Wednesday, April 7, 2010

மரபுக் கவிதை - 92


புத்தாண்டை நோக்கி... 7

சித்திரை வருகுது!

சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது...
சக்தி பெருகிட, சாதனை வளர்ந்திட,
பக்தி பரவிட, பண்புகள் ஓங்கிட,
யுக்தி சிறந்திட, யுவக்களை பரவிட,
வக்கிரம் அழிந்திட, வல்லமை வென்றிட,
சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது.
***
பிரமனின் தூதென புதியது வருகுது...
கரமது குவித்திடு - கடவுளை வேண்டிட!
எப்பொழுதும் பகை எதிரினில் சிதறிட,
இப்பொழுதை விட மேன்மைகள் ஓங்கிட,
வான்மழை வைத்திட, வாய்மை வளர்ந்திட,
ஈன்றவர் மகிழ்ந்திட- இளைஞர்கள் உயர்ந்திட,
நட்பு பெருகிட- நன்மைகள் நாடிட,
லட்சியம் உயர்ந்திட , நாடு சிறந்திட,
கரமது குவித்திடு! கடவுளை வேண்டிடு!
பிரமனின் தூதென புதியது வருகுது!
(நாள்: 14.04.1990)

Tuesday, April 6, 2010

மரபுக் கவிதை - 91


புத்தாண்டை நோக்கி... 8

சுக்கில வருஷ!

மடை திறக்க, வெள்ளம் வர, மாரியெனப் பொழிந்திடு நீ!
படை சிறக்க, பண்புடனே, பவனியென வந்திடு நீ!
தடை இறக்க, தன்மானத் தெளிவுடனே எழுந்திடு நீ!
சடை பறக்க ஆடுகிற சக்திபதி காத்திடவே!

இடையினிலே வந்திட்ட இழிப்பெயரைப் போக்கிடு நீ!
விடை கொடுத்த 'விபவ'வுடை வீதியிலே நடையிடு நீ!
நடை பயிலும் தீமைகளை விடை கொடுத்து விரட்டிடு நீ!
குடைஎனவே கிரிபிடித்த குழலரசன் காத்திடவே!

கொடை சிறக்க, கோ உயர, கோயிலென வெளிப்படு நீ!
உடைப்பெடுத்த ஒற்றுமையை ஒன்றாக இணைத்திடு நீ!
முடை குறைத்து, முழுமை பெற முனைப்புடனே செயல்படு நீ!
கடைக் கண்ணால் எரித்திடும் நங்காளியவள் காத்திடவே!

(நாள்: 14.04.1989)

Monday, April 5, 2010

மரபுக் கவிதை - 90


புத்தாண்டை நோக்கி... 9

விபவ வாழ்க!

'விபவ' பிறந்தது - விளைந்தன நன்மைகள்.
மழை பொழிந்தது- மண்ணும குளிர்ந்தது.
கலைகள் சிறக்கும்- கயமைகள் ஒழிந்திடும்.
திருமகள் அருளால் திளைத்திடுவோம் நாம்.
நயம் மிக்க 'விபவ'வின் நன்மைகள் ஓங்கிட
பாரதத் தாயைப் பணிந்து வணங்குவோம்!
(நாள்: 22.04.1988)

Sunday, April 4, 2010

வசன கவிதை - 53


புத்தாண்டை நோக்கி...10

அவலச்சுமை

இன்னும்
104 நாட்கள் இருக்கிறது*
புத்தாண்டு பிறக்க.

ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.

அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?

காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?

கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?

இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.

இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.

அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.

யினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.

பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.

வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது -
60 வருடப்
பஞ்சாங்கம்.

அதனைக் கொஞ்சம்
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்.

இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!

(நாள்: 17.12.03)
நன்றி: விஜயபாரதம் (26.12.2003)
*குறிப்பு: ஜனவரியில் துவங்கும் ஆங்கிலப் புத்தாண்டைக் கண்டித்து (104 நாட்களுக்கு முன் பிரசுரம் ஆகும் வகையில் எழுதிய கவிதை இது.
.

Saturday, April 3, 2010

புதுக்கவிதை - 87


அணில்


இடிக்கும் இயந்திரம்
வந்தவுடன்
பக்தர்கள் மாயம்.
சாலையோர சிசுவாய்
மாறிவிட்டது
அரச மரத்தடி
பிள்ளையார் கோயில்.
வெட்டப்பட்ட கிளையை
சுற்றி வருகிறது
அணில்.

.

Friday, April 2, 2010

புதுக்கவிதை - 86


ஈன்ற வலி

தொலைதூர தேசத்தில்
பெற்ற மகன்.
முதியோர் இல்லத்தில்
பெற்ற வயிறு.
ஈன்ற பொழுதினும்
வலி வேறெது?
.

Thursday, April 1, 2010

புதுக்கவிதை - 85


குரோமசோம்


'உங்களுக்கு
ஒன்றும் தெரியாது'
சொல்கிறாள் மகள்.
எப்போதோ
என் தந்தையிடம்
நான் சொன்ன
அதே ஏற்ற இறக்கத்துடன்
சொல்கிறாள்
மகள்.
.

ஏதேதோ எண்ணங்கள்



அன்புள்ள நண்பர்களுக்கு...

இன்றுடன், குழலும் யாழும் வலைப்பூ துவங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இது வரையிலும் தினசரி கவிதைகளுடன் 'இன்றைய சிந்தனை' இடம் பெற்று வந்தது. இனி வரும் நாட்களில், இன்றைய சிந்தனைக்கு பதிலாக 'சிந்தனைக்கு' பகுதி, தேவையான இடங்களில் மட்டும் இடம் பெறும்.
உங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் என் கவிதைக்கு வலுவூட்டும்.
நன்றி.
-வ.மு.முரளி.