Tuesday, May 31, 2011

உருவக கவிதை - 66





ஏக தேசம்




ஏகதேசமாய்
இது 'ஏக' தேசம் தான்


எல்லையில் அத்துமீறப்பட்டாலும்
கொல்லையில் தாக்கப்பட்டாலும்
அல்லையில் அரிக்கப்பட்டாலும்
எல்லைக்கோடுகள் பறிபோகாத
வரைபடங்களில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


மொழிவேற்றுமையால் கூறுபட்டாலும்
மதங்களுக்குள் மாறுபட்டாலும்
உணவும் உடையும் வேறுபட்டாலும்
ஜாதி அரசியலில் சாதித்துக்
காட்டுவதில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


சோற்றுக்கு வழியற்ற கபோதிகளும்
பணத்தில் மிதக்கும் பரிதாபிகளும்
நடுத்தர வர்க்க நாதாரிகளும்
திரையுலக மாயையில்
உழல்வதில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


கட்சிகள் பலவாய்ப் பிரிந்திருந்தாலும்
சித்தாந்தங்கள் பல இருந்தாலும்
மேடைகள், அணிகள் மாறி வந்தாலும்
குற்றவாளிகளின் கூடாரமான
அரசியலில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


ஏறுக்கு மாறாக இருக்கும் சூழலிலும்
எங்கும் காணாத இனப்பூசல் இருப்பினும்
வர்க்க வேற்றுமை வாதிக்கும் போதிலும்
மக்களை கழுத்தறுக்கும்
ஊழலில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


அநேக காரணங்கள் இருந்தாலும்
ஏகமாய் ஏற்கலாம்-
அநேக நாடுகளில்
நம்மைப்போல 'ஏக' தேசம்
யாருண்டு உலகில்?
இது ஏக தேசமே தான்-
இது ஏகதேசமல்ல.


.

.

No comments:

Post a Comment