Sunday, February 28, 2010

இன்றைய சிந்தனை

குறள் அமுதம்

ஊழிற் பெருவழி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
-திருவள்ளுவர்
(ஊழ் - 380)

உருவக கவிதை - 34


முட்டுச்சந்து

கால் போன போக்கில்
நடந்தாலும் சிலநேரம்
வீடு வந்துவிடுகிறது.
தெளிவான முகவரியுடன்
தேடினாலும் சிலநேரம்
முட்டுச்சந்துகளில்
தத்தளிக்க வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே சிலநேரம்
காதை விறைக்கும்
தெருநாய்கள்.
சாலைகளின் அலைகடலில்
பாய்மரம் கிழிகிறது.
துடுப்பு வலித்து
துவண்டுபோகிறது
வாழ்க்கை.
கால் போன போக்கில்
கடந்துபோகிறது -
செல்லவேண்டிய
இலக்கு.
.

Saturday, February 27, 2010

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருவள்ளுவர்
(வினைத்திட்பம் - 666)

மரபுக் கவிதை - 76


வற்றி விடுமோ?

இன்னூற்று வற்றிவிடுமோ? இந்த
இதயத்தில் பீறிடு நல்
இனிமை மிகு கவிதைகளின்
இன்னூற்று வற்றிவிடுமோ?

மண்நீட்ட மனிதரோ நான்? இந்த
மண்ணகத்து மனிதரிடை
மணியான எம் புலமை
மண்ணுள்ளே மடியுமாமோ? அன்றி
தன்னோக்கு வடிவு தாமோ? இந்தத்
தடைகளைத் தகர்த்தெறியத்
தயங்காத மொழிக்கோவைத்
தன்மையின் தரகு தாமோ?

விண்ணாக்க விதிகள் தாமோ? இந்த
விந்தைக்கும் விந்தை மிகு
வியப்பான சொல்லமுத
விண்ணூற்று விளைவு தாமோ? எனின்
நன்னூற்றுப் புலவர் தாமே - இந்த
நயமிக்க கேள்விகளின்
நலமான பதில்கள் சொலி
நன்னூக்கம் நல்குவீரே!
.

Friday, February 26, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

...நமது தேசத்திலிருந்து தான்யம் ஏற்றுமதியாவதை நிறுத்திவிட வேண்டும். ஸாதாரண வருஷத்துக்கேசோற்றுக்குத் தட்டுகிறது. சாதாரண வருஷத்தில் அரைப் பட்டினி; கொஞ்சம் வறட்சி நேர்ந்தால் அதோ கதி!
தான்யத்தை நம்நாட்டில் மிச்சம் வைத்திருந்தால் பஞ்சக் காலத்துக்குப் பயன்படும். ஜனங்களின் வறுமை மிகப் பரிதாபமானது. கவர்மெண்டார் விவசாயிகளின் நிலைமையைப் பற்றி சம்பூர்ணமானகணக்குகளை வெளியிடக் கூசுகிறார்கள்...
-மகாகவி பாரதி
-பாரத ஜன சபை-யில்
(காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் - பக்: 340)

புதுக்கவிதை - 77


நெருப்பு

வெளிநாட்டுப் பயணங்களில்
பிரதமர்...
கலையுலக பாராட்டு விழாக்களில்
முதல்வர்...
அரசியல் லாவணிகளில்
கட்சிகள்...
விண்ணைத் தொடும்
விலைவாசி உயர்வால்
அடிவயிற்றில் நெருப்புடன்
மக்கள்.
.

Thursday, February 25, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிறர் உள்ளத்தைக் கவரும் முறையில் உடைக்கோலஞ் செய்யும் பெண்மணிகள் நிலை குறித்து இரங்குகிறேன். தூய மனமுடைய ஆண்மக்கள் நெஞ்சையும் உடைக்கக் கூடிய வேடிக்கை உடைகளைச் சில பெண்மக்கள் அணிகிறார்கள். இப்பழக்கம் நிறுத்தப்படல் வேண்டும்... பிறர் மனத்தைக் கவரத் தக்க உடை அணிதல் பாவம்; பாவம். அக்கவரல் பின்னைத் தன்னைப் பல வழியிலும் கெடுக்கும் என்பதைப் பெண்மக்கள் உணர்வாளாக
-திரு.வி.க.
(பெண்ணின் பெருமை - பக்:104)

.

உருவக கவிதை - 33


நீரூற்றுப் பேனா

பாவாடை, தாவணி போல
வழக்கொழிந்துவிட்டது
நீரூற்றுப் பேனா.
எங்கு பார்க்கினும்
சுடிதார் போல
பந்துமுனைப் பேனாக்கள்.

கையை மையாக்கும்,
அடிக்கடி முனை உடையும்
சிக்கல் இல்லை எனினும்,
எழுத்தின் அழகுக்கு
நீரூற்றுப் பேனாவே உத்தமம்.

தேர்வுகளிலும் கட்டாயமாகிவிட்டது,
கல்லூரிகளில் இயல்பாகிவிட்ட
பந்துமுனைப் பேனா.
எனினும் ஒருகாலத்தில்
தடை விதிக்கப்பட்டிருந்த
குப்பை தானே இது?

.