.
.
தீபாவளி - 1
**
இன்னும் எட்டு நாள் இருக்கிறது
கொண்டாட்டங்களுக்கு.
அதுவரை குறைவில்லை
இல்லத் தலைவர்களின்
திண்டாட்டங்களுக்கு.
என்னதான் வரவுக்கும் செலவுக்கும்
சண்டையிட்டுக் களைத்தாலும்
நடுத்தரவர்க்கத்திற்கு
வேப்பம்பூ சர்க்கரைதான் பண்டிகைகள்.
என்னதான் அலுத்துக் கொண்டாலும்,
குழந்தைகளை குதூகலிக்கச் செய்ய
கடன் வாங்கும் ஆனந்தம்
வேறெதிலும் கிடையாது.
என்னதான் கொள்ளைலாபம் வைத்தாலும்
ஜவுளிக்கடை படியேறாமல்
துணிக்கடலில் முத்தெடுக்காமல்
பண்டிகைகள் இனிப்பதில்லை.
என்னதான் கஷ்டமென்றாலும்
அதிகாலை வேளையில் கோயில் செல்லாமல்
நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் தவம் செய்யாமல்
பலகாரங்களால் அஜீரணம் ஆகாமல்
பண்டிகைகள் தீர்வதில்லை.
.
அன்றாட இயந்திர வாழ்வில் உழலும்
மனிதனுக்கு உயவுப்பொருளாய்
உதவும் பொருள் பண்டிகைதான்.
என்னதான் கயிறு கீழே இழுத்தாலும்
காற்றை சாடித்தானே
விண்ணில் பறக்கிறது பட்டம்?
.
பட்டங்களை எல்லா நாளும்
பறக்கவிட முடியாது
பட்டத்தின் துடிப்பு வாலில்.
மனிதனுக்கு வாழ்வின் தேடலில்.
பண்டிகைகள் தருவது
அதற்கான வாய்ப்புக்களை.
.
1 comment:
/////பட்டங்களை எல்லா நாளும்
பறக்கவிட முடியாது
பட்டத்தின் துடிப்பு வாலில்.
மனிதனுக்கு வாழ்வின் தேடலில்.
///////////
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . அருமை வாழ்த்துக்கள் .
Post a Comment