின்
வித்தக விரல்களுக்கு வந்தனம்!
கல்லில் சிற்பிகள் காவியம் எழுத
உளிகளைத் தந்த கொல்லர்களுக்கும்
பதுமைகள் தந்த தச்சர்களுக்கும்
அடவு காட்டிய அடியார்களுக்கும் வந்தனம்!
கருமலையில் கல்லுடைத்த
சாளுக்கிய அடிமைகளுக்கும்
பல காத தூரம் தோளில் சுமந்து
கற்களைத் தந்த மல்லர்களுக்கும் வந்தனம்!
கோயில் கட்ட நிலத்தை மேவிய
ஏர் உழவர்களுக்கும் மாடுகளுக்கும்
தடங்கலின்றி அனைவர்க்கும் உணவளித்த
சமையல்காரர்களுக்கும் வந்தனம்!
உழைப்பின் களைப்பு தெரியாவண்ணம்
செவ்விளநீரும் கள்ளும் வழங்கிய
பனையேறி மக்களுக்கும்
தாகம் தீர்த்த பெண்களுக்கும் வந்தனம்!
கோயில் பணியைக் கண்காணித்த
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
சிற்பிகள் களைப்பைப் போக்கிய
குடும்பத்தினருக்கும் வந்தனம்!
சிற்பத் தொழிலில் பட்ட காயம்
விரைவில் ஆற மருந்துகளிட்ட
வைத்தியர்களுக்கும் சேடிகளுக்கும்
மூலிகை தந்த குறவர்களுக்கும் வந்தனம்!
உருவம் முனைந்த குயவர்களுக்கும்
உதவிகள் செய்த தொழிலாளருக்கும்
உடைகள் வெளுத்த வண்ணாருக்கும்
சாரம் கட்டிய வீரர்களுக்கும் வந்தனம்!
காவல் காத்த மறவர்களுக்கும்
பண்ணிசை பாடிய பாணர்களுக்கும்
சிகைகள் மழித்த நாவிதருக்கும்
இறைச்சியான ஆடுகளுக்கும் வந்தனம்!
கல்தூண்களை அடுக்க உதவிய
யானைகளுக்கும் குதிரைகளுக்கும்
பாலைப் பொழிந்த பசுக்களுக்கும்
பந்தம் பிடித்த சிறுவர்களுக்கும் வந்தனம்!
கோயிலுக்காக குழிகளைத் தோண்டிய
தோள்வலி கொண்ட தோழர்களுக்கும்
செருப்புகள் தந்த திருக்குலத்தார்க்கும்
கூலி வழங்கிய கணக்கர்களுக்கும் வந்தனம்!
நல்ல நாழிகை கணக்கிட்டுரைத்த
வள்ளுவருக்கும் சோதிடருக்கும்
கல்லில் எழுதிய வாணர்களுக்கும்
மரங்கள் தந்த காடுகளுக்கும் வந்தனம்!
தினமும் இறையை வேதம் ஓதி
பக்திப்பெருக்குடன் பூசனை செய்த
அந்தணருக்கும் விடுபட்டோர்க்கும்
பூக்கள் தொடுத்த சிறுமியருக்கும் வந்தனம்!
தஞ்சைத் தரணியில் மாபெரும் கோயில்
அமைக்கும் கனவுடன் ஈசனை வணங்கி
நாட்டு மக்களை தொண்டர்களாக்கிய
ராசராசனுக்கு மாபெரும் வந்தனம்!
மன்னன் மனதில் கருவாய் நின்று
மாபெரும் ஆலயம் அமைக்கச் செய்த
உலகை ஆளும் பெருவுடையாருக்கு
வந்தனம்! வந்தனம்! மாபெரும் வந்தனம்!
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2010
******
No comments:
Post a Comment