பாஜகவுக்கு படிப்பினையான பேரவைத் தேர்தல்கள்
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், தேசிய அளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இந்நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக இத்தேர்தலில் பெற்றுள்ள தோல்வி குறித்த ஆய்வு அத்தியாவசியமானதாகும்.
அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜமானதே. எனினும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறும் அரசியல் கட்சியே எதிர்காலத்தில் வெற்றிகளை அறுவடை செய்ய முடியும். அண்மைய தேர்தலில் பாஜக.வின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு, அக்கட்சிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலுக்கும் முக்கியமானதாகும்.
பல ஆண்டுகளாக போராடித்தான் பாஜக தற்போதைய நிலையை அடைந்துள்ளது. 1984ல் இரு எம்பி.க்களுடன் இருந்த அக்கட்சி, தனது கடுமையான முயற்சியால் நாட்டின் ஆளும்கட்சியாக 1998ல் உயர்ந்தது. ஆனால், தனது வெற்றியைத் தக்கவைக்கத் தெரியாததால் அக்கட்சி ஆட்சியை இழந்தது.
இப்போதும் நாட்டின் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது; மேலும் இரு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது; மூன்று மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், பாஜக.வின் வலிமை இம்மாநிலங்களைத் தாண்டி வளரவில்லை; இதன் காரணமாகவே மத்தியில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது.
நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் வட மாநிலங்களில் காலூன்றிய அளவுக்கு பாஜக.வால் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தடம் பதிக்க முடியாததே அக்கட்சியின் பலவீனமாக உள்ளது. நாடு முழுவதும் பரவலாக உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவை இந்த அம்சத்தில் ஒப்பிடவே முடியாது.
அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் பாஜகவுக்கு உள்ள நடைமுறைச் சிக்கலே காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயமாக மாறி வருகிறது. அண்மைய பேரவைத் தேர்தல்களும் இதையே சுட்டிக் காட்டுகின்றன.
இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில்தான் ஐந்து மாநில பேரவைத் தேர்தலில் பாஜக களமிறங்கியது. தேர்தல் நடந்த தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் இதற்கு முன்பும் பாஜக மாபெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. அசாமில் மட்டுமே இம்முறை சிறிது நம்பிக்கை அக்கட்சிக்கு இருந்தது. பிற மாநிலங்களைப் பொருத்த மட்டிலும், பாஜக தனது இருப்பை வெளிப்படுத்தவே தேர்தலைக் கருவியாகப் பயன்படுத்தியது.
தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்பட்டது. அதை தனக்கு சாதகமாகத் திருப்புவதற்கான ஆற்றல் இல்லாமல் பார்வையாளராக இருக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்தது. அதன் இந்துத்துவ ஆதரவுப் போக்கு காரணமாக தோழமை வாய்ப்புள்ள கட்சிகளும் மிரண்டு பின்வாங்கின.
அசாமில் காங்கிரஸின் எதிரிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால் அங்கு தருண் கோகோய் மீண்டும் முதல்வராகி இருக்க முடியாது. பாஜகவின் தனிப்பட்ட கொள்கைகளும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் தலைமை இல்லாததும் அங்கு கூட்டணியின் சாத்தியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தன. அதன் விளைவாக காங்கிரஸ் தனது வெற்றியை இப்போது கொண்டாடுகிறது.
அசாமில் 23 தொகுதிகளில் பாஜக இரண்டாமிடம் பிடித்து, குறைந்த வித்யாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. அசாம் கண பரிஷத், அசாம் மாணவர் கூட்டமைப்பு கட்சிகளும் இதேநிலையை பல தொகுதிகளில் அடைந்துள்ளன. இக்கட்சிகள் இணைந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். இம்மாநிலத்தில் கூட்டணி அமையாததற்கு பாஜகவின் பிடிவாதமும் ஒரு காரணம்.
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்த மக்கள் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரûஸத் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டில் திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் வெகுண்ட மக்கள் அதற்கு மாற்றாக ஜெயலலிதாவின் அதிமுகவைத் தேர்வு செய்தனர். இந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்புலத்தில் மமதா, ஜெயலலிதா ஆகியோரின் தொடர் போராட்டங்கள் உள்ளதை மறுக்க முடியாது.
பேரவைத் தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்னதாக புதிய அரசியல் கட்சியைத் துவங்கிய ரங்கசாமிகூட பாண்டிச்சேரியில் மகுடம் சூடி இருக்கிறார். அவரது அயராத உழைப்புக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் அது. இத்தகைய நம்பகத்தன்மையும் தலைமையும் வாய்ந்த தலைவர்கள் இம்மாநிலங்களில் அமையாதது பாஜகவின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் எனில் மிகையில்லை.
கேரளாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சியை மாற்றுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அங்கு இடதுசாரிகள்- காங்கிரஸ் என்று இரு துருவமாக உள்ள அரசியல் சூழலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தவிர சிறுபான்மையினரின் ஆதிக்கம் மிகுந்த அம்மாநிலத்தில் பாஜக இன்னும் கிணற்றுத் தவளையாகவே உள்ளது; மூன்று தொகுதிகளில் மட்டும் குறைந்த வித்யாசத்தில் வெற்றியை இழந்த பாஜக, இம்மாநிலத்தில் பயணிக்க வேண்டிய தூரம் பல மடங்காக இருக்கிறது.
எந்த ஒரு கட்சியும் மக்களிடம் நம்பகத்தன்மையைப் பெற வேண்டுமானால், அதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராடாமல் எந்தக் கட்சியும் முன்னேற முடியாது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் தலைமைகளே சான்று. குஜராத்தும் கர்நாடகாவும், மத்தியபிரதேசமும் பாஜக வசமாக, அம்மாநிலங்களில் அக்கட்சி நடத்திய மக்கள்நலப் போராட்டங்களே காரணம்.
அந்த வெற்றிகளை உதாரணமாகக் காட்டி, பிற மாநிலங்களில் வெற்றியை ஈட்ட முடியாது. தேசிய அளவிலான கொள்கைகளை முழங்குவதால் பிராந்திய வேறுபாடுகள் மிகுந்த நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள பிரத்யேகத் தேவைகளை அனுசரித்து அதற்கேற்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, பாஜக.வால் தனது தளத்தை விரிவுபடுத்த இயலும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு சரியான மாற்றாக பாஜக.வால் உயர முடியும்.
இல்லாவிட்டால், "மதவாதக் கட்சி' என்ற ஒற்றைக் குற்றச்சாட்டாலேயே பாஜக.வை புறந்தள்ளும் சாதுரியத்துடன், தொடர் தவறுகளை செய்தபடியே காங்கிரஸ் ஆட்சியில் தொடரும். இந்நிலை நாட்டிற்கு நல்லதல்ல.
ஐந்து மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகள், தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதும், தன்னைத் திருத்திக் கொள்வதும் பாஜக.வின் கடமை. தேசிய அளவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்துவரும் நிலையில், பாஜக தன்னைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் தொடர் தவறுகளால் திணறும் காங்கிரûஸ மிரட்டவோ, வழிப்படுத்தவோ பாஜக.வால் முடியும். .
No comments:
Post a Comment